ஜெயமோகன்[/url]]யார் அங்கீரித்தாலும் அங்கீகரிக்கவில்லை என்றாலும் தமிழ் செம்மொழிதான். தமிழைச் செம்மொழியாக நினைப்பது என்பது தமிழர்கள் மனநிலையில்தான் இருக்கிறது. இரண்டாவதாக நூல்கள் வழியாக உலக அறிஞர்கள் மத்தியில் தமிழ் வாழும் செம்மொழி என நிறுவும் பொறுப்பு நம்மிடம்தான் உள்ளது. இந்த இரண்டையுமே நாம் செய்யவில்லை. நமக்கு மொழி சார்ந்த உள்ளீடற்ற பீடு இருக்கிறதேத் தவிர செம்மொழி என்ற உண்மையான உணர்வு கிடையாது. அப்படி இருந்தால் இந்தளவிற்குத் தமிழைக் கைவிட்டுத் தமிழுக்கு இரண்டாம் இடத்தைக் கொடுக்கும் மக்களாக இருந்திருக்க மாட்டோம். தமிழ்ச் செம்மொழி,ஆனால் தமிழைப்படிக்க மாட்டோம், தமிழ் இலக்கியங்களைப் படிக்க மாட்டோம், தமிழ் நவீன இலக்கியங்களைப் படிக்க மாட்டோம். எங்கும் தமிழில் பேச மாட்டோம் – இதுதான் நம் பழக்கமாக இருக்கிறது. தமிழ் செம்மொழியா இல்லையா என்பதை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டிய அவசியமில்லை. முதலில் தமிழ் மக்களாகிய நாம் அங்கீகரிக்க வேண்டும் . இரண்டாவதாக தமிழை செம்மொழியை அங்கீகரிக்க வேண்டியவர்கள் உலக அளவில் இருக்கும் அறிஞர்கள். உலக அளவில் தமிழ் பயிற்றுவிக்க கூடிய பல பல்கலைக்கழகங்கள், பீடங்கள் இன்று மூடக்கூடிய நிலையில் உள்ளன. நான் பெர்க்லி பல்கலைக்கழகத்திற்குப் போன போது அறிஞர் ஜார்ஜ் எல் ஹார்ட்டை சந்தித்தேன் அங்கும் தமிழ்த்துறை மூடக்கூடிய நிலையில்தான் இருக்கிறது என்றார். மாணவர்கள் வருவதில்லை. நிதியுதவியில்லை. போதுமான ஆதரவு இல்லை. அங்குள்ள புலம் பெயர்ந்த தமிழர்களின் நிதியுதவியால்தான் அந்த துறை இயங்கிக்கொண்டிருக்கிறது. அது எந்த நேரத்திலும் மூடப்படும் என்ற நிலையில்தான் உள்ளது. அநேகமாக அவர்தான் கடைசிப்பேராசிரியாராக இருப்பார் போல் தோன்றுகிறது. ஆக இந்நிலையில்தான் தமிழ் உலக முழுதும் இருக்கிறது. தமிழ் உலகின் செம்மொழிகளில் ஒன்றுதான், இம்மொழியை ஆராய வேண்டியது அவசியம், தமிழர்களின் உலகத்தைத் தெரிந்துகொளவதற்கும். உலகத்தின் பண்பாடுகளை மரபுகளை தெரிந்து கொள்வதற்கும் தமிழை ஆராய வேண்டியது அவசியம் என்ற எண்ணத்தை உலக அறிஞர்கள் உள்ளத்தில் உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்க தமிழில் பேரரறிஞர்கள் தோன்ற வேண்டும். இந்தப் பேரரறிஞர்கள் நூலகள் தொடர்ச்சியாக உலக அறிஞர்கள் மத்தியில் போக வேண்டும். கடந்த 50 ஆண்டுகளில் அப்படி உலக அளவில் போன தமிழறிஞர் நூல்கள் எத்தனை. அப்படி போவதற்கு தகுதியான தமிழ் அறிஞர்கள் எத்தனை பேர் இங்கிருக்கிறார்கள். இன்றைக்கு