Reply to Thread New Thread |
![]() |
#1 |
|
சகலகலாவல்லி மாலை பாடல் 2
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில் கூடும் பசும்பொற் கொடியே கனதனக்குன்றும் ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பே சகலகலாவல்லியே சகலகலா வல்லியே - எல்லாக் கலைகளையும் காத்து அருள்பவளே! கலைவாணியே! பங்கயாசனத்தில் கூடும் - தாமரை மலர் இருக்கையில் வீற்றிருக்கும் பசும்பொற் கொடியே - பசும்பொன்னால் செய்யப்பட்டக் கொடி போன்றவளே! கனதனக் குன்றும் ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பே - பெருத்தக் குன்றினைப் போன்ற கொங்கைகளும் ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பைப் போல் இனியவளே! நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியில் பணித்தருள்வாய் - நானும் இந்த உலகமும் விரும்பும், பொருட்சுவையும் சொற்சுவையும் தோய்ந்து வரும், நான்கு விதமான கவிதைகளையும் பாடும் பணியில் என்னைப் பணித்தருள்வாய்! ---------- நான்குவிதமான கவிதைகள் - ஆசுகவி, மதுரகவி, சித்திரக் கவி, வித்தாரக் கவி என்று கவிதைகள் நான்கு வகை. நினைத்தவுடன் புதுமையாக இதுவரை யாரும் பாடாத ஒரு பொருளைப்பற்றிப் பாடுவது ஆசுகவி. இசையுடன் கூடி இனிமையான சொற்களும் உவமைகளும் கூடி வரும்படிப் பாடுவது மதுரகவி. தேர் போன்ற ஒரு சித்திரத்தில் வைக்கலாம் படி சொற்களை அழகுற அமைத்துப் பாடுவது சித்திரக் கவி. பலவிதமான வடிவங்களில் அமைத்துப் பாடுவது வித்தாரக் கவி. |
![]() |
![]() |
#2 |
|
சகலகலாவல்லி மாலை பாடல் 10
மண்கொண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என் பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம் விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே! மண் கொண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் - மண்ணுலகில் மன்னர்கள் எல்லாரும் தம் அரசாட்சியின் சின்னமாக வெண்கொற்றக் குடையின் கீழ் சிம்மாசனத்தில் வீற்றிருக்கின்றனர். சிற்றரசர்களின் வெண்குடைகள் பேரரசர்களின் கீழ் அமைகின்றன. அவ்வாறு மண்ணுலகில் உள்ள எல்லா வெண்குடைகளும் தனக்குக் கீழாக பேரரசனாக விளங்குகின்ற மன்னரும் என் பண்கண்ட அளவில் பணியச் செய்வாய் - என் பாடல்களைக் கண்டவுடனே தகுந்த மரியாதை கொடுத்துப் பணியும் படி அருள் செய்வாய். படைப்போன் முதலாம் விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் - படைக்கும் கடவுளான பிரம்மதேவன் முதற்கொண்டு விண்ணில் வாழும் தெய்வங்கள் பலகோடி இருப்பினும் விளம்பில் உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ சகலகலாவல்லியே - உன்னைப் போல் கண்கண்ட தெய்வம் உள்ளதோ? சொல்லுவாய் கலைவாணியே! ------------------------ சகலகலாவல்லி மாலை நிறைவு |
![]() |
![]() |
#3 |
|
நண்பர்களே,
ஹிந்து மதத்தில் வேதமுதல்வன் சிவன் வழிபாடு நம் அனைவர்க்கும் மிகமுக்கியமானது. இங்கே கோயில் என்றால் பொன்னம்பலம்- சிதம்பரம். ஆனால் முக்திக்கு காசி-விசுவநாதர் என்பது நம்பிக்கை. இக்கோயில் இஸ்லாமியரால் பூட்டப்பட்டு அக்கோயிலின் மிக அருகில் ஞான்வாபி மசூதி என எழுப்பி பூஜைகள் நின்றன. தென்னகத்திலிரூந்து மக்கள் காசி-விசுவநாதர் வழிபட்டு கங்கை நீரை கொணர்ந்து ராமேஸ்வரம் கோயிலில் அபிஷேகம் செய்வது மிக முக்கியமானது. காசி-விசுவநாதர் வழிபட முடியாமல் மக்கள் வருந்த்ய போது - தமிழகத்திலிருந்து சென்ற குமரகுருபரர் மிக வருந்தி ஒரு துபாஷியை(மொழிபெயர்ப்பாளர்) துணை கொண்டு சுல்தானை கோயிலைத் திறந்து வழிபாடு செய்ய கேட்ட போது உன் வேண்டுகோளை எனக்கு நேரடியாக சொல்ல கூட தெரியாத உனக்கு ஏதும் உதவ முடியாது என கேலி பேசி அனுப்பினார். மனம் வெதும்பிய குமரகுருபரர் வருத்தத்தோடு சரஸ்வதி தேவியை தூய தமிழில் 10 பாடல்கள் சகலகலாவல்லி மாலை என பாடினார். சகலகலாவல்லி மாலை பாடிட ஹிந்துஸ்தனி , உருது மொழிகள் ஓர் இரவில் பெற்றிட சுல்தானிடம் அவர் மொழியில் பேசிட, அதிசயம் புரிய காசி கோயில் திறக்கப் பட்டது. குமரகுருபரர் வேண்டுகோள்ப்படி அங்கு தமிழகத்திலிருந்து வரும் பக்தர் தங்க காசி மடம் என நிலம் பெற்று நிருவினார். இப்பாடல் படித்து துதிப்போருக்கு கல்வி ஞானம் பெருகும். அப்பாடல்கள் பொருளோடு நான் தருகிறேன். (இணையத்தில் இறக்கியது) [b]சகலகலாவல்லி மாலை பாடல் 1 [/b] வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ளத் தண்தாமரைக்குத் தகாது கொலோ? சகம் ஏழும் அளித்து உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே! சகலகலாவல்லியே - எல்லாக் கலைகளையும் காத்து அளிப்பவளே! கலைமகளே! சகம் ஏழும் அளித்து உண்டான் உறங்க - ஏழு உலகங்களையும் காக்கும் தொழில் புரியும் நாராயணன் பிரளயக் காலத்தில் அவற்றைக் காப்பதற்காக அவற்றையெல்லாம் உண்டு தன் வயிற்றில் வைத்துக் காப்பாற்றிப் பின் பாற்கடலில் உறங்கி கொண்டிருக்க ஒழித்தான் பித்தாக - எல்லாவற்றையும் அழிக்கும் தொழில் புரியும் அண்ணல் சிவபெருமான் பித்தனாய் ஊழித் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்க உண்டாக்கும் வண்ணம் கண்டான் - பிரளயத்தின் முடிவில் மீண்டும் உலகங்களையும் உயிர்களையும் உண்டாக்கும் வண்ணம் பார்த்திருக்கும், படைக்கும் தொழில் புரியும் நான்முகனாம் பிரம்ம தேவன் சுவைகொள் கரும்பே - ஆசையுடன் சுவைக்கும் கரும்பு போன்றவளே! வெண்தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத் தண்தாமரைக்குத் தகாது கொலோ? - நீ வெண்தாமரையில் வீற்றிருக்கிறாய். அதிலேயே இருக்கிறாயே. என் உள்ளமும் வெள்ளை உள்ளம் தானே? அதையும் ஒரு குளிர்ந்த வெண்தாமரை என்றுக் கருதி உன் பாதத்தை அங்கேயும் வைக்கலாகாதா? என் உள்ளத்திற்கு உன் பாதங்களைத் தாங்கும் பாக்கியம் கிடைக்காதா? உனது அருள் எனக்குக் கிடைக்காதா? |
![]() |
![]() |
#4 |
|
சகலகலாவல்லி மாலை பாடல் 3
அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து உன் அருட்கடலில் குளிக்கும் படிக்கு என்று கூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே! அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து - என்னைக் காத்து அருளும் செழுந்தமிழாகிய தெளிந்த அமுதினை ஆரவாரத்துடன் உண்டு உன் அருட்கடலில் குளிக்கும் படிக்கு என்று கூடும்கொலோ? - உன் அருளாகிய கடலில் மூழ்கி எழுந்து உட்குடைந்து குளிக்கும் படி என்று நேருமோ? உளம்கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர் - உள்ளத்தில் ஆழ்ந்து நினைக்க தெளிவினை அள்ளித் தரும் பாடல்களைப் பாடும் புலவர்கள் கவிமழை சிந்தக் கண்டு - கவிதை மழை சிந்த அதனைக் கண்டு களிக்கும் கலாப மயிலே! - மகிழும் அழகிய தோகை கொண்ட மயில் போன்றவளே! சகலகலாவல்லியே! - கலைவாணியே! |
![]() |
![]() |
#5 |
|
சகலகலாவல்லி மாலை பாடல் 4
தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும் தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் - எல்லோரும் பாடிப் பரவும் பாடல்களும், எல்லாத் துறைகளிலும் இயங்கும் கல்வியும், சொற்சுவைதோய் வாக்கும் - சொல்லும் ஒவ்வொரு சொல்லும் இனிமையுடன் வலிமை பொருந்தி நிற்கும் பேச்சுத்திறமையும், வடநூல்கடலும் - வடதிசையில் வாழ்ந்தவர் இயற்றிய கடல் போன்ற நூல்களும் (வடமொழியில் இருக்கும் கடல் போன்ற நூல்களும்), தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் - இன்பத்தையும் அறிவையும் தேக்கி நிற்கும் செழுமையான தமிழ்ச் செல்வங்களான நூல்களும், பெருகப் பணித்தருள்வாய்! - எனக்கு கிடைத்து நின்று நிலைத்துப் பெருக நீ அருள் புரிவாய்! தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! |
![]() |
![]() |
#6 |
|
சகலகலாவல்லி மாலை பாடல் 5
பஞ்சு அப்பு இதம் தரும் செய்ய பொற் பாத பங்கேருகம் என் நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து அஞ்சத்துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக் கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய் சகலகலாவல்லியே நெடுந்தாள் கமலத்து அஞ்சத்துவசம் உயர்த்தோன் - நீண்ட அழகிய இதழ்களைக் கொண்ட தாமரையில் அமர்ந்திருக்கும் மென்மை மிகுந்த அன்னப் பறவையை கொடியாக உடைய பிரம்ம தேவனின் செந்நாவும் - செம்மையான திருநாவையும் அகமும் - உள்ளத்தையும் வெள்ளைக் கஞ்சத் தவிசு ஒத்திருந்தாய் சகலகலாவல்லியே - வெள்ளைத் தாமரையாய் செய்த சிம்மாசனமாகக் கொண்டு வீற்றிருந்தாய் சகலகலாவல்லியாகிய கலைவாணியன்னையே! பஞ்சு அப்பு இதம் தரும் செய்ய பொற் பாத பங்கேருகம் - பஞ்சினைப் போல் இனிமைதரும் மென்மையான உன் திருவடித் தாமரைகள் என் நெஞ்சத் தடத்து அலராதது என்னே? - என் நெஞ்சமாகிய நீர்நிலையில் மலராதது என்ன