Thread
:
Malaysia Vasudevan passes away
View Single Post
02-22-2011, 02:19 AM
#
11
doctorzlo
Join Date
Jun 2006
Posts
4,488
Senior Member
A tribute
மலேசியாவில் இருந்து கலைவேட்கை கொண்டு ஓர் இளைஞன் சென்னையில் கால் பதிக்கின்றான். எந்தவிதமான செல்வாக்கும், கலைப்பின்னணியும் இல்லாத ஒரு புது இடத்தில்தான் அவன் பாடகனாகத் தன் சுற்றை ஆரம்பிக்க வேண்டிய சவால். அவனுக்குத் தேவை ஒரு நல்ல வாய்ப்பு. டெல்லி டூ மெட்ராஸ் என்ற படத்தில் அவனுக்குப் பாடவாய்ப்புக் கிடைக்கின்றது. அதுவும் கிணற்றில் போட்ட கல்லாய் வெளிவராத பாட்டாக அமைந்து விடுகின்றது. ஒரு நல்ல திருப்பத்துக்காகக் காத்திருந்த அவனுக்கு “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு” என்ற 16 வயதினிலே படப்பாடல் அமைந்து விடுகின்றது. ஒரு வெள்ளந்தித்தனமான அந்தக் குரலே பட்டிதொட்டியெங்கும் அந்தக் கலைஞன் யாரென்று திரும்பிப் பார்க்க வைத்து விடுகின்றது.
அந்தப் பாட்டில் ஆரம்பித்த சுற்று, முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர் மனங்களில் கம்பீரமாக உட்கார்ந்து கொள்ளும் அளவுக்கு அங்கீகரிக்கப்படுகின்றார். அவர் தான் மலேசியா வாசுதேவன்.
எண்பதுகளிலே ரஜனி – கமல் என்ற எதிரெதிர் துருவ நட்சத்திரங்கள் தமிழ்த் திரையுலகின் அடுத்த போக்கைத் தீர்மானிக்கும் நட்சத்திரங்களாக உயர்ந்து நிற்கின்றார்கள். கமல்ஹாசனின் நகலாக அச்சொட்டாகப் பொருந்திப்போய் விடுகின்றது எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல். ஸ்டைலாக, நடிப்பிலங்கணங்களைக் கடந்த எதார்த்தமான ரஜினிகாந்தின் குணாம்சத்துக்குப் பொருந்திப் போக ஒரு குரல் தேவைப்படுகின்றது. அந்த வேளை மலேசியா வாசுதேவனின் குரல் தான் சூப்பர் ஸ்டாராக மாறிக்கொண்டிருந்த ரஜினிகாந்திற்கு அணி செய்யும் விதத்தில் அமைந்து விடுகின்றது.
உதாரணமாக தர்மயுத்தம் படத்தில் வரும் தங்கை செண்டிமெண்ட் பாடல் “ஒரு தங்க ரதத்தில் என் மஞ்சள் நிலவு”, அதே படத்தில் வரும் “ஆகாய கங்கை” என்ற காதல் பாட்டு. இந்த இரண்டு பாடல்களையும் மலேசியா வாசுதேவன் பாடியியிருக்கும் பாணியைக் கவனித்தாலே போதும், ரஜினிகாந்த் என்ற எல்லாத்தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு மாஸ் ஹீரோவுக்கு இந்தக் குரல் எவ்வளவு தூரம் நெருங்கி ஒத்துழைத்திருக்கின்றது என்று.
ஒரு காலக்கட்டத்தில் டி.எம். செளந்தரராஜன் குரலுக்கு மாற்றீடாக யாரையும் பொருத்திப் பார்க்க முடியாத சிவாஜி கணேசனுக்கு மலேசியா வாசுதேவனின் குரல் அச்சொட்டாக ஒட்டிக் கொண்டது. எண்பதுகளில் வந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த படங்களிலே மலேசியா வாசுதேவன் குரல் தான் அவருக்கான குரலாகப் பொருந்தியிருக்கின்றது. குறிப்பாக, முதல் மரியாதை என்ற காவியத்திற்கு மலேசியா வாசுதேவனின் குரலின் பரிமாணம் அப்படத்தின் பாடல்களில் வெளிப்பட்டு படத்தின் உணர்வோட்டத்திற்கு உயிரூட்டியதொன்று. அந்தப் படத்திலேயே அவருக்குத் தேசியவிருது கிட்டியிருக்க வேண்டியது வேறெந்தப்படத்துக்கும் கூடக் கிடைக்காதது பெரும் துரதிஷ்டம்.