இருக்கும் பல்கலைக்கழகங்களில் தமிழாய்வு எப்படி இருக்கிறது என்றால் ரொம்ப வருத்தப்படக்கூடிய நிலையில்தான் உள்ள்து. கடந்த 30 அல்லது 40 வருடங்களாகத் தமிழாய்வுத் துறையில் என்ன நடக்கிறது என்றால் ஏற்கனவே வந்த ஆய்வுகளை திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டிருக்கும் நிலைதான் உள்ளது. தமிழாய்வுகளின் பொற்காலம் என்று சொன்னால், தொ.போ.மீ., மு.அருணாச்சலம் போன்றோரோடு முடிந்தது. அந்த நூல்களில் இருப்பதைக் கூட படிக்காமல், அதிலிருந்து அங்கும் இங்கும் பிரதியெடுத்து பி.ஹெச்.டி வாங்கும் நிலைதான் இன்று உள்ளது. நான் தொடர்ந்து பல்கலைக் கழக ஆய்வுகளைக் கவனித்து வரக்கூடியவன் என்ற முறையில் சொல்கிறேன். கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழாய்வு என்பது அற்றுப் போய்விட்டது. தேடினல் உருப்படியாக ஒன்று இரண்டு கூட இல்லை. ஏன், நமக்கு ஒரு தனி தமிழ்ப்பல்கலைக்கழகம் இருக்கிறது. இத்தனை வருடத்தில் ஒரு தமிழ்க்கலைக் களஞ்சியத்தைக் கூட பதிப்பித்து முடிக்கவில்லை. வாழ்வியல் களஞ்சியம் என்று ஒரு தொகுப்பு போட்டார்கள் அதை இன்னும் முடிக்கவில்லை. ஒரு நல்ல கலைக் களஞ்சியம் தமிழில் இதுவரை இல்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழ்க் கலைக்களஞ்சியம் ஒன்று போட்டார்கள் அது மறுபதிப்பு கூட வரவில்லை. அதை ரீ-பிரிண்ட்தான் போட்டிருக்கிறார்கள். ஆகவே தமிழறிஞர்கள் என்ற ஒரு வம்சமே அற்றுப் போய்விட்டது. இங்கு தமிழறிஞர்களே கிடையாது. அரசியல் காற்றுக்கு ஏற்றபடி பாய்விரித்த்து மேலே போகக்கூடிய புரபஸனலிஸ்டுகள், தொழில் லாபத்தை மட்டுமே விரும்பக்கூடிய பேராசிரியகள் நிரம்பியிருக்கிறார்கள். தமிழகத்தில் தமிழ் மொழி மேல் தமிழர்களுக்கு அக்கறையில்லை. உலகம் முழுதும் 10 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதில் 1 கோடி பேர்கள் கூடத் தமிழ் புத்தகங்களை வாங்கிப் படிப்பதில்லை. 5000 வாசகர்கள் கூட தமிழில் இல்லை எனும் போது தமிழ் செம்மொழியானால் என்ன ஆகாவிட்டால் என்ன? இவர்கள்தானே தமிழைச் செம்மொழியாக்க வேண்டும். தமிழறிஞர்கள் பெருகி தமிழின் வளத்தையும் பெருமையையும் உலகிற்கு எடுத்துச் சொல்லவேண்டிய நேரத்தில் அதற்கான தகுதிகொண்ட இரண்டு மூன்று தமிழறிஞர்கள் கூட இல்லை என்று சொன்னால் பிறகு எப்படி அவர்கள் தமிழறிஞர்கள் ஆவார்கள். ஆக இப்போது எஞ்சியிருப்பது மத்திய அரசு இதற்காக தரக்கூடிய நிதியாதரங்களை பெறுவதற்கான முயற்சிமட்டுமே. மத்திய அரசு தமிழைச் செம்மொழிப் பட்டியலில் சேர்த்திருப்பதன் மூலம் தமிழுக்கு கூடுதலாக சில கோடி