Thread
:
கண்ணிருந்தும் குருடராய்
View Single Post
04-26-2012, 09:48 PM
#
1
Raj_Copi_Jin
Join Date
Oct 2005
Age
48
Posts
4,533
Senior Member
கண்ணிருந்தும் குருடராய்
The editorial talks about the saving of trees, how trees were kept as " sthala virakshms" in temples, "thirthams" in temples and their medicinal qualities.
தலையங்கம்:
கண்ணிருந்தும் குருடராய்...
மகாபாரதத்துடன் தொடர்புடைய இரண்டு செய்திகள் அண்மையில் ஊடகங்களில் வெளியாகின. முதலாவதாக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடஸ்ராஜ் சிவன் ஆலயத்தில் உள்ள நச்சுப்பொய்கை வற்றுகிறது என்பது. இரண்டாவது, உத்தரப் பிரதேச மாநிலம், பாராபங்கி மாவட்டத்தில் உள்ள கிந்தூர் கிராமத்தில் இருக்கும் சிவன் கோயிலின் பாரிஜாத மரம் பட்டுவிட்டது என்பது.
நீர் அருந்த நச்சுப்பொய்கைக்குச் சென்ற பாண்டவர் சகோதரர்கள், அதைப் பாதுகாத்து நின்ற பூதத்தின் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் மயக்கமுற, தருமர் அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளித்து மீட்டு வந்ததாக மகாபாரதத்தில் ஒரு கட்டம் வரும். "யட்சப் பிரஸ்னம்' என்று சொல்லப்படும் அந்தக் கேள்வி பதில்கள் பல உள்ளார்ந்த தத்துவங்களை வெளிப்படுத்துவதாக அமையும். கோன் பனேகா குரோர்பதி, டீலா நோ டீலா, கோடீஸ்வரர் ஆகலாம் போன்ற இன்றைய வெற்றிபெற்ற டிவி நிகழ்ச்சிகளுக்கெல்லாம் முன்னோடி இந்த வினா-விடை போட்டி.
அதேபோன்று பாஞ்சாலி கேட்டதற்காக பாரிஜாத மலரை வீமன் தேடிக் கொண்டு வந்ததாக மகாபாரதம் சொல்கின்றது. தாய் குந்தியின் வழிபாட்டுக்காக பாரிஜாத மரத்தையே அர்ஜுனன் கொண்டுவந்ததாகவும், அதனைக் குந்தி இங்குள்ள சிவன் கோயிலுக்கு அளித்துவிட்டதாகவும் மரபுவழியிலான மகாபாரத கிளைக் கதைகள் சொல்கின்றன. கிராமத்தின் பெயரே (கிந்தூர்) குந்தி என்பதன் திரிபுதான் என்கிறார்கள்.
இந்தியாவில் பிற இடங்களில் மிக அரிதாக பாரிஜாத மரங்கள் இருந்தாலும்கூட, கிந்தூரில் உள்ள பாரிஜாத மரம் பல வகையிலும் மாறுபட்டது. பூக்கள் பூக்கும் தருணம் அந்தச் சூழலே ரம்யமாக மாறிவிடுமாம். மணம் பரப்பும் வெண்மையான மலர்கள் உதிரும்போது பொன்நிறமாக மாறிவிடும் என்கிறார்கள்.
இதன் பூக்கள் காயாகி விதையாவதில்லை. இதன் கிளைகளைக் கொண்டு பதியம் போட்டு மரம் வளர்க்கலாம் என்றால் அதுவும் நடைபெறவில்லை. ஏனென்றால், பாரிஜாத மரத்தில் இது ஆண் வகை. உலகத்திலேயே இந்தவகைப் பாரிஜாத மரம் ஒன்றுதான் இருக்கிறது என்கிறார்கள் தாவரவியல் வல்லநுர்கள்.
ஃபைசாபாத்தில் உள்ள நரேந்திர தேவ் வேளாண் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பேராசிரியர்கள் குழு இந்தப் பாரிஜாத மரத்தை அண்மையில் ஆய்வு செய்து, பட்டுவரும் இந்த பாரிஜாத மரத்தைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால், இங்குள்ள மக்கள் இதற்குப் பெருந்தடையாக இருக்கிறார்கள். பேராசிரியர்கள் மரத்தை ஏதாவது செய்து கொன்றுவிடுவார்களோ என்கின்ற அச்சம்தான் காரணம். சுமார் 1000 ஆண்டுகள் முதல் சுமார் 4000 ஆண்டுகள் வரை இதன் வயது இருக்கலாம் என்கிறார்கள். இந்த அரிய மரம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று.
