Thread
:
கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம்
View Single Post
01-19-2012, 07:56 AM
#
1
Gazeboss
Join Date
Oct 2005
Posts
430
Senior Member
கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம்
Garuda-Shaped-fire-Altar-at-Panjal-Athirathram-2011.jpg
சங்கத் தமிழ் நூல்கள் சங்க கால மன்னர்கள் செய்த பல அபூர்வ யாகங்கள் குறித்து பல அதிசயமான செய்திகளைத் தெரிவிக்கின்றன. ஒரு யாகம் முடிந்தவுடன் ஒரு பார்ப்பனரும் அவர் மனைவியும் மாயமாக மறைந்துவிட்டார்கள். இதைப் பாடிய புலவரின் பெயர் பாலைக் கவுதமனார். அவர் வேண்டுகோளின் பேரில் சேர மன்னன் 10 யாகங்களைச் செய்து முடித்தவுடன் இந்த அதிசயம் நடந்தது.(காண்க: செல்வக் கடுங் கோ வாழியாதனைப் பாலைகவுதமனார் பாடிய மூன்றாம் பத்து-- பதிற்றுப் பத்து)
வேளிர் என்னும் குறுநில மன்னர்கள் தாங்கள் யாகத் தீயிலிருந்து உதித்ததாகக் கூறுகின்றனர். பஞ்ச பாண்டவர் மனைவியான திரவுபதி இப்படி யாகத்தீயில் உருவானவர். பல ராஜஸ்தானியர்கள் ,குஜராத்திகள், பஞ்சாபியர் ஆகீயோரும் இப்படிக் கூறுவது வியப்பான ஒற்றுமையாகும். கபிலரும் கூட இதே செய்தியைக் கூறுகிறார் (புறம் 201).
கரிகால் சோழன் வேத நெறி தவறாது ஆண்டவன். 2000 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட இவன் சோழ மன்னர்களில் மிகவும் புகழ்பெற்றவன். இவன் பருந்து வடிவ யாக குண்டம் அமைத்து அதில் யூபம் (கம்பம்) நட்டான் என்று புறநானூற்றுப் புலவர் பாடுகிறார்.
தூவியற் கொள்கை துகளறு மகளிரொடு
பருதி உருவிற் பல்படைப் புரிசை
எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்
வேத வேள்வி தொழில் முடித்த தூஉம்
புறம் 224 (கருங் குழலாதனார்)
கரிகாலனின் எல்லா மனைவியரும் அப்போது உடன் இருந்தனர். மனைவி உடன் இல்லாமல் வேள்வி செய்ய முடியாது. அவர்களை வேள்விக் கிழத்தியர் என்றே தமிழ் நூல்கள் கூறும்.
1008 அல்லது 10008 செங்கற்களை சுத்தி செய்து மந்திரம் கூறி ஒவ்வொரு செங்கல்லாக அடுக்குவர். சமீபத்தில் கேரளத்தில் கழுகு வடிவ யாக குண்டம் அமைத்து பெரிய யாகம் செய்தனர். கலிபோர்னியா பலகலைக் கழக ஆசிரியரகள், அறிவியல் வல்லுனர்கள் புடைசூழ இந்த யாகம் நிறைவேறியது.
தமிழ் மன்னர்கள் வேத நெறியை தங்கள் வாழ்வியல் நெறியாகக் கொண்டனர். காஞ்சி மகா சுவாமிகளும் தனது உரையில் வேதம், யாகம், பிராமணர்கள் ஆகியவற்றுக்கு சங்க காலத்தில் வழங்கும் தமிழ் சொற்களைப் பார்க்கையில் இந்தப் பண்பாடு எவ்வளவு காலத்துக்கு முன் எவ்வளவு ஆழ வேரூன்றியிருக்க வேண்டும் என்கிறார்.
வெளி நாட்டுக் காமாலைக் கண்ணர்கள் பொய்யான ஆரிய திராவிட வாதத்தை அவர்களுடைய மதத்தைப் புகுத்த நம் முன் வைத்ததால் நாம் மதி மயங்கிக் குழம்பிவிட்டோம்.