காரணத்தினால்? *********** அன்னப் பறவை மென்மையானது. தூய்மையானது. அசுத்தங்களைக் கண்டு அஞ்சுவது. அதனால் அன்னக் கொடியை அஞ்சத் துவசம் என்கிறார். துவசம் என்பது த்வஜம் என்னும் வடமொழிச் சொல்லின் தமிழ் வடிவம். அன்னை கலைவாணி பிரம்ம தேவனின் நாவிலும் மனத்திலும் தங்கியுள்ளாள் என்பது ஐதிகம். மும்மூர்த்திகளும் தம் தம் தேவியரை தம் உடம்பில் ஒரு பகுதியில் வைத்திருக்கிறார்கள். பிரம்மதேவன் கலைமகளை நாவிலும், நாராயணன் அலைமகளை நெஞ்சிலும், சிவபெருமான் மலைமகளை உடலின் இடப்புறத்திலும் வைத்திருக்கிறார்கள். |
![]() |
![]() |
#7 |
|
சகலகலாவல்லி மாலை பாடல் 6
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான் எண்ணும் பொழுது எளிது எய்த நல்காய் எழுதா மறையும் விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலாவல்லியே பண்ணும் - இசையும் பரதமும் - ஆடலும் கல்வியும் - எல்லாவிதமான கலைகளும் கல்விகளும் தீஞ்சொல் பனுவலும் - இனிமையான சொற்கள் நிறைந்து மீண்டும் மீண்டும் (பன்னிப் பன்னிப்) பாடும் படியான பாடல்களும் யான் எண்ணும் பொழுது எளிது எய்த நல்காய் - நான் நினைத்தவுடனே எளிதாய் எய்துமாறு அருளுவாய்! எழுதா மறையும் - நூலைச் செய்தவர் யாருமே இல்லாத வேதங்களும் விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் - வான், மண், நீர், நெருப்பு, காற்று என்னும் ஐம்பூதங்களும் அன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலாவல்லியே - உன் அன்பர் கண்களிலும் கருத்தினிலும் நிறைந்தாயே கலைவாணியே! |
![]() |
![]() |
#8 |
|
சகலகலாவல்லி மாலை பாடல் 7
பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால் கூட்டும் படி நின் கடைக்கண் நல்காய் உளம் கொண்டு தொண்டர் தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம் காட்டும் வெள் ஓதிமப் பேடே சகலகலாவல்லியே! பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் - நல்ல பாடல்களும், அதில் நல்ல பொருளும், அந்த பொருளால் நல்ல நல்ல பயன்களும் என்பால் கூட்டும் படி நின் கடைக்கண் நல்காய் - என்னிடம் இருந்து உருவாகும் படி உன் கடைக்கண்ணால் பார்த்து அருள் புரிவாய். உளம் கொண்டு தொண்டர் தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் - உள்ளத்தில் உறுதியும் தெளிவும் கொண்டு உன் தொண்டர்கள் தீட்டும் கலைத் தமிழ் தீம்பால் அமுதமானது தெளிக்கும் வண்ணம் காட்டும் வெள் ஓதிமப் பேடே - மற்றவர்கள் எழுதும் சுவையில்லாதவற்றிலிருந்து பிரித்துக் காட்டி தெளிவிக்கும் (பாலினை நீரிலிருந்து பிரித்துக் காட்டும்) வெண்மையான பெண் அன்னமே சகலகலாவல்லியே - எல்லாக் கலைகளையும் அருளும் கலைவாணியே. *** எல்லாராலும் பாட்டு எழுத முடிவதில்லை. அப்படியே பாட்டெழுதினாலும் பொருட்செறிவுடன் எழுத எல்லாராலும் முடிவதில்லை. அப்படியே