Thread
:
Current Screenings of Nadigar Thilagam Films
View Single Post
06-17-2010, 07:53 AM
#
22
Slonopotam845
Join Date
Jan 2006
Posts
5,251
Senior Member
ராஜபார்ட் ரங்கதுரையை 37 வருடங்களுக்கு முன்பே வரவேற்றிருந்த போதிலும் மீண்டும் அதே ஆரவாரத்துடன் காண நேர்ந்தது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. இந்த முறை ஞாயிறு மாலை அரங்கிற்கு செல்ல நேரம் ஆகிவிட்டதால் வாசலில் நடந்த கோலாகலங்களை பார்க்க முடியவில்லை.
உள்ளே நுழையும் போது காயாத கானகத்தே டி.எம்.எஸ் குரலில் ஒலிக்க ஆரம்பித்தது. உயர்ந்த மனிதனுக்கு வந்ததை விட மிக அதிக கூட்டம் என்பதும் அது போல் அலப்பறையும் அதை விட அதிகம் என்பதும் பார்த்தவுடன் புரிந்து போனது. மேயாத மான் என்ற வரிகளுடன் நடிகர் திலகம் முகம் திரையில் தோன்ற இங்கே ஆவேசம் அணை உடைந்தது. யாரும் பாட்டை கேட்கவோ காட்சியை பார்த்திருக்கவோ முடியாது. அப்படி ஒரு கொண்டாட்டம். அந்நேரம் மேலும் மேலும் ஆட்கள் உள்ளே வர கொண்டாட்டத்தின் அளவு கூடியது. இந்த காட்சியை பார்க்கும் போதே நான் சந்தேகப்பட்டது போல படம் நிறுத்தப்பட்டு போலீசார் உள்ளே நுழைந்தனர். போலீசார் ஒருவர் ரசிகர் ஒருவரை வெளியே கூட்டி செல்ல இன்னொரு போலீஸ் திரைக்கு அருகில் வரை சென்று அங்கே இருந்தவர்களை விரட்டினார். படம் மீண்டும் தொடங்கப்பட்டது. சிறிது நேரம் உள்ளே இருந்தனர் காவல் துறையினர். ஆனால் யார் இருந்தால் என்ன மீண்டும் படம் ஆரம்பித்து நாளை நான் போகாமல் இருப்பேனோ என்று நடிகர் திலகம் நந்தனாராக மாறிப் பாடிய போது மீண்டும் அதிர ஆரம்பித்தது அரங்கம். இந்த காட்சியில் க்ளோஸ்-அப்பில் நடிகர் திலகம் வாயசைக்கும் காட்சி சுமார் இரண்டு நிமிடம் வரும், ஒரே ஷாட்டில் படமாக்கியிருப்பார்கள். கண்ணில் நீர் கட்டி நிற்க அது கன்னத்தில் வழியாமல் அவர் "பாடும்" திறன் இருக்கிறதே அதற்கு விழுந்தது தொடர்ச்சியான அப்ளாஸ்.
தங்கையின் திருமண நிச்சயம், தம்பிக்கு உஷா நந்தினியை பேசி முடிப்பது, ஸ்ரீகாந்த் வந்து கல்யாணம் என்று தெரிந்தவுடன் ஊரை விட்டு ஓடுவது, தங்கை ஜெயா கல்யாணம் என்று காட்சிகள் வேகமாக சென்றன.
அடுத்த மிகப்பெரிய ஆரவாரம் ஒரு வசனக் காட்சிக்கு எழுந்தது. தங்கையின் கல்யாணத்திற்கு வாங்கின பணத்திற்காக நம்பியார் முன் தலை குனிந்து நின்று விட்டு கூடிய சீக்கிரம் தந்து விடுகிறேன் என வெளியேறும் சிவாஜியிடம் பணம் கொடுக்கலைன்னா கம்பி எண்ண வேண்டியிருக்கும் என்று சொல்லும் நம்பியாரிடம் எங்க குடும்பமே கம்பி எண்ணியிருக்கு. ஆனா அது இந்த தேசத்துக்காக என்று நடிகர் திலகம் சொல்லும் இடத்தில் உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்களின் ஆரவாரம் தியேட்டர் கூரையில் எதிரொலித்தது.