கல்யாண மந்திரங்களில் சப்தபதி என்னும் ஏழடி நடக்கும் மந்திரம் முக்கியமான மந்திரமாகும். மணப் பெண்ணும் மண மகனும் கையைப் பிடித்துக் கொண்டு தீயை வலம் வருவார்கள். இந்த மந்திரங்களின் அர்த்தம் தமிழ் திரைப் பட காதல் பாடல்களை எல்லாம் மிஞ்சிவிடும். கண்ணகியும் கோவலனும் தீயை வலம் வந்து ஐயர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டதை சிலப்பதிகாரம் பத்திரிக்கை நிருபர் தோற்றுப் போகும் அளவுக்கு அழகாக வருணிக்கிறது.
ஏழடிகள் ஒருவருடன் நடந்து சென்றால் பந்தமும் பாசமும் உறுதி பெற்றுவிடும் என்று ரிக்வேதம் சொல்லுகிறது. கரிகாலன் தன்னைப் பார்க்க வந்தவர்களை வழி அனுப்புகையில் வேத நெறிப்படி ஏழு அடிகள் கூடவே நடந்து சென்று வழி அனுப்புவானாம்.
பால்புரை புரவி நால்குடன் பூட்டிக்
காலின் ஏழடிப் பின் சென்று கோலின்
தாறு களைந்து ஏறு என்று ஏற்றி வீறு பெறு
--பொருநர் ஆற்றுப்படை வரிகள் 165-167
மதுரைக் காஞ்சி எழுதிய மாங்குடிக் கிழார் இன்னும் ஒரு அதிசிய விஷயத்தைச் சொல்லுகிறார். மற்ற எல்லா நாட்டு மன்னர்களும் சேவல் கூவும் சத்தத்தைக் கேட்டு எழுந்திருப்பான். அனால் மதுரைப் பாண்டிய மன்னனோவெனில் ஐயர்கள் முழங்கும் வேத ஒலியைக் கேட்டு எழுந்திருப்பான் என்று.
சிறுபாண் ஆற்றுப் படை எழுதிய புலவர் இன்னும் ஒரு வியப்பான விஷயத்தைச் சொல்லுகிறார். பிராமணர்கள், பாணர்கள் போன்றோர் நல்லியக்கோடன் அரண்மனையில் 24 மணி நேரமும் அனுமதியின்றி உள்ளே போகலாம் என்கிறார்.
பொருனர்க் காயினும் புலவர்க் காயினும்
அருமறை நாவின் அந்தணர்க்காயினும்
அடையா வாயில் (சிறு பாண்—வரிகள் 203-206)
பாண்டிய மன்னர்களில் மிகவும் பழைய மன்னர்களில் ஒருவன் முதுகுடுமிப் பெருவழுதி. அவனுக்கு அடைமொழியே பல் யாக சாலை முது குடுமிப் பெரு வழுதி என்பதாகும். நாடு முழுதும் யாகத் தூண்கள் இருக்குமாம் (புறம் 6,15). அவன் தலை தாழ்வது இரண்டே முறைதானாம். ஒன்று சிவன் கோவிலில், இரண்டு நாலு வேதம் படித்த அந்தணர் முன்பு (புறம் 6).
அவ்வையாருக்கு ஒரே மகிழ்ச்சி. ஏன் தெரியுமா? உலகில் 1500 ஆண்டுகளுக்குக் குடுமி பிடிச் சண்டை போட்ட ஒரே இனம் தமிழ் இனம் தான். உள் சண்டையினாலேயே அழிந்த ஒரே இனம் என்ற பெருமை உடைத்து. அப்பேற்பட்ட மூன்று தமிழ் மன்னர்களும் ஒரே மேடையில் வீற்றிருந்ததைப் பார்தவுடன் அவ்வைப் பாட்டிப் பூரித்துப் போய்விட்டார். எப்போது தெரியுமா? சோழ மன்னன் பெரு நற் கிள்ளி ராஜசூய யாகம் செய்தபோது --ஆகாயத்திலுள்ள நட்சத்திரங்களை விட நீங்கள் நிறைய நாட்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று பாடினார் (புறம் 367)
அப்போது பெருநற் கிள்ளியுடன் சேரமான் மாரி வெண்கோவும் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியும் ஒருங்கே இருந்தனர்.