பொருட் செறிவுடன் எழுதினாலும் எல்லாருக்கும் பயன் தரும் பொருளுடன் எழுத எல்லாராலும் முடிவதில்லை. அப்படி எழுதுவது கலைவாணியின் அருள் உள்ளவருக்கு மட்டுமே முடியும். அவள் அருள் பெற்றவர்களும் தமிழ்ப்பாடல்கள் எழுதுவார்கள்; அருள் பெறாதவர்களும் எழுதுவார்கள். அருள் பெற்றவர் எழுதுவது தீம்பால் அமுதமென இருக்கும். மற்றவர் எழுதுவது வெறும் நீரென இருக்கும். அவை இரண்டினையும் பிரித்து நமக்கு தீம்பால் அமுதத்தை தெளிவாக்கிக் கொடுக்கும் அன்னப் பறவை போன்றவள் கலைவாணி. |
![]() |
![]() |
#9 |
|
|
![]() |
![]() |
#10 |
|
|
![]() |
![]() |
#11 |
|
சகலகலாவல்லி மாலை பாடல் 8
சொல்விற்பனமும் அவதானமும் கவி சொல்ல வல்ல நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளின ஆசனம் சேர் செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை நல்கும் கல்விப் பெரும் செல்வப் பேறே சகலகலாவல்லியே சொல்விற்பனமும் அவதானமும் கவி சொல்ல வல்ல நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் - பேச்சுத் திறமையும் நல்ல கவனமும் கவிதைகளை எண்ணிய போதில் சொல்லவல்ல நல்வித்தையும் அருளி என்னை அடிமை கொள்வாய் நளின ஆசனம் சேர் செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை நல்கும் - தாமரையை இருப்பிடமாகக் கொண்டு விளங்கும் செல்வியாம் இலக்குமியின் அருள் அரிதாகப் போய்விட்டதே என்று மனம் வருந்தும் நிலையில்லாமை அருளும் கல்விப் பெரும் செல்வப் பேறே சகலகலாவல்லியே - கல்வியெனும் பெரும்செல்வப் பேறே எல்லாக் கலைகளும் வல்லவளே! *** சொல் விற்பனம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. மற்றவரைப் புண்படுத்தாமல் நல்ல சொற்களைச் சொல்லும் திறமை அவள் அருளின்றி அமைவதில்லை. அதே போல் கூர்மையான அறிவு வேண்டுமென்றால் நம்மைச் சுற்றி நடப்பதை கவனத்துடன் நோக்கினால் தான் முடியும்; அந்த அவதானமும் அவள் அருளின்றி அமைவதில்லை. எத்தனை எத்தனை கவிதைகளையும் செய்யுள்களையும் படித்தாலும் பொருள் உணர்ந்தாலும், மற்றவர் மனம் கவரும் வண்ணம் கவிதைகளைப் படைப்பதும் அவள் அருளே. அப்படி எல்லா விதமான கலைச் செல்வங்களையும் அருளி என்னை ஆட்கொள்ளவேண்டும் என்ற வேண்டுதல் இந்தப் பாடலில் இருக்கிறது. வாழ்க்கையில் கிடைத்தற்கரிய பெரும் செல்வம் எது? கல்விச் செல்வம் தானே. அந்த செல்வம் இருந்தால் மற்றைய செல்வங்கள் தானே வரும். அதனைத் தான் அடுத்த வரிகளில் சொல்கிறார் குமர குருபரர். 'கல்வியெனும் பெரும் செல்வப் பேறை அருளும் சகலகலாவல்லியே! அந்த கல்வியெனும் பெரும் செல்வப் பேறு அலைமகளின் அருள் இல்லையே (பொருள் இல்லையே, பணம் இல்லையே) என்று மனம் நோகாத நிலையைக் கொடுக்கும்' என்கிறார். |
![]() |
![]() |
#12 |
|
சகலகலாவல்லி மாலை பாடல் 9
சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம் என்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார் நிலம்தோய் புழைக்கை நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை கற்கும் பதாம்புயத்தாயே சகலகலாவல்லியே சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம் என்ன நிற்கின்ற - கவிதைகளிலும் கட்டுரைகளிலும் சொல்லும் சொற்களுக்கும், அவற்றின் பொருட்களுக்கும் உயிராக உள்ளுரைப் பொருளாக இருக்கும் மெய்யான ஞானவடிவாக விளங்குகின்ற நின்னை நினைப்பவர் யார் - உன்னை (எப்போதும்) வணங்குபவர் (என்னையன்றி வேறு) யார்? நிலம்தோய் புழைக்கை நற்குஞ்சரத்தின் பிடியோடு - நிலத்தில் தோயும்படி இருக்கும் நீண்ட தும்பிக்கையுடைய சிறந்த பெண்யானையும் அரசன்னம் - பறவைகளிலேயே அழகில் சிறந்த ராஜஹம்ஸமாகிய அரச அன்னப் பறவையும் நாண நடை கற்கும் பதாம்புயத்தாயே சகலகலாவல்லியே - வெட்கும் படியான நடையுடைய திருவடித் தாமரைகளை உடையவளே கலைவாணியே *** அருஞ்சொற்பொருள்: புழைக்கை - துதிக்கை, தும்பிக்கை குஞ்சரம் - யானை பிடி - பெண்யானை (இங்கு குஞ்சரத்தின் பிடி என்பது பெண்யானை என்ற பொருளில் வந்தது) பதாம்புயம் - பத + அம்புயம் - பாதத் தாமரைகள். அம்புயம் என்பது அம்புஜம் என்பதன் திரிபு. அம்பு - நீர், ஜம் - பிறந்தது; நீரில் பிறந்தது தாமரை மலர். |
![]() |
![]() |
#13 |
|
ஹிந்து மதத்தில் வேதமுதல்வன் சிவன் வழிபாடு நம் அனைவர்க்கும் மிகமுக்கியமானது.
இங்கே கோயில் என்றால் பொன்னம்பலம்- சிதம்பரம். ஆனால் முக்திக்கு காசி-விசுவநாதர் என்பது நம்பிக்கை. இக்கோயில் இஸ்லாமியரால் பூட்டப்பட்டு அக்கோயிலின் மிக அருகில் ஞான்வாபி மசூதி என எழுப்பி பூஜைகள் நின்றன. தென்னகத்திலிரூந்து மக்கள் காசி-விசுவநாதர் வழிபட்டு கங்கை நீரை கொணர்ந்து ராமேஸ்வரம் கோயிலில் அபிஷேகம் செய்வது மிக முக்கியமானது. காசி-விசுவநாதர் வழிபட முடியாமல் மக்கள் வருந்த்ய போது - தமிழகத்திலிருந்து சென்ற குமரகுருபரர் மிக வருந்தி ஒரு துபாஷியை(மொழிபெயர்ப்பாளர்) துணை கொண்டு சுல்தானை கோயிலைத் திறந்து வழிபாடு செய்ய கேட்ட போது உன் வேண்டுகோளை எனக்கு நேரடியாக சொல்ல கூட தெரியாத உனக்கு ஏதும் உதவ முடியாது என கேலி பேசி அனுப்பினார். மனம் வெதும்பிய குமரகுருபரர் வருத்தத்தோடு சரஸ்வதி தேவியை தூய தமிழில் 10 பாடல்கள் சகலகலாவல்லி மாலை என பாடினார். சகலகலாவல்லி மாலை பாடிட ஹிந்துஸ்தனி , உருது மொழிகள் ஓர் இரவில் பெற்றிட சுல்தானிடம் அவர் மொழியில் பேசிட, அதிசயம் புரிய காசி கோயில் திறக்கப் பட்டது.குமரகுருபரர் வேண்டுகோள்ப்படி அங்கு தமிழகத்திலிருந்து வரும் பக்தர் தங்க காசி மடம் என நிலம் பெற்று நிருவினார். இப்பாடல் படித்து துதிப்போருக்கு கல்வி ஞானம் பெருகும். அப்பாடல்கள் பொருளோடு நான் தருகிறேன். உங்கள் குழந்தை களை இந்த எழிய தமிழில் உள்ள பாடலகளை தினமும் பாடச்செய்தால் கல்வியில் சரஸ்வதி துணை நிச்சயம். |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|