நடிகராக வரவேண்டும் என்று சினிமாத்துறைக்கு வந்தவர் பாடகராகப் புகழ் பெற்றதோடு நில்லாமல் தன் நடிப்புத்திறமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தமிழ் சினிமாவின் தனித்துவமான வில்லன், சக குணச்சித்திர நடிகராகக் கவர்ந்து கொண்டார். குறிப்பாக கைதியின் டயரி என்ற படத்தில் ஆரம்பித்து முதல் வசந்தம், ஊமை விழிகள் என்று மலேசியா வாசுதேவனுக்கான பாத்திரங்களைச் சிறப்பாகவே செய்து அதிலும் தன் முத்திரையைக் காட்டியவர்.
சாமந்திப் பூ உட்பட நான்கு படங்களுக்கு இசையமைத்தது மலேசியா வாசுதேவனின் இன்னொரு பரிமாணம். சாமந்திப்பூ படத்தில் தானே இசையமைத்துப் பாடிய “ஆகாயம் பூமி” பாட்டைத் தவிர எஸ்.பி.பாலசுப்ரமணியம் , எஸ்.பி.சைலஜா பாடிய “மாலை நேரம்” பாடல் வந்த காலகட்டத்தில் இலங்கை வானொலி ஒலிபரப்பிச் சலிக்காத பாடலாக இருந்தது.
1990 ஆம் ஆண்டு மலேசியா வாசுதேவனை இயக்குனராகவும் தமிழ் சினிமா அறிமுகப்படுத்திக் கொண்டது. ஹரிஷ் என்ற இளம் நாயகன் நடிக்க “நீ சிரித்தால் தீபாவளி” படத்தை இயக்கியிருந்தார் மலேசியா வாசுதேவன். 90 களின் ஆரம்பத்தில் வைகாசி பொறந்தாச்சு மூலம் பிரசாந்த் ஆரம்பித்து வைத்த புதுமுகப் புரட்சி மூலம் 90, 91 களில் ஒரு சில முன்னணி நடிகர்கள் தவிர மற்றைய அனைத்துமே புதுமுகங்களோடு வந்த படங்களாக இருந்தன. இந்த வரிசையில் நீ சிரித்தால் தீபாவளி படம் அமைந்திருந்தாலும் அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
மலேசியா வாசுதேவன் தன் ஆரம்ப காலகட்டத்தில் மணிப்பூர் மாமியார் படத்தில் “ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே” பாடலை திருச்சி லோகநாதன் குரல் பாணியில் பாடியிருப்பார். அதே போல திறமை என்ற படத்தில் உமா ரமணனோடு பாடிய “இந்த அழகு தீபம்” பாடலிலும் அந்தப் பழமை என்றும் இனிமையான குரலைக் காட்டியிருப்பார். “மாமனுக்கு மைலாப்பூரு தான்” (வேலைக்காரன்) பாட்டிலே வெளிப்படும் எள்ளல் குரல், “எங்கெங்கும் கண்டேனம்மா” (உல்லாசப்பறவைகள்) பாட்டில் வரும் வெண்ணிற ஆடை மூர்த்தித்தனமாக இன்னொரு குரல், “கோடை காலக் காற்றே” (பன்னீர் புஷ்பங்கள்) பாட்டில் வரும் மென்மையாக ஒலிக்கும் குரல் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம், இவரது குரலின் பரிமாணங்களை.
எண்பதுகளின் தமிழ் சினிமாவைப் பற்றிப் பேசும் போது மலேசியா வாசுதேவனுக்கான பக்கங்கள் தனியாக ஒதுக்கப்படவேண்டியவை. இது அவருக்கு மரியாதை கலந்த அஞ்சலி செலுத்தப்படவேண்டிய தருணம்.
Quote
doctorzlo
View Public Profile
Find More Posts by doctorzlo
All times are GMT +1. The time now is
01:16 AM
.