பாரத மக்கள் அனைவரும் தொன்றுதொட்டு இயற்கை வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதன் அடையாளம்தான் கோயில்களில் உள்ள மரங்கள். இந்திய மண்ணில்தான் மரங்கள் தெய்வமாக வழிபடப்படுகின்றன. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு ஸ்தல விருட்சமும், தீர்த்தமும் (குளம்) உண்டு. எந்த தட்பவெப்பத்தில், எத்தகைய மண்வளத்தில் கடல்மட்டத்திலிருந்து எந்த அளவுக்கு உயர்ந்த இடத்தில் என்னென்ன மரங்கள் வளரும் என்பதையும், அதன் மருத்துவக் குணங்களையும் தெரிந்துதான் கோயில்களில் ஸ்தல விருட்சங்களை வைத்துள்ளனர் நமது மூதாதையர். மா, பலா, புன்னை, மகிழம், மருதம், வன்னி, பன்னீர், பத்திரி, அரசு, வேம்பு என பல்வேறு மரங்களை ஸ்தல விருட்சமாக வைத்துப் பாதுகாத்து வந்தனர்.
கோயில்களில் பாதுகாக்கப்பட்ட ஸ்தல விருட்சங்கள் அந்த வகை மரங்களிலேயே மிகவும் தனித்துவமானவை. இந்த மாமரம் போனால் இன்னொரு மாமரம் என்பதைப் போன்றதல்ல. அதைத்தான் கிந்தூர் பாரிஜாத மரம் நமக்கு உணர்த்துகின்றது. அவை மிக அரிதான மரங்கள். ஆகையால்தான் இந்த மரங்களுக்கு அதீத மருத்துவக் குணங்கள் இருந்தன.
தீர்த்தம் (குளம்) என்பதும், அந்தக் கோயில் அமைந்துள்ள மண்ணின் கனிமத் தன்மையால் குளத்து நீர் வேதியியல் மாற்றம் பெற்று மருத்துவக் குணம் பெறும் வகையிலேயே அமைக்கப்பட்டன. ஒவ்வொரு கோயில் குளத்துக்கும் ஒரு விசேஷம். ஆகவேதான், ஒவ்வொரு நோய்க்கும் ஒரு கோயில் குளத்தின் நீரைப் பரிந்துரைத்தார்கள்.
இன்று எல்லா கோயில்குளங்களும் வற்றிக் கிடக்கின்றன. திருநள்ளாறு, கும்பகோணம் மகாமகம் குளங்களில் விழாக் காலங்களில் லாரிகளில் நீரைக் கொண்டு வந்து நிரப்புகிறார்கள். பல்லாயிரம் பேர் குளிப்பதால், சுகாதாரம் கருதி குளோரினைக் கொட்டுகிறார்கள். இதனால் என்ன பலன் கிடைத்துவிடும்? ஆன்மிகப் பலனும் இல்லை. அறிவியல் உண்மையும் இல்லை.
சமயத்துடன் இணைந்து இறைவழிபாட்டின் ஒரு பகுதியாக மரங்களை ஸ்தல விருட்சங்களாக்கிய நமது மூதாதையரின் தொலைநோக்குப் பார்வையை வியக்காமல் இருக்க முடியவில்லை. ஸ்தல விருட்சங்களுக்குப் புனிதத் தன்மை தரப்படுவதால் அந்த மரங்கள் பாதுகாக்கப்படும் என்பதும், கோயில் தோறும் குளம் அமைப்பதால் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும் என்பதும் விஞ்ஞானம் வளராத காலத்து மூதாதையருக்கு இருந்தது. படித்துப் பட்டம் பெற்றதாலேயே புத்திசாலிகளாகி விட்டதாகக் கருதும் நம்மால் அவர்கள் வைத்துவிட்டுப் போனதைக் காப்பாற்றக்கூட முடியவில்லை.
இருப்பதையும் இழந்துவிடாமல் இருக்க வழி காண வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம், நமது தமிழகத்திலாவது...
| Editorial | Dinamani
Quote
Raj_Copi_Jin
View Public Profile
Find More Posts by Raj_Copi_Jin
All times are GMT +1. The time now is
10:02 PM
.