மதன மாளிகையில் பாடல் - சொல்லவும் வேண்டுமா? ஹம்மிங் ஆரம்பித்த உடன் எழுந்து விட்டனர் பிள்ளைகள். சுசீலா பல்லவி முடிக்க டி.எம்.எஸ் பல்லவி எடுக்கும் காட்சி. க்ளோஸ்-அப்பில் நடிகர் திலகம் புருவத்தை ஏற்றி கண்களை ஒரு சுழட்டு சுழற்றி பாட ஆரம்பிப்பார். காதை அடைக்கும் கைதட்டல். ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு போஸிற்கும் அதிலும் குறிப்பாக உஷா நந்தினி பாடிக் கொண்டிருக்க சற்றும் அசையாமல் ஆலிவ் கிரீன் சூட்-ல் சிலை போல் நிற்கும் நடிகர் திலகம், அப்படியே ஒரு ஸ்டைல் நடை நடந்து வந்து பச்சை மூக்குத்தி மஞ்சள் நீராடி என்று பாடும் போதெல்லாம் இங்கே உற்சாகம் பெருக்கெடுத்து ஓடியது. பாடல் முடியும் போது ஒரு பெருங்கூட்டமே திரைக்கு முன்னால் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என குழுமி விட்டது. திரைக்கு முன்னால் பூமாரி பொழிந்தனர்.
நாடகக் கொட்டகை தீ வைத்து எரிக்கப்பட மீண்டும் அதே இடத்தில் நடத்திக் காட்டுகிறேன் என்று சவால் விடும் சிவாஜி வி.கே.ஆரிடம் மீண்டும் கொட்டகையை கட்டச் சொல்லுவர். அப்போது வி.கே.ஆர் நம்ம பட்டளாங்கள்ட்ட சொன்னா கொட்டகையை என்ன கோட்டையையே கட்டிடுவாங்க என சொல்லும் போதும் ஆரவாரம். [ஆனால் இதே வசனத்திற்கு 1973-ல் கிடைத்த வரவேற்பே தனி].
நாடக லைசன்ஸ் ரத்து, ரங்கதுரை கலக்டரிடம் அனுமதி வாங்குவது என்று காட்சிகள் போனது. தங்கை அண்ணன் வீட்டிற்கே திரும்பி வர ரங்கதுரையின் நண்பர் மகளுக்கே தங்கை கணவன் மணமகனாக போவது, அந்த திருமணத்திற்கு சிவாஜி செல்லும் காட்சி.
நடிகர் திலகம் இந்தக் காட்சியில் பேசவே மாட்டார். சேரில் அமர்ந்து சசிகுமாரையே பார்த்துக் கொண்டிருப்பார். அந்த பார்வையின் தீட்சண்யம் திரையில் பார்பவர்களுக்கே மனதை துளைக்கும் என்றால் நேருக்கு நேர் அந்த கண்ணை பார்த்த சசிகுமார் எப்படி தவித்திருப்பார் என புரிந்துக் கொள்ளலாம். இதற்கும் பயங்கரமான வரவேற்பு.
காத்திருந்து காத்திருந்த காட்சியும் வந்தது. சின்ன அண்ணனை பார்க்க வேண்டும் என்கிற தங்கை, அதற்காக தம்பியை தேடி வரும் அண்ணன், இவரை யாரென்றே தெரியாது என்று சொல்லும் தம்பி, சூழ்நிலை புரியாமல் அவரை பாட்டு பாடச் சொல்லும் தம்பியின் மாமனார், உள்ளம் தீப்பற்றி எரிய அதை மறைத்துக் கொண்டு டேபிள் டென்னிஸ் bat -ஐயே தாளக்கருவியாக்கி பாடும் ரங்கதுரை. கவியரசருக்கும், மெல்லிசை மன்னருக்கும், டி.எம்.எஸ்சிற்கும் இது அல்வா சாப்பிடுவது போல. நடிகர் திலகம் மட்டும் விட்டுக் கொடுப்பாரா என்ன? பல்லவியில் சோகத்தின் சாறு எடுப்பவர் சரணத்திற்கு நடுவில் வரும் தொகையறாவில் அதை கலப்பார்.
கையில் வைத்து காத்திருந்தால் காலடியில் காத்திருக்கும்
நன்றிமிக்க நாய்கள் உள்ள நாடு
அந்நேரம் அந்த முகபாவம், அதில் தெரியும் சோகம் எப்படி சொல்வது? பார்வையாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ச்சிவசப்பட தொடங்குவர்.
சரணம் சட்டென்று வேகம் பிடிக்கும்.
ராம நாடகத்தில் மூன்று தம்பிகளின் உள்ளம் கண்டேனே
இங்கே உணர்ச்சி வேகம் பலமடங்காகியது.
இரண்டாவது தொகையறா
தங்கை என்னும் இளைய கன்று தாய் வீடு வந்ததென்று
இப்போது ரசிகர்கள் எல்லாம் மறந்து திரையில் ஒன்றி போய் ஆரவாரிக்கிறார்கள். சரணம் ஆரம்பிக்கிறது.
கண்ணில் நீர் பெருக சீதை நின்ற நிலை கண்ணில் தெரிகிறது
அண்ணன் கொண்ட துயர் தம்பி லட்சுமணன் நெஞ்சில் தெரிகிறது.
இந்த வரிகளின் போது ஸ்ரீகாந்த் மாடியில் நிற்க, மாடிப்படிகளில் குமாரி பத்மினி நிற்க அவருக்கு எதிராக நடிகர் திலகம். இடது பக்க முகம் மட்டும் தெரியும்படியான profile இங்கேயும் ஒரே ஷாட்டில் படமாக்கியிருப்பார்கள். ரசிகர்கள் தன்னை மறந்து ஆராவரிக்கிறார்கள்.
அது பாசமன்றோ
இது வேஷமன்றோ
என்று பாடி விட்டு
மாடியில் நிற்கும் ஸ்ரீகாந்தை காண்பிக்க
அவன் ராஜாதி ராஜனுக்கு பிள்ளை அல்லவோ
என்ற வரிகளுக்கு பிறகு காமிரா கீழே இறங்கி வந்து நடிகர் திலகம் முகத்தில் வந்து நிற்க
இந்த ராஜபார்ட் ரங்கதுரை ஏழையல்லவா என்று உச்சரிக்கும் போது அந்த முகத்தில் மின்னி மறையும் சோகமும் வருத்தமும் இயலாமையும் எல்லாவற்றையும் மீறி வரும் அழுகையையும் துண்டை வாயில் வைத்து அடக்கிக் கொண்டு மேற்கொண்டு பாட முடியாமல்
தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்
என்று bat -ஐ வைத்து விட்டு அவர் ஓட்டமும் நடையுமாக செல்ல உணர்ச்சிக் கொந்தளிப்பு என்று சொல்வார்களே அதை அன்று நேரில் பார்த்தோம். அனுபவித்தோம். ஒரு சில நிமிடங்களுக்கு அரங்கம் ஆவேசத்தின் பிடியிலேயே இருந்தது.
ஊருக்கு வந்து தங்கையிடம் பொய் சொல்லி விட்டு ஆனால் மனைவியிடம் உண்மையை மறைக்க முடியாமல் அவன் என்னை அவமானப்படுத்தியிருந்தாக் கூட பரவாயில்லை அலமேல்! ஆனால் யாருனே தெரியாதுன்னு சொல்லிட்டான் என்று குலுங்கும் ரங்கதுரை. உன்னதமான நடிப்பின் உச்சக்கட்டத்தை பார்த்த நிறைந்த மனதுடன் நாங்கள் அரங்கை விட்டு வெளியே வந்தோம்.
ஹாம்லெட்யும் பகத்சிங்கையும் திருப்பூர் குமரனையும் பார்க்க வேண்டும் என்று மனது ஆசைப்பட்டாலும் சூழ்நிலை காரணமாக வந்து விட்டோம். மீண்டும் ஒரு மறக்க முடியாத அனுபவம்.
அன்புடன்
Quote
Slonopotam845
View Public Profile
Find More Posts by Slonopotam845
All times are GMT +1. The time now is
01:12 AM
.