ரூபாய்கள் கிடைக்கும். இதில் இது ஒன்றுதான் லாபம். சரி, செம்மொழியாக அறிவிக்கப்பட்ட கடந்த 3 ஆண்டுகளில் கிடைத்த நிதிகளைக் கொண்டு தமிழ்வளர்ச்சிக்கு என்ன நடந்திருக்கிறது என படைப்பாளர்கள் கேட்டுக் கொண்டால் அதனால் எந்தப் பயனும் இல்லை என தெரிய வரும். இப்போது தமிழுக்கு உயர் தமிழ் ஆய்வு மையம் என்ற ஒன்று இருக்கிறது. ஒன்று மைசூரில் இன்னொன்று சென்னையிலிருக்கிறது. இத்தனை வருடங்களாக என்ன செய்தார்கள். இன்றைக்கும் புத்தக சந்தையில் போய் சங்க இலக்கியம் பிழை திருத்தப்பட்ட ஒரு பதிப்பை வாங்க வேண்டும் என்றால் அது தனியார் பதிப்பகம் வெளிடப்பட்ட நூலாகத்தான் இருக்கும் அதிகாரப்பூர்வமான ஒரு தொகுதி கிடையாது. அப்படி இருந்தால் கூட முழுக்க முழுக்க அது தவறாகத்தான் இருக்கும். கடந்த 50 வருடங்களில் மாஸ்டர் பீஸ் எனச் சொல்லக்கூடிய நூல்கள் வந்திருக்கிஇன்றன . அந்த நூல்களுக்கு ஒரு ஒழுங்கான மறுபதிப்பு போடக்கூட செம்மொழி அந்தஸ்தால் கிடைத்த கோடிக் கணக்கான ரூபாய்களால் முடியவில்லை. ஒரு உதாரணம் சொல்லலாம். விபுலாணந்த அடிகளின் யாழ்நூல் தமிழிசை பற்றிய ஒரு மாபெரும் நூலாகும். அந்த நூலை கனடாவைச் சேர்ந்த சிவதாஸ் என்ற வணிகர் தனது சொந்த செலவில் மறுபதிப்பு போட்டிருக்கிறார். 50 வருடங்களுக்கு பிறகு, கருணாமிர்தசாகரம் எனும் தஞ்சை ஆபிரகாம பண்டிதருடைய நூல் இன்றைக்கு வரை மறுபதிப்பு போடவில்லை. தமிழாய்வின் ஒரு பொற்காலம் அப்படியே அஸ்தமித்து போய்விட்டது. பல நூல்கள் சந்தையில் கிடைப்பதில்லை. வையாப்புரிப்பிள்ளையின் பேரகராதி விற்காமல் கிடக்கிறது. ஒரு அகராதி என்பது வருடம் தோறும் வர வேண்டும் அப்போதுதான் அதை வாழும் அகராதி என்று சொல்வார்கள். 5 வருடம் வரவில்லை என்றால் அது செத்த அகராதி என்பார்கள். ஆனால் 50 வருடமாக பதிப்பிக்கபடாத அகராதியை பேரகராதி என்று சொல்கிறோம். ஆகவே செம்மொழிக்காக கிடைக்கும் நிதியை தமிழ் வளர்ச்சிக்காக பயன்படுத்த போவதில்லை. அதனால் செம்மொழி என்பது ஒரு அரசியல் வார்த்தையே தவிர அதனால் மூன்று தளங்களிலும் பயன் கிடையாது. அதனால் தமிழர்கள் தமிழை வாசிக்கவோ எழுதவோ எந்த மறுமலர்ச்சியும் வந்துவிடாது. உலக அளவில் தமிழை எடுத்துப்போகும் முயற்சியும் வெற்றியடையாது. செம்மொழிக்கு அளிக்கபட்ட நிதி மதிப்பிற்குரிய வகையில் பயன்படுத்தபட போவதில்லை. எனவே செம்மொழி என்பது முழுக்க முழுக்க அரசியல் சம்பத்தபட்ட வார்த்தைதானே தவிர வேறொன்றும் இல்லை. என் போன்ற சிந்தனையாளர்களுக்கோ படைப்பாளர்களுக்கோ எந்தப் பங்களிப்பும் இல்லை அதனால் எனக்கு இதில் ஆர்வமும் இல்லை.