Thread
:
Temple and Tamil - Tamil as the language of worship......
View Single Post
11-04-2005, 11:54 AM
#
6
Beerinkol
Join Date
Dec 2006
Posts
5,268
Senior Member
"
செந்தமிழர் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரனூர்"
ஆகமங்கள் எங்கே அறுசமயம் தானெங்கே
போகங்கள் எங்கே உணர்வெங்கே?
என்று வினவுகிறது திருக்களிற்றுப்படியார் (செய்யுள் -5)
ஆகமம் என்ற சொல்லின் பொருள் என்ன? எந்தச் சமயமும் தத்துவங்களை நேரடியாக எளிய முறையில் சொல்வதில்லை. சொல்வதும் எளிதன்று. எல்லாவற்றையும் மறைபொருளாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் தருவதாகவும் சொல்லுகின்றன.
ஆகமம் என்ற சொல்லுக்கு ஒன்றிலிருந்து 'வந்தது" என்று பொருள். அதாவது 'சிவபெருமானிடமிருந்து வந்தன" என்பதைக் குறிக்கின்றன. 'ஆகமம்" இறைவனிடம் இருந்து வந்தது என்பதைக் குறிக்கும் 'ஆ" என்பது அளவு, அறிவு, மரபு என்பதாகும். 'கம" வருதல், போதல், இறைவனை உணர்தல் என்பதைக் குறிக்கும். அதாவது இறைவனிடம் இருந்து வந்த இது இறைவனை உணர்வதற்கு வழிகாட்டும்.
இன்னொரு விளக்கம். 'ஆ" என்பது பாசம், 'க" என்பது பசு, 'ம" என்பது பதி. ஆகவே ஆகமம் என்பது பதி, பசு, பாசம் மூன்றையும் பற்றிக் கூறுவது. பிறிதொரு விளக்கம் 'ஆ" என்பது சிவஞானம், 'க" என்பது மோட்சம், 'ம" என்பது மலத்தை ஒழித்தல்.
புலமை வாயந்த தமிழறிஞர்களான பரிதிமாற் கலைஞர் (சூரிய நாராயண சாஸ்திரி) மறைமலை அடிகள், கா.சு பிள்ளை ஆகியோர் ஆகமங்கள் தமிழிலேயே ஆதியில் இருந்தன என எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.
திருமூலர் தாம் எழுதிய திருமந்திரத்தில் சிவபெருமான் 28 ஆகமங்களை வழங்கியதாகக் கூறுகிறார். அதில் ஒன்பது ஆகமங்களின் அடிப்படையில் தமது நு}லை அமைத்துள்ளதாக அவர் கூறுகிறார்.
வேதம் ஆகமம் இரண்டுமே இறைவன் அருளால் வெளிப்பட்டன என்பதையும் அவற்றின் தனித்தன்மைகளையும் தமிழில் முதன்முதலில் எடுத்துக் கூறியவர் திருமூலரே. சித்தாந்தம் என்ற சொல்லை முதன்முதலில் கையாண்டவரும் திருமூலரே!
வேதம் பொதுவானது ஆகமம் சிறப்பானது. வேதம் ஆகமம் என்று இரண்டே நு}ல்கள்தான் உண்டு. பிற நூல்கள் இவற்றின் அடிப்படையில் எழுந்தவை. சிவாகமங்கள் வேதத்தின் உட்கருத்தை அதாவது சைவ சித்தாந்தத்தை எடுத்துரைக்கின்றன. வேதத்தின் பிற பகுதிகளை மற்ற நு}ல்கள் எடுத்துக் கூறுகின்றன.
வேதங்களையும் ஆகமங்களையும் சிவபெருமான் அருளினார் என்பது சைவ சித்தாந்தத்தின் அடிப்படை கொள்கைகளில் ஒன்றாகும். ஆனால் வேதத்தை சிவபெருமான் அருளியிருக்க முடியாது.