ஒவ்வொரு மன்னனும் என்ன யாகம் செய்தான் என்பதை தொல்பொருட்துறை அறிஞரும் வரலாற்று நிபுணருமான டாக்டர் நாகசாமி அவர்கள் கல்வெட்டு இலக்கியச் சான்றுகளுடன் யாவரும் கேளிர் என்னும் அவரது நூலில் பட்டியல் இட்டிருக்கிறார். ஒவ்வொரு மன்னரின் கோத்திரம் என்ன என்பதையும் செப்பேட்டுச் சான்றுகளுடன் எழுதி இருக்கிறார். சிம்மவர்மன் என்ற பல்லவ மன்னன் பத்து அஸ்வமேத யாகங்களைச் செய்ததாக சிவன் வாயில் கல்வெட்டு கூறுகிறது.
புதிய விஷயம்: அஸ்வமேத பாண்டியன்
குப்தர்கள் அஸ்வமேத யாகம் செய்தவுடன் குதிரைப் படத்துடன் தங்க நாணயங்களை வெளியிட்டார்கள். அப்படி தமிழ் மன்னர்களின் தங்க நாணயம் கிடைக்க வில்லை. ஆனால் ஒரு பாண்டிய மன்னனின் செப்பு நாணயம் குதிரைப் படத்துடன் கிடைத்துள்ளது. இது முதுகுடுமிப் பெருவழுதியாக இருக்கலாம். ஏனெனில் கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த உலகின் மாபெரும் கவிஞர்களில் ஒருவரான காளிதாசன் அவனது ரகுவம்ச காவியத்தில் பாண்டிய மன்னர்கள் அவப்ருத ஸ்நானத்தால் நனைந்ததாக எழுதி இருக்கிறார். அவரது காலத்தில் வாழ்ந்த முதுகுடுமிப் பெருவழுதியையே இது குறிக்கிறது. யாகம் செய்யும்போது குளிப்பதை அவப்ருத ஸ்நானம் என்று அழைப்பர். காளிதாசனின் காலம் கி.மு முதல் நூற்றாண்டு என்பதற்கு சங்கத் தமிழில் 200க்கும் மேலான சான்றுகள் இருக்கின்றன. (இதை எனது காளிதாசனின் காலம் என்ற கட்டுரையில் காண்க).
‘பொய்யா நாவிற் புகழ்’ உடைய கபிலர் தரும் இன்னொரு வியப்பான தகவல் (புறம்122): மலையமான் திருமுடிக்காரியின் நாட்டை யாரும் வெல்லவும் முடியாது, படை எடுக்கவும் முடியாதாம். ஏனேனில் நாடு முழுதையும் அவன் ஏற்கனவே அந்தணர்க்கு தானமாகக் கொடுத்துவிட்டானாம்!
கடல் கொளப்படா அது, உடலுநர் ஊக்கார்,
கழல் புனை திருந்து அடிக் காரி! நின் நாடே;அழல் புறந்தரூஉம் அந்தணரதுவே;( புறம் 122—கபிலர்)
வேதங்களை ஏற்றுப் போற்றும் தமிழ் இலக்கியங்கள் என்ற நூலில் திரு கே சி இலக்குமிநாராயணன் , ஒரு கலைக் களஞ்சியம் கொள்ளும் அளவுக்கு தகவல்கள் தந்துள்ளார் என்பதையும் இங்கே குறிப்பது பொருத்தமாக இருக்கும்.
***********************
Quote
Gazeboss
View Public Profile
Find More Posts by Gazeboss
All times are GMT +1. The time now is
08:34 PM
.