சினிமாக்காரர்களின் ஆட்டம் பாட்டம் முன்னோட்டமெல்லாம் முதல் ஆட்டம் (1st show) ரசிகன் காணும் வரை.திரை வரை வரும் வரை ஒரு எதிர்ப்பார்ப்பை ஏற்ப்படுத்துவது கட்டாயமாகிறது இன்று! அப்படித்தான் வித்தகன் விளம்பரமும் மும்முரமாய். மற்றபடி வித்தகன் மிக பெரிய பட்ஜெட்டிலோ, பால்வீதி (galaxy- the milky way) போன்ற நட்சத்திர அணிவகுப்பிலோ, ஒவ்வொரு இந்தியனும் விரும்பி/திரும்பியும் பார்க்க போகிற படமென்றோ எடுக்கப்பட்டதல்...ல! நீஈண்ட இடை---வெளிக்கு பிறகு இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் உழைப்பிலும் திறமையிலும் உருவானப்படம்.அதுவும் கையில் கிடைத்த காகிதத்தில் ஒரு குட்டியூண்டு சுவாரஸ்யமான கதையை எழுதி அதை, நாளாய் எட்டாய் வடிவமாய் மடித்து, முன் பகுதியை தொய்வில்லாத திரைக்கதையால் கூர்மையாக்கி, கைதட்டும் வண்ணத்திற்கு வசனம் தீட்டி,இளைய தலைமுறை வியக்கும் இயக்கத்தை இயந்திரமாய் பொருத்தி விமானமாய் உயிர் கொடுத்து பறக்கவிட போகிறேன். அது உயர உயர பறப்பது உங்கள் வரவேற்பிலும் விசில் சப்தத்திலுமே!