. செம்மொழி மாநாடு ! - ஏன் வரவேற்க வேண்டும்? முதலில் தமிழுக்கு ஏன் செம்மொழி அந்தஸ்து? ‘செம்மொழி’ என்ற பதத்துக்கான தகுதிகளாக பதினோரு விதிகள் தரப்பட்டிருக்கின்றன. தொன்மை, தனித்தன்மை, பொதுமைப்பண்பு, நடுவுநிலைமை, தாய்மைப் பண்பு, பண்பாட்டுக் கலை அறிவு மற்றும் பட்டறிவு வெளிப்பாடு, பிறமொழித் தாக்கமில்லா தன்மை, இலக்கிய வளம், உயர்சிந்தனை, கலை இலக்கியத் தனித்தன்மை, மொழிக்கோட்பாடு. இவ்விதிகள் அனைத்தும் பொருந்தி வருவதாலேயே தமிழ் செம்மொழி எனும் தகுதிநிலையை அடைகிறது. திராவிட மொழி குடும்பத்தில் இருக்கும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 22. இதிலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவை மட்டுமே இலக்கியத் திறன் பெற்றவையாக அமைந்திருக்கின்றன. கொலமி, பார்ஜி, நாய்ன்னி, கோண்டி, குய், கூவி, கொண்டா, மால்ட்டா, ஒரயன், கோயா, போர்ரி உள்ளிட்ட மொழிகள் இலக்கியத்திறனற்று பேச்சு பயன்பாட்டில் இருக்கும் இதர மொழிகளாகும். இம்மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாக தமிழ் இருக்கிறது. சீனம், ஹீப்ரூ, பெர்சியன், அரபி, லத்தீன், கிரீக், சமஸ்கிருதம் முதலானவை ஏற்கனவே இத்தகுதியைப் பெற்றவை. இன்று வழக்கில் இருக்கும் மொழிகளில் தமிழுக்கு போட்டியாக கருதப்படும் உயர்ந்த மொழிகளான பிரெஞ்சு (600 ஆண்டுகள்), மராத்தி (800 ஆண்டுகள்), வங்காள மொழி (1000 ஆண்டுகள்) ஆகியவற்றை ஒப்பிடும்போது, இவற்றைவிட 2000 ஆண்டுகள் கூடுதல் தொன்மை கொண்டதாக தமிழ் விளங்குகிறது. தமிழின் தொன்மையையும், பெருமையையும் எடுத்துக்காட்ட நம் வசமிருப்பது சங்க இலக்கியங்கள். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க இவ்விலக்கியங்களும் ஒருவகையில் காரணமாக இருக்கின்றன. ஆனால் சங்க இலக்கியங்கள் எவை எவை என்ற தெளிவு நம் எல்லோருக்கும் இருக்கிறதா என்பது ஐயமே. ஐம்பெருங்காப்பியங்கள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு உள்ளிட்ட ஆகியவையே சங்க இலக்கியங்கள் என்று கூறப்படுகிறது. மொத்தமாக இவை மட்டும்தான் சங்க இலக்கியங்கள் என்று அறுதியிட்டு கூறிவிட முடியாது. சங்க காலத்தில் உருவாக்கப்பட்டவைகளில் இவை மட்டும்தான் நம்மிடம் இன்று எஞ்சி இருக்கிறது. ஐம்பெருங்காப்பியங்களில் வளையாபதி, குண்டலகேசி ஆகியவை நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. நமக்கு முழுமையாக கிடைத்திருக்கும் சங்கத்தமிழ் இலக்கியங்களின் பட்டியல் : தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல். எட்டுத்தொகை : நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, பத்துப்பாட்டு : திருமுருகாற்றுப்படை, பெருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம், பதினெண் கீழ்க்கணக்கு : நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, பழமொழி, சிறுபஞ்சமூலம், திருக்குறள், திருகடுகம், ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைந்நிலை. கதைவளம், காவியச்சுவை மற்றும் கவித்துவ எழில் கொண்ட இலக்கியங்கள் இந்தளவுக்கு வேறேதேனும் மொழியில் இல்லவே இல்லை என்று அடித்துச் சொல்லலாம். இத்தகைய காரணங்களை சுட்டிக்காட்டி பல்லாண்டுகளாக பரிதிமாற்கலைஞர் உள்ளிட்ட தமிழறிஞர்கள் தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற போராட்டத்தை ஓர் இயக்கமாகவே தொடர்ச்சியாக நடத்தி வந்திருக்கிறார்கள். பரிதிமாற்கலைஞரால் முன்னெடுக்கப்பட்ட கோரிக்கை கலைஞரால் 2004ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைமுறைக்கு வந்தது. மத்திய அரசு ‘செம்மொழி’ என்றொரு தனி சிறப்புப் பிரிவை தோற்றுவித்து தமிழை செம்மொழி என்று அறிவித்தது. இதையடுத்து விருதுகள், தமிழ்மொழி மேம்பாட்டு வாரியம், ஆய்வு உதவித் தொகைகள், செம்மொழி தமிழ் உயராய்வு மையம் ஆகிய உட்பிரிவுகளை கொண்ட மத்திய அரசின் செம்மொழித் தமிழ்த் திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழிலக்கியம், இலக்கணம், இசை, கல்வெட்டுகள் மற்றும் நாணங்கள் குறித்த ஆய்வுகளில் கவனம் செலுத்த முடிவெடுக்கப்பட்டது. 