View Single Post
Old 04-08-2012, 11:34 PM   #1
IoninnyHaro

Join Date
Oct 2005
Posts
377
Senior Member
Default நிர்வாண சாமியார்களுடன் அலெக்ஸாண்டர்
naked samiyars.jpg

இந்தியா ஒரு அதிசிய நாடு. செல்வக் கொழிப்பும் ஆன்மீகச் சிறப்பும் கொடிகட்டிப் பறக்கும் நாடு என்று கேள்விப்பட்டவுடன் மாமன்னன் அலெக்ஸாண்டருக்கு ஒரே துடிப்பு. எப்படியாவது இந்தியாவுக்குப் போக வேண்டும். அங்குள்ள சந்யாசிகளின் காலடியில் உட்கார்ந்து ஆன்மீகப் பாடம் கற்க வேண்டும். முடிந்தால் சந்யாசிகளைக் கூடவே அழைத்து வர வேண்டும் என்று திட்டமிட்டான். வரும் வழியில் உள்ள நாடுகளை ஒவ்வொன்றாக வென்றான். வட மேற்கு இந்தியாவில் போரஸ் என்ற புருஷோத்தமனை வெல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. மகதப் பேரரசின் மாபெரும் படை வளத்தை ஒற்றர்களின் மூலம் அறிந்தவுடன் செய்ய முடியாத ஒரு செயலில் இறங்கிவிட்டோமே என்று எண்ணி கிரேக்க நாட்டுக்குத் திரும்ப ஆரம்பித்தான்.

இந்திய சந்யாசிகளைக் கூட்டிக்கொண்டு போக அவன் பல முயற்சிகள் செய்ததை அவனுடன் வந்த , அவனுக்குப் பின் வாழ்ந்த கிரேக்க எழுத்தாளர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ளனர். மிகவும் அற்புதமான, சுவையான விஷயங்கள் அவை.

அலெக்ஸாண்டர் சந்தித்த சாமியார்களை அவர்கள் அம்மண சாமியார்கள் ஜிம்னோசோபிஸ்ட்(Gymnosophists) என்று எழுதிவைத்தனர். இவர்கள் யார்?

இவர்கள் சமணர்களில் ஒரு பிரிவினரோ என்று நீண்ட காலமாக ஆராய்ச்சியாளர்கள் விவாதித்து வந்தனர். ஆனால் இவர்கள் நாகா சாது சன்யாசிகள் என்பது இப்போது உறுதியாகிவிட்டது. உலகிலேயே பெரிய திருவிழாவான கும்பமேளாவில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இமய மலைக் காட்டுக்குள் இருந்து வெளியே வரும் அபூர்வ நிர்வாண சாமியார்கள் இவர்கள். மன்னருக்கு எதிராக சபா (Sabhas)என்பவரை எழுப்பி புரட்சி செய்யச் சொன்ன இந்து சந்யாசிக்கள்.

2300 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் நடந்த அற்புதமான உரையாடலை ப்ளூடார்ச்(Plutarch கி.பி 46-120) என்பவர் எழுதிவைத்தார். அலெக்ஸாண்டர் முதலில் கலனஸ் (Calanus) என்ற சாதுவைச் சந்தித்தார். மன்னன் கூறியதை ஏற்க மறுத்து வேத மந்திரங்களை உச்சரித்தவாறு அந்த சாது தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்தார். இறப்பதற்கு முன் பாபிலோனில் அலெக்ஸாண்டர் இறந்துபோவார் என்று ஆரூடமும் கூறினார். அலெக்ஸாண்டருக்கு பயம் வந்துவிட்டது. கலனஸின் குருவான டண்டாமிஸ் (Dandamis) காலடியில் விழுந்தார். கிரேக்க யாத்ரீகர்களுக்கு நம்முடைய சம்ஸ்கிருத பெயர்கள் பரிச்சயம் இல்லாததால் பெயர்கள் உரு மாறிவிட்டன. டண்டாமிஸ் என்பது தண்டி சுவாமிகள் என்று அறிஞர்கள் ஊகிக்கின்றனர்.

மன்னரின் சுவையான 10 கேள்விகள்

மஹா பாரதத்தில் ஒரு சுவையான கதை “பேயின் கேள்விகள்” எனப்படும் “யக்ஷப் ப்ரஸ்னம்” ஆகும். தர்மபுத்திரன் எல்லா கேள்விகளுக்கும் பதில் கூறவே பேயாக மரத்திலிருந்த யக்ஷன் ஏனைய நான்கு பாண்டவர் களையும் உயிர்ப்பிக்கிறான். இதே பாணியில் அலெக்ஸாண்டரும் பத்து கேள்விகளுக்குப் பதில் சொல்லாதவர்கள் இறக்க வேண்டும் என்று நிபந்தனை போட்டார். இதோ ப்ளூடார்ச் (கி.பி 46-120) சொல்லுவதைப் படியுங்கள்:

“பத்து அம்மண சாமியார்களை மன்னர் பிடித்துவரச் சொன்னார். நான் இப்பொழுது கேள்விகள் கேட்பேன். யார் முதலில் தவறான விடை சொல்லுகிறீர்களோ அவர்களை முதலில் கொல்லுவேன். உங்களுக்குள் வயதில் மூத்தவரே இந்தப் போட்டிக்கு நீதிபதி.”