ஏனென்றால் சிவன் வேதகாலத்தில் கடவுளாக இருந்ததில்லை! அதாவது வேதத்தில் சிவனுக்கு இடம் இருக்கவில்லை. (மந்திரங்கள் என்றால் என்ன? பக்கம் 19
)
வேதங்களையும் ஆகமங்களையும் இறைவன் அருளினான் என்று சொல்லப்படுவதற்கு காரணம் யாதெனில் இவை ஒருவரால் எழுதப்பெறாது பலரால் பல ஆண்டுகாலமாக எழுதாக் கிளவியாக ஓதப்பட்டு பின்னர் ஏட்டில் எழுதப்பட்டதேயாம்.
முன்னர் ஆகம விதிகள் காலத்துக்காலம் மாறிக் கொண்டு வந்ததை நீதிபதி மகராசன் குழுவினரது அறிக்கை வாயிலாக எடுத்துச் சொன்னோம்.
எனவே தமிழில் போற்றி (அர்ச்சனை) செய்வதற்கு ஆகமத்தில் விதியில்லை என்ற வாதம் எடுபடாது.
அப்படித்தான் இருந்தாலும் ஆகமத்துக்கும் பன்னிரு திருமுறைக்கும் இடையில் முரண்பாடு காணப்பட்டால் ஆகமத்தை விட்டு விட்டு பன்னிரு திருமுறையையே பிரமாணமாகக் கொள்ள வேண்டும் என்று குன்றக்குடி அடிகளார் சொல்லியிருக்கிறார்.
நாயன்மார்களில் ஞானசம்பந்தர் தீவிர தமிழ்ப் பற்றாளர் என்பதை முன்னர் கூறினோம். ஞானசம்பந்தர் மொத்தம் 4196 பாடல்களை (283 பதிகங்கள்) பாடியிருக்கிறார். அதில் 147 இடத்திலே தன்னை 'தமிழ்ஞானசம்பந்தன்" 'முத்தமிழ் விரதன்" என்று சொல்லிக்கொள்ளுகிறார்! இஃது அவர் தமிழுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
பக்தி இயக்க காலத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்ததோடு நில்லாமல் அடிப்படை வழிபாட்டில் பல மாறுதல்கள் புகுத்தப்பட்டன.
'வேதங்களை அடிப்படையாகக் கொண்ட ஆரிய, வைதீக மதத்தில் கோயில்களோ உருவ வழிபாடோ (விக்ரக ஆராதனையோ) இருக்கவில்லை" என வடமொழி படித்து, ஜெர்மானிய மொழியிலே வேதங்களை மொழி பெயர்த்த மாக்ஸ் முல்லர் என்ற அறிஞர் சொல்கிறார். உருவ வழிபாடு வணக்கம் வந்த பிற்பாடுதான் அவற்றுக்குக் கோயில்கள் எழுப்பப்பட்டன.
வேதப் பிராமணர்கள் யாகம் முதலியவை நடத்திவந்த காலத்தில் கோயில்களையும் சிலைகளையும் நிறுவ வேண்டிய அவசிய ஏற்படவில்லை. பிராமணர்கள் மட்டுமே அக்னி வளர்க்கலாம் என்ற நியதி இருந்தது. அப்படி அக்னி வளர்த்த பிராமணர்கள் தீக்கடவுள் ஒன்றுதான் தெய்வம். அதற்கு மேலே இந்திரன், வருணன் போன்ற தெய்வங்கள் எதுவாக இருந்தாலும் 'ஸ்வாஹா" என்று சொல்லி அக்னியிலே போடுவதுதான் மரபாக இருந்தது.
இப்படி அக்னி வளர்த்த பிராமணர்கள் அக்னி ஹோத்திரி தாதாச்சாரியார் என்று அழைக்கப்பட்டார்கள். அக்னி ஹோத்திரிகள் என்றால் அக்னி வளர்க்க உரிமை பெற்றவர்கள் என்று பொருள்.
மற்ற வருணத்தார் உயர்ந்த பொழுது அவர்களுக்கு வேறு வழிபடு தெய்வங்கள் வேண்டியதாயிற்று. பிராமணர்களின் ஆதிக்கம் குறையவும் அக்னி வணக்கம் தனது செல்வாக்கை இழந்தது. அதிலிருந்து உருவ வழிபாடு ஆரம்பமாயிற்று. உருவங்களுக்கு அபிசேகம் செய்தவர்கள்.
உருவ வழிபாட்டை வேதம் ஒத்துக் கொள்ளாததால் விக்கிரகம் வைப்பதும் அபிசேகம் செய்வதும் 'கல்லைக் கழுவுகிறவன் தொழில்" என அக்னி ஹோத்திரிகளால் பழிக்கப்பட்டனர்.
திருவீழிமிழலை பாடல்பெற்ற திருத்தலம். திருஞானசம்பந்தர் திருவீழிமிழலைத் திருக்கோயிலில் 'செந்தமிழர்கள் மறை நாவலர்கள், கலைநலம் தெரிந்தவர்கள், குணத்திற் சிறந்த ஞானிகள் ஆகியோர் ஒருங்குகூடி அர்ச்சனைகள் செய்தனர்" எனப் பாடல் அருளியிருக்கிறார். செந்தமிழர் ஒரு போதும் வடமொழியில் அர்ச்சனை செய்திருக்க முடியாது. செந்தமிழர் செந்தமிழில்தான் அர்ச்சனை செய்திருப்பார்கள்.
செந்தமிழர் தெய்வமறை நாவா செழு
நற்கலை தெரிந்த அவரோடு
அந்தமில்கு ணத்தவர்கள் அர்ச்சனைகள்
செய்ய அமர்கின்ற அரனூர்
கொந்தலர் பொழிற்பழக வேலிகுளிர்
தண்புனல்வ ளம்பெருகவே
வெந்திறல் விளங்கிவளர் வேதியர்
விரும்பு வீழி நகரே. (மூன்றாம் திருமுறை)
இந்த அபிசேகத்தை மூவரும் மிகவும் வியந்து பாடியிருக்கிறார்கள். யார், யார் அபிசேகம் செய்தார்கள், யார் யார் போற்றி செய்தார்கள் என்பதை வரிசைப்படுத்திச் சொல்லியிருக்கிறார்கள்.
இப்போது கோவிலுக்குப் போனால் அர்ச்சனைத் தட்டைக் குருக்கள்கிட்டே கொடுத்துவிட்டு வெளியே அடியார்கள் நிற்கிறார்கள். ஆனால் ஞானசம்பந்தர் காலத்தில் செந்தமிழர் உள்ளே போய் பைந்தமிழில் அர்ச்சனை செய்தார்கள் என அவரே சொல்கிறார்.
நாவுக்கரசர் திருக்கயிலாயக் காட்சியில் இன்புற்று மகிழ்ச்சி பெருகி நிற்கையில், அக்காட்சி மறைந்துவிடுகிறது. ஆனால் அவர் கண்ட காட்சியை, சிவமும் சத்தியுமாகிய திருக்கோலத்தைப் பிறைக் கண்ணியானும் மலைமகளும் எனக் காண்கின்றார். காணுமிடத்து, அடியார் பலர், புூவும் நீரும் கொண்டு இருவரையும் போற்றிச் செல்வதும், அவர் பின்னே செல்கின்ற தமக்குக் கயிலைமலைச் சாரலில் பெண் யானைகளோடு ஆண் யானைகள உலா வருவது தெரிகிறது.
'மாதர்ப் பிறைக் கண்ணியானை
மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந்து ஏத்திப்
புகுவார் அவர் பின்புகுவேன்
யாதும் சுவடு படாமல்
ஐயாறு அடைகின்ற போது
காதல் மடப்பிடியோடும்
களிறு வருவன கண்டேன்"
'அழகிய பிறை மதியைத் தலைமாலையாக அணிந்தவர் சிவபெருமான். உமாதேவி இமவான்மகள் ஆவார். அச்சிவனை உமையோடு சிலர் பாடிச் செல்கிறார்கள்.