2007 ஆகஸ்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. முன்னதாக இதற்காக ரூ.76.32 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டிருந்தது. செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் இதுவரை என்னென்ன செய்திருக்கிறது? கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 41 செவ்வியல் நூல்களின் செம்பதிப்பு பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இவை தொடர்புடைய ஓலைச்சுவடிகள், தாள் சுவடிகள், பதிப்புகள் ஆகியவற்றை திரட்டுதல் ஆகிய பெரிய பணிகள் முழுமூச்சோடு நடந்துவருகிறது. தொல்காப்பியம், இறையனார் களவியல், அகநானூறு, ஐங்குறுநூறு, பத்துப்பாட்டு ஆகிய நூல்களின் பணி இவ்வாண்டு இறுதிக்குள் முடிவுக்கு வந்து, நூல்கள் வெளியிடப்பட்டு விடும். மணிப்பூரி, நேபாளி ஆகிய இருமொழிகளிலும் திருக்குறள் இப்போது மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. நற்றிணை, முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை, நானாற்பது ஆகியவற்றின் மூன்று ஆங்கில மொழிபெயர்ப்புகள் அடங்கிய தொகுப்பு நூல்கள் முடிக்கப் பட்டிருக்கிறது. பண்டைக்கால தமிழ் இலக்கியங்களை மரபுவழி ஓசை ஒழுங்கோடும், இசையோடும் கற்பிப்பதற்கு குறுந்தகடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. செம்மொழித் தமிழ் இலக்கியம், இலக்கணம், கல்வெட்டுகள், நாணயங்கள் தொடர்பான 18 காட்சிப்படங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் முதல் தொகுதி ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழகராதிகளில் இதுவரை இடம்பெறாத எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட சொற்கள் (அளவைகள், ஆடு மாடுகள், நெல் வகைகள், மீன்பிடிப்புத் தொழில், நெசவுத்தொழில், மண்பாண்ட்த் தொழில், வேளாண்மை தொடர்பானவை) தொகுக்கப்பட்டு ஆவணப் படுத்தப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட பதினோராயிரம் நூல்களும், பல்வேறு ஓலைச்சுவடிகளின் மின்பதிப்புடன் கூடிய குறுந்தகடுகள் ஆய்வு செய்யும் மாணவர்களின் வசதிக்காக நூலகத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. சுமார் ஐம்பது கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் நடத்தப்பட்டு பல்துறை சார்ந்த அறிஞர்களின் சுமார் 1500 ஆய்வுக் கட்டுரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 94 பிராமிக் கல்வெட்டுகளும் 37 வட்டெழுத்து கல்வெட்டுகளும் HD Video & High Resolution Still Image முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் உதவியோடு பழனிக்கு அருகில் உள்ள பொருந்தல் எனும் ஊரில் நடத்தப்பட்ட அகழ்வாய்வின் மூலமாக பல்வேறு அரிய சங்க காலத் தொல்லியல் சான்றுகள் (காசுகள், சூது பவள மணிகள், பளிங்கு மணிகள், தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகள், மண் பாண்டங்கள், கண்ணாடி மணிகள், சுடுமண் பொம்மைகள் போன்றவை) எடுக்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி செம்மொழி விருதுகள், ஆய்வாளர்களுக்கு முனைவர் பட்ட மேலாய்விற்கு நிதியுதவி என்று ஏராளமான விஷயங்கள் கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இன்று செம்மொழி மாநாட்டை புறக்கணிக்கிறோம் என்று கிளம்பியிருக்கும் சிறுபான்மை கும்பலுக்கு இவையெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை. இம்மாநாடு செம்மொழி தகுதி கிடைத்த மறுவருடமே நியாயமாக நடத்தப்பட்டிருக்க வேண்டும். இப்போது நடத்தப்படுவது என்பதே மிகவும் தாமதமானது. 1995ல் தஞ்சையில் நடத்தப்பட்ட உலகத் தமிழ் மாநாட்டுக்குப் பிறகான சர்வதேச மாநாடு கடந்த பதினைந்து ஆண்டுகளாக நடத்தப்படவேயில்லை. உலகத் தமிழ் ஆய்வுக் கழகமும் இதற்கான முன்னெடுப்பு எதையும் எடுத்ததாகவும் தெரியவில்லை.