திமுகவின் கோபம்-ராகுலை தவிர்க்கும் விஜய்! திமுக தரப்பிலிருந்து கடும் கோபத்தை சந்திக்க ஆரம்பித்துள்ள நடிகர் விஜய், தமிழகம் வரும் ராகுல் காந்தியை சந்திப்பதைத் தவிர்த்துள்ளார். சமீபத்தில் டெல்லியில் ராகுல் காந்தியை நேரில் சந்தித்துப் பேசினார் விஜய். இதையடுத்து அவர் காங்கிரஸில் சேரப் போவதாகவும், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி அவருக்கு கிடைக்கும் எனவும் பேச்சுக்கள் கிளம்பியது. இதுதொடர்பாக விஜய் நேரடியாக எந்த விளக்கத்தையும் இதுவரை அளிக்கவில்லை. இந் நிலையில் இன்று தமிழகம் வரும் ராகுல் காந்தி, நாளை மறுநாள் கோவை போகிறார். அங்கு நடைபெரும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். அப்போது அவரை விஜய் சந்தித்து கட்சியில் சேரக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் விஜய்யோ, ராகுல் காந்தியை சந்திக்க இயலாத நிலை இருப்பதாக காங்கிரஸ் கட்சிக்குத் தகவல் தந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. விஜய் இந்த திடீர் முடிவை எடுக்கக் காரணம் திமுக தான் என்றும் கூறப்படுகிறது. திமுக தரப்பிலிருந்து விஜய்க்கு ராகுலை சந்திக்க வேண்டாம் என அறிவுரை போனதாக கூறப்படுகிறது. இதனால் திமுகவை பகைத்துக் கொண்டு ராகுல் காந்தியை சந்திக்க விஜய் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால்தான் ராகுல் காந்தியை சந்திக்க முடியாத நிலை இருப்பதாக நழுவியுள்ளார் விஜய் என்றும் கூறப்படுகிறது. விஜய் இப்படி தடாலடியாக பல்டி அடித்துள்ளதால் காங்கிரஸ் தரப்பு பெரும் ஏமாற்றமடைந்துள்ளது. ராகுல் காந்தியின் தமிழக பயணத்திற்கு முக்கிய காரணம், இளைஞர் காங்கிரஸாரை உற்சாகப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டாலும் உண்மையான காரணம், விஜய்யை இந்த சந்திப்பின்போது காங்கிரஸுக்குள் இழுத்து விட வேண்டும் என்பதுதான் என்று கூறப்படுகிறது. ஆனால் விஜய் ராகுல் காந்தியை சந்திக்க இயலாத நிலை இருப்பதாக கூறியுள்ளதால் காங்கிரஸ் தரப்பு பெரும் ஏமாற்றமடைந்துள்ளது. திமுக அல்லது அதிமுக என்ற ஏதாவது ஒரு குதிரையில் மாறி மாறி ஏறிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இப்போது தனிக் குதிரையில் சவாரி போகும் ஆசை வந்து விட்டது. இதனால் தேமுதிகவை தன் பக்கம் இழுக்க அது தீவிரமாக முயன்று வருகிறது. காங்கிரஸ் வந்தால் பார்க்கலாம் என்று முதல் முறையாக சமீபத்தில் விஜயகாந்த் கூட்டணிக்குத் தயார் என்பதை மறைமுகமாக கூறியிருந்தார். இந்த நிலையில் விஜய்யையும் இழுத்து விட்டால் கட்சி பலம் பல மடங்கு கூடி விடும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது காங்கிரஸ் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த், விஜய் இருந்தால் அடுத்த சட்டசபைத் தேர்தலை தனியாக கூட சந்திக்கலாம் என்ற துணிச்சலான எண்ணத்தில் உள்ளது காங்கிரஸ். இதற்காகவே கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ராகுல் காந்தி முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அரசியல் சாணக்கியத்தனத்தில் பெரும் பெயர் பெற்ற திமுக இதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை ஏற்கனவே திட்டமிட்டு விட்டதாக பேச்சு உள்ளது. அவ்வளவு சீக்கிரம், காங்கிரஸ் கட்சிக்கு தனக்கு சவாலாக மாறுவதை திமுக அனுமதிக்காது என்றும் கூறப்படுகிறது. தற்போது விஜய்யை காங்கிரஸ் கட்சி குறி வைக்க ஆரம்பித்திருப்பதால், அதைத் தடுக்கும் வகையில் விஜய்யை நோக்கி சில காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளதாம் திமுக. 2 வாரங்களுக்கு முன்பு விஜய்க்குச் சொந்தமான கல்யாண மண்டபத்திற்கு காவல்துறையிடமிருந்து ஒரு நோட்டீஸ் போனதாம். அதில், மண்டபத்திற்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள பந்தல் போக்குவரத்துக்கு நெருக்கடியாக இருப்பதால் அதை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்ததாம். இதைத் தொடர்ந்து திமுகவுக்கு மிகவும் நெருக்கமான ஒரு தயாரிப்பாளர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனை சந்தித்து விஜய் காங்கிரஸுடன் தொடர்ந்து நெருக்கம் பாராட்டினால், அவருடைய படங்களைத் திரையிட எதிர்காலத்தில் தியேட்டரே கிடைக்காத நிலை உருவாகலாம் என எச்சரித்து விட்டு வந்ததாக ஒரு தகவல் கூறுகிறது. தற்போது விஜய்யின் எதிர்காலம் அவர் நடித்து வரும் வேட்டைக்காரன் படத்தில்தான் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு அவர் நடித்த 3 படங்களும் அடுத்தடுத்து பெரும் அடியை வாங்கின. இதனால் வேட்டைக்காரனை பெரிதும் நம்பியுள்ளார் விஜய். வேட்டைக்காரன் படத்தை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி வைத்துள்ளது. இந்தப் படம வெளியாகும் நேரத்தில் திமுகவின் கோபத்திற்கு ஆளாவது நல்லதல்ல என்பதை புரிந்து கொண்டுள்ள விஜய் இப்போதைக்கு பின்வாங்குவது என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து விஜய்க்கு நெருக்கமான ஒரு இயக்குநர் கூறுகையில், ராகுல் காந்தியுடன் கை கோர்ப்பது என்ற விஜய் முடிவு இப்போதைக்கு தள்ளிப் போயுள்ளது. மற்றபடி கைவிடப்படவில்லை என்கிறார். இப்படி விஜய்க்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை காங்கிரஸ் கட்சியும் புரிந்து கொண்டுள்ளது. அதை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடிவு செய்துள்ளதாம். விஜய் வேட்டையாடுவாரா அல்லது வேட்டையாடப்படுவாரா? விரைவில் அரசியல் திரையில் காணலாம்...! http://thatstamil.oneindia.in/movies...ing-rahul.html