அவர்கள் பூவோடு நீரை எடுத்துக் கொண்டும் துதித்துக் கொண்டும் போகிறார்கள். அவர்களுடன் நானும் கோயிலுக்குள் போவேன்.
அப்படிப்பட்ட நான், கால் சிறிதும் நிலத்தின் மேல் படாமல் திருவையாறு என்ற தலத்தை அடைந்தேன். அப்போது அன்பு பொருந்திய இளம் பெண் யானை வந்து கொண்டு இருந்தது. அதனுடைய ஆண் யானையும் வருவதைப் பார்த்தேன். அக் காட்சியில் சிவபெருமானின் திருவடிகளைப் பார்த்தேன். எப்பொழுதும் பார்த்து அறிய முடியாத காட்சிகளை எல்லாம் பார்த்தேன்."
மாதர் - அழகு
கண்ணி - தலைமாலை
போது - மலர்
சுவடு - கால்
காதல் - அன்பு
மடப்பிடி - பெண்யானை.
திருநாவுக்கரசர் காலத்தில் திருக்கோயில் கதவுகள் எல்லோருக்கும் திறந்து இருந்ததையும் அடியார்கள் நீரும் பூவும் சொரிந்து நேரடியாக இறைவனை தமிழில் வழிபட்டதையும் காணலாம்.
நாவுக்கரசர் தானும் அடியார்களும் பூவும் நீரும் கொண்டு சென்று நேரடியாக இறைவனைத் தொழுதார் என்கிறார். அதனால்தான் சூலை நோயுற்ற போது 'சலம் பூவொடு தூபம் மறந்தறியேன், தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்" எனப் பாடுகிறார். மேலும்,
இயக்கர் கின்னரர் யமனொடு வருணர்
இயங்கு தீவளி ஞாயிறு திங்கள்
மயக்கம் இல்புலி வானரம் நாகம்
வசுக்கள் வானவர் தானவர் எல்லாம்
அயிர்ப்பொன் நின்றினின் திருவடி யதனை அர்ச்சித் தார்
அடியார்கள் மட்டுமல்ல வானவர், இயக்கர், கின்னரர், புலி, சிங்கம், நாகம் எல்லாம் இறைவனின் திருவடிகளை நேரடியாக அர்ச்சித்தனர் என்கிறார் சுந்தரர்.
பல்லவர் காலத்தில் தமிழோதி வழிபடவும் கருவறை செல்லவும் உரிமை பெற்றிருந்த தமிழர்கள் சோழர்காலத்தில் வடமொழிக்கு இடங்கொடுத்து கருவறை செல்லும் உரிமையை இழந்தனர். இதற்குக் காரணம் பல்லவர்களை மிஞ்சும் வண்ணம் இராசராசன், இராசேந்திரன் போன்ற சோழ மன்னர்கள் பெருவாரியான பார்ப்பனர்களை காசி, கஷ்மீர், வங்கம் போன்ற வடநாடுகளில் இருந்து கொண்டு வந்து குடியேற்றிமையே.
சங்க காலத்தில் பார்ப்பனர்கள் சேரிகளில் வாழ்ந்தார்கள்.
பல்லவர் சோழர் காலத்தில் ஆற்றங்கரை நிலங்கள் சூழ்ந்த குளிர்ந்த தனி ஊர்களைப் பெற்று வாழ்ந்தனர். இந்த ஊர்கள் அகரம், அக்கிரகாரம், சதுர்வேதி மங்கலம் பிரமதேயம்
எஅழைக்கப்பட்டன.
Quote
Beerinkol
View Public Profile
Find More Posts by Beerinkol
All times are GMT +1. The time now is
10:33 AM
.