அலெக்ஸாண்டரின் முதல் கேள்வி : உலகில் அதிகமான எண்ணிக்கை எது. உயிர் வாழ்கின்றவர்களா? இறந்தவர்களா?
இந்து சந்யாசியின் பதில்: உயிர் வாழ்கின்றவர்களே, ஏனெனில் செத்தவர்கள்தான் இப்போது இல்லையே!

கேள்வி 2: பூமியில் பெரிய மிருகத்தை உடையது கடலா? நிலமா?
பதில்: நிலமே. ஏனெனில் பூமி என்னும் நிலப் பரப்பின் ஒரு பகுதிதானே கடல்!

கேள்வி 3: மிகவும் தந்திரமுள்ள பிராணி எது?
பதில்: இது வரை மனிதனால் கண்டுபிடிக்க முடியாதது! (அவ்வளவு தந்திரம் இருப்பதால் இதுவரை மனிதன் கையில் அகப்படவில்லை!)

கேள்வி 4: சபாவை புரட்சி செய்யும்படி ஏன் தூண்டிவிட்டீர்கள்?
பதில்: வாழ்ந்தாலும் இறந்தாலும் மானத்துடன் இருக்கவேண்டும் என்பதால்!

கேள்வி 5: முதியது எது? இரவா? பகலா?
பதில்: நாள், ஒரு நாள் !
பதில் புரியாதபடி புருவத்தை நெறித்தார் அலெக்ஸாண்டர். கடினமான கேள்விகளுக்குக் கடினமான பதில்தான் வரும் என்றார் சந்யாசி.

கேள்வி 6: ஒரு மனிதன் அதிகமாக நேசிக்கப்பட என்ன செய்ய வேண்டும்?
பதில்: சக்தி வாய்ந்தவனாக இருந்தும் மற்றவர்கள் மனதில் அச்சத்தை உண்டுபண்ணாதவனே நேசிக்கப்படுவான் (அலெக்ஸாண்டருக்குப் புரிந்திருக்கும்!!!)

கேள்வி 7: மனிதன் கடவுள் ஆவது எப்போது?
பதில்: மனிதனால் செய்ய முடியாத செயற்கரிய செயல்களைச் செய்யும்போது !

கேள்வி 8: எது வலியது? வாழ்வா? சாவா?
பதில்: வாழ்வே. எத்தனை நோய்களை வளர்க்கிறது !

கேள்வி 9: ஒரு மனிதன் எத்தனை ஆண்டுகள் வாழ வேண்டும்?
பதில்: வாழ்வதை விட சாவதே மேல் என்று எண்ணாத வரைக்கும்.

கடைசி கேள்வி: ஓ, நீதிபதி சாமியாரே, இவர்களில் யார் தவறான விடை கூறியவர்?
பதில்:ஒருவரை விட ஒருவர் மிக மோசமான பதிலைக் கொடுத்தார்கள் !
அலெக்ஸாண்டர்: அப்படியா? இப்படி ஒரு திர்ப்பை வழங்கியதால் நீர்தான் முதலில் சாகப் போகிறீர்.

சந்யாசியின் பதில்: மன்னா ! முடியாது. நீ என்ன சொன்னாய்? முதலில் தவறான பதில் சொன்னவன் தானே கொல்லப்படுவான் என்று!!

இதை ப்ளூடார்ச் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதிவைத்தது நாம் செய்த புண்ணியமே!

எலிஸ் என்ற இடத்தைச் சேர்ந்த பைரோ என்பவர் அலெக்ஸாண்டருடன் வந்ததாகவும் நிர்வாண சாமியார்களிடம் பாடம் கற்று கிரேக்க நாட்டுக்குச் சென்று அவர்களைப் போல வாழ்க்கை நடத்தியதாகவும் டயோஜெனிஸ் லேர்சியஸ் (3 ஆம் நூற்றாண்டு கிரேக்க ஆசிரியர்) என்பவர் எழுதிவைத்தார். (இவர் ஆதி சங்கரர் அடிக்கடி பயன்படுத்தும் கயிறு-பாம்பு உவமையைப் பயன்படுத்தியதால் சங்கரரின் அத்வைதத்தை அறிந்திருந்தார் என்று “ஆதி சங்கரரின் காலம்: தமிழ் இலக்கியச் சான்றுகள் என்ற கட்டுரையில் எழுதி இருக்கிறேன்).

***************
IoninnyHaro is offline


 

All times are GMT +1. The time now is 01:31 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity