Reply to Thread New Thread |
![]() |
#1 |
|
(கேள்விகள் ச. சுவாமிநாதனின் கற்பனை, பதில்கள் உண்மை)
கேள்வி: கம்பரே நீர் வணங்கும் கடவுள் யார்? உலகம் யாவையும் தாம் உளவாக்கலும், நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா அலகு இலா விளையாடு உடையார்- அவர் தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே கேள்வி: எவ்வளவோ ராமாயணம் இருக்கும்போது தாங்களும் பாடிய காரணம்? ஆசைபற்றி அறையலுற்றேன் மற்றிக் காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ! கேள்வி: உமது ஆசை நியாயமான ஆசையே உம்மை விட இராமன் புகழ் பாட வேறு யாருக்கு அருகதை? அது சரி, முதலில் கடவுள் இருக்கிறாரா? இல்லையா? ஒன்றே என்னின் ஒன்றே ஆம்: பல என்று உரைக்கின் பலவே ஆம்: அன்றே என்னின் அன்றே அம்: ஆம் என்று உரைக்கின் ஆமே ஆம்: இன்றே என்னின் இன்றே ஆம் உளது என்று உரைக்கின் உளதே ஆம் நன்றே நம்பி குடி வாழ்க்கை! நமக்கு இங்கு என்னோ பிழைப்பு? அம்மா! (கடவுள் வாழ்த்து,யுத்தகாண்டம்) கேள்வி: கோசலநாட்டில் உண்மை கூட இல்லையாமே! வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்; திண்மை இல்லை, நேர் செறுநர் இன்மையால்; உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்; ஒண்மை இல்லை,பல் கேள்வி ஒங்கலால். கேள்வி: தாங்கள் ராமனைப் போற்றுவது ஏன்? இனிய சொல்லினன்: ஈகையன்: எண்ணினன்: வினையன்: தூயன்: விழுமியன்: வென்றியன்: நினையும் நீதி கடவான் எனின், அனைய மன்னர்க்கு அழிவும் உண்டாம் கொலோ? கேள்வி: ராமன் இருக்கும் இடத்தில் காமன் இரான் என்ற பழமொழிக்குக் காரணம் என்னவோ? “வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய் “இந்த இப் பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன்” என்ற செவ்வரம் தந்த வார்த்தை திருச் செவி சாற்றுவாய் கேள்வி: அட, ராமன் ஏக பத்னி விரதன் என்று சீதையே சர்ட்டிபிகேட் கொடுத்துவிட்டாளா? யாதும் ஊரே,யாவரும் கேளிர் என்பது ராமனின் கொள்கையாமே? குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு:பின் குன்று சூழ்வான் மகனொடும் அறுவர் ஆனேம்:எம்முறை அன்பின் வந்த அகனமர்க் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்! புகலருங் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை! (6-4-143) கேள்வி: வீடணனை நீர் ஏழாவது தம்பியாக ஏற்றது உலகம் காணாத புதுமை. சீதை பற்றி உங்கள் மதிப்பீடு? பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்கச் செஞ்செவிய கஞ்ச நிமிர் சீறடியளாகி அஞ்சொலின மஞ்சையென அன்னம் என மின்னும் வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள் அமிழ்தின் வந்த அமிழ்து (6-3935), அருந்ததி கற்பின் தேவி (5-468),அழ்கினுக்கு அழகு செய்தாள் (4-899) கருந்தடங் கண்ணீனாள்(4-417), கரும்பு உண்ட சொல்(3-908), சிந்துரப் பவளச் செவ்வாயாள் (6-3938) கற்பினுக்கு அணி (5-1269), தண்டமிழ் யாழினும் இனிய சொற்கிளி (2-774) கேள்வி: அற்புதம்! கொடுமையான கைகேயியின் வார்த்தைகளைக் கூட மென்மையான அழகான சொற்களில் கவிதையாகப் புனைந்த பெரும் கவிஞர் அல்லவா நீவீர்? “ஆழி சூழ் உலகமெல்லாம் பரதனே ஆள, நீ போய், தாழ் இருஞ் சடைகள் தாங்கி,, அருந்தவம் மேற்கொண்டு, பூழி வெங் கானம் நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடி, ஏழ் இரண்டு ஆண்டின் வா” என்று இயம்பினன் அரசன் என்றாள். கேள்வி: நன்றி, சதிகாரக் கைகேயி இந்த வார்த்தைகளை அரசன் தசரதன் மீது சுமத்தி விட்டாளா? பரதனை 1000 ராமனுக்கும் மேலானவன் என்று புகழ்ந்தீர்களா? தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னை தீவினை என்ன நீத்து சிந்தனை முகத்தில் தேக்கி போயினை என்ற போழ்து, புகழினோய் தண்மை கண்டால் ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா கேள்வி: அனுமன் பேசத்தெரிந்தவனாமே? இல்லாத உலகத்து எங்கும் ஈங்கிவன் இசைகள் கூறக் கல்லாத கலையும் வேதக் கடலுமே-எனும் காட்சி சொல்லாலே தோன்றிற்றன்றோ யார் கொல் இச் சொல்லின் செல்வன் வில்லார் தோள் இளைய வீர! விரிஞ்சனோ? விடை வலானோ? கேள்வி: இராமனின் சஸ்பென்ஸைப் போக்க அனுமன் ஏதோ அழகாகப் பேசினாராமே? கண்டெனென், கற்பினுக்கு அணியை, கண்களால் தெண் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்; அண்டர் நாயக! இனி, துறத்தி, ஐயமும் பண்டு உள துயரும்’ என்று, அனுமன் பன்னுவான் கேள்வி: எங்கள் கவிஞர் கண்ணதாசன் பயன்படுத்திய உமது பாட்டு என்னவோ? மைவண்ணத்து அரக்கி போரில் மழைவண்ணத்து அண்ணலே உன் கைவண்ணம் அங்கு கண்டேன்: கால் வண்ணம் இங்கு கண்டேன் கேள்வி: தாடகை வதத்தையும் அகலியையின் சாப விமோசனத்தையும் வண்ணச் சொற்களால் அலங்கரித்துவிட்டீர். போகட்டும், அகத்தியனுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு? உழக்கும் மறை நாலினும், உயர்ந்து உலகம் ஓதும் வழக்கினும், மதிக் கவியினும், மரபின் நாடி நிழல்பொலி கணிச்சி மணி எற்றி உமிழ் செங்கண் தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ்_தந்தவர் (2671) நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தவர் (2666) கேள்வி: கண்டதும் காதலில் உங்களுக்கு நம்பிக்கை உண்டு போலும்! எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான் ;அவளும் நோக்கினாள் கேள்வி: போர்க்களத்தில் கூட ராமன் காட்டிய உயரிய பண்பு? ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு நாளை வா’ என நல்கினந்-நாகு இளம் கமுகின் வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல் கேள்வி: அது சரி,பெண்களை இப்படி மட்டம் தட்டலாமா? தூமகேது புவிக்கெனத் தோன்றிய வாம மேகலை மங்கையரால் வரும் காமம் இல்லை எனின் கடுங்கேடு எனும் நாமம் இல்லை:நரகமும் இல்லை கேள்வி: புரிகிறது,புரிகிறது, கண்மூடித்தனமான காமம் கூடாது. நன்றி மறக்காமல் சடையப்ப வள்ளலைப் போற்றிப் புகழ்ந்து தள்ளுகிறீர்களாமே? அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடை வாள் ஏந்தப் பரதன் வெண் குடை கவிப்ப இருவரும் கவரி கற்ற விரை செறி குழலி ஓங்க வெண்ணெய்மன் சடையன் வண்மை மரபுளோன் கொடுப்ப வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி (10327) நன்றி, கம்பரே உமக்கு 60 நொடிகள் என்ன, 60 நாட்கள் கொடுத்தாலும் எம் மக்கள் ரசிப்பார்கள்.அற்புதமான, அழகான கவிதைகள்!!! |
![]() |
![]() |
#2 |
|
|
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|