View Single Post
Old 04-30-2012, 04:14 PM   #4
Fegasderty

Join Date
Mar 2008
Posts
5,023
Senior Member
Default
குடும்பமா? குழப்பமா?




கூட்டுக் குடும்பம் என்னும் அழகிய ஆலமரம்
பட்டுப்போய் விழுகின்ற அவலம் கண்டீர்!
“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்று
கூவினாலும் காதில் விழுவதே இல்லை!

ஒருவர் ஊதியத்தில் வாழ இயலாமல்,
இருவரும் செல்வர் வெளியே பணி புரிய.
பூட்டிய கதவுகளால் வரவேற்கப்படும் சிறார்,
மாட்டிக் கொள்ளுவர் கெட்ட பழக்கங்களில்.

என்ன செய்தாலும் தெரியப் போவதும் இல்லை;
என்ன என்று கேட்க யாருக்கும் நேரமும் இல்லை;
தானே தனிக்காட்டு ராஜா என்று இருப்பதனால்,
தன் மனம் போனபடி எல்லாம் நடக்கலாமே!

கணவன் மனைவியர் இடையே தோன்றும்
பிணக்குகள், சில பல சிறு பிரச்சனைகள்.
பெரிவர்கள் இருந்தால் பாங்காய் பேசி,
சரி செய்து விடுவார்கள் பிரச்சனைகளை.

வளர்ந்து வரும் விவாஹரத்துக்கள் வரை,
வளர விடமாட்டார்கள் சிறு விவகாரங்களை.
வளரும் குழந்தைகளை மிகவும் நோகடிப்பது,
தளரும் தன் தாய் தந்தையரின் உறவல்லவா?

தன் வீடும், கூடும் காலியாகி விட்டதால்,
தனியே தவித்து, வெறுமையில் வாடி;
மனோ வியாதிகளும், உடல் வியாதிகளும்,
மாறி மாறித் தாக்குவதால் துவண்டு போய்;

வாழ்வே சுமையாகிவிட்ட வயோதிகர்கள்,
வாழ்வில் எதிர்நோக்குவது ஒன்றே ஒன்று.
தம் வாரிசுகளின் வாரிசுகளுடன் கூடி,
தம் மீதி நாட்களைக் கழிப்பதே ஆகும்!

மனோ வியாதிகள் உற்பத்தி ஆகாது.
மறந்தே போய்விடும் உடல் வியாதிகள்.
மாசற்ற மழலைகளின் ஸ்பரிசத்தால்
மாறியே போய்விடும் அத்தனையுமே!

அனைவருக்குமே நன்மை பயக்கும் அந்த
அருமையான வாழ்க்கை முறையை மீண்டும்
அரங்கேற்ற வேண்டாமா? ஆராய்ந்து கூறுவீர்!
அதற்கு ஆவனவற்றை செய்ய வேண்டாமா?

“கூட்டுக் குடும்பத்தில் குழப்பமே மிஞ்சும்!”
கூற்றில் உண்மை கடுகளவும் இல்லை.
தனிக் குடும்பத்தில் தகராறுகள் இல்லையா?
தனி நபர்கள் அதில் தலையிடுவது இல்லையா?

கூடி வாழும் போது பொறுமை வளரும்;
பொறுப்பும், சகிப்புத் தன்மையும் வளரும்;
பகிர்ந்து உண்ணும் நல்ல பண்புகளும்,
பரந்த மனப்பான்மையும் ஓங்கி வளரும்.

கூடி வாழுகின்றன கொடிய விலங்குகள் கூட;
கூடி உண்கின்றன கரிய காகங்களும் கூட;
கூடி வாழ்கின்றன எறும்புகளும், தேனீயும்;
கூடி மனிதர்கள் வாழ்வது எப்போது?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
Fegasderty is offline


 

All times are GMT +1. The time now is 11:11 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity