மூன்று, பாலாவே ரசிகர்கள் ஊகிக்கட்டும் என்று விட்டது. மையமான விஷயங்களை ‘ஸ்பூன் ·பீடிங்‘ செய்ய முயன்ற பாலா சண்டைக்காட்சிகள் போன்ற வழக்கமான விஷயங்களை தன் ரசிகர்கள் சாதாரணமாக ஊகித்துவிடுவார்கள் என்று எண்ணிவிட்டார். ஆகவே ஒரு சிறிய முரண் அமைப்பை உருவாக்கினார். தாண்டவன் ருத்ரனுக்காக கோர்ட் வாசலில் காத்திருக்கிறான். அடுத்த காட்சியில் ருத்ரன் தாண்டவனைக் கொன்றபின் தலைகீழாக நிற்கிறான். அதன் பின் ருத்ரன் தாண்டவனை நேருக்குநேர் சந்திக்கும் காட்சி. கொலை. அதன்பின் மீண்டும் முந்தைய காட்சி. அம்சவல்லி வருகிறாள். வில்லந் கதாநாயகனைக் கொல்லவருவதும் கதாநாயகன் வில்லனை துரத்திச்சென்று கொல்வதும் எல்லாம் எல்லா படத்திலும் வருவதுதானே சீக்கிரமாக தாவிச்சென்றுவிடலாம் என்று பாலா சொன்னார். எனக்கு அப்படி எளிதாக நம் ஆட்கள் வந்துவிடமாட்டார்கள் என்றுதான் பட்டது. இல்லை இப்போது மிகவும் மாறிவிட்டார்கள் என்றார் பாலா.