மந்கிரங்கள சொல்லும்போது பொருளை விளக்கிச் சொல்லியிருந்தால், எப்பொழுதும் இல்லாவிட்டாலும், எப்பொழுதாவது மணமக்களுக்கு இந்த ஞானோதயம் வரும். தன்னைச் சோதனை செய்து கொள்ள வாய்ப்பு உண்டு. மந்திரங்கள் புனிதமானவை, அவற்றிற்கு அர்த்தம் பார்க்கக்கூடாது என்று சொல்லி, கடமைக்கு மம்போ-ஜம்போ என்று உளறிவிட்டுப் போகிறார் புரோகிதர். அவர் சரியாகச் சொல்கிறாரா என்பது கூட நமக்குத் தெரியாது. நான் பார்த்த ஒரு அப்பிராமணக் கல்யாணத்தில் புரோகிதர் ஒரு ஐந்து மந்திரங்களையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். அவை நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரிந்த மந்திரங்கள். அவை என்ன வென்றால் 1த்ரயம்பகம் யஜாமஹே 2ஸர்வ மங்கள மாங்கல்யே 3 தாம் ம ஆவஹ ஜாதவேதோ 4 கணானாம் த்வா 5 ஹிரண்யகர்ப்ப கர்ப்பஸ்தம் இவற்றை வைத்துக் கொண்டே முக்கால் மணிநேரத்தை ஓட்டினார். ஐயரு நெறைய மந்திரம் சொல்லி நல்லா செஞ்சு வெச்சாரு என்று சொல்லி பேசியதை விட அதிகமாகத் தட்சிணை கொடுத்தார் என் நண்பர், பெண்ணின் தகப்பனார். நான் மனதுக்குள் சிரித்துக் கொண்டேன். நம் நிலையும் அதுவே தான். ஸாஸ்திரிகள் வைத்துச் செய்தால் தான் கல்யாணம் அங்கீகாரம் பெறும் இல்லாவிட்டால் ஜாதிப்ரஷடம் ஆகிவிடுவோம் என்று நினைத்துக் கொண்டு பெற்றோர் அவர் ஏதாவது சொல்லி விட்டுப் போகட்டும். தாலி மட்டும் கட்டிவிட்டால் போதும் என்று நினைக்கின்றனர். ஏன் இந்த மனுஷன் புகையில் நம்மைத் திக்குமுக்காட வைத்து ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறார். இவர் எப்பொழுது நம்மை விடுதலை செய்வார், எப்பொழுது நாம் தனிமையில் சந்தித்துப் பேச முடியும் என்பதே எண்ணமாக இருக்கின்றனர் மணமக்கள். எவருக்கும் நம்பிக்கை இல்லை. சமூக அங்கீகாரம் இல்லாமல் போகுமோ என்ற பயம் தான் நம் சடங்குகளின் அஸ்திவாரம். போலித்தனத்தை விட்டெறிந்து மந்திரங்களைத் தமிழில் சொல்வது என்று வைத்துக் கொள்வோம். ஸாஸ்திரிகள் தேவை இல்லை. நம்மில் வயதான, விவரம் தெரிந்த ஒருவரைத் தலைமை தாங்கி நடத்தித் தரச் சொல்வோம். ஸாஸ்திரிகளின் மிதமிஞ்சிய தட்சிணைக்குக் கடிவாளம் போடப்படும். ஒரு உறுத்தல் என்னவென்றால், வரும்படி மிகுதியாக வருவதால் தான் பலர் வேத அத்தியயனத்துக்கு வருகின்றனர். வேதம் உயிர் பிழைத்து இருக்கிறது. வரும்படி இல்லை என்றால் எவரும் வேதம் கற்க மாடாடர்கள். வேதம் கற்பார் இன்றி அழியும். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக வாய் மொழியாகக் காப்பாற்றப்பட்டு வந்த வேதம் புத்தகத்துள் முடங்கிவிடும்.