Reply to Thread New Thread |
![]() |
#1 |
|
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணையும் நான்கின் வர்க்கங்களையும் நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- நியுமெராலஜி- (Numerology) பித்து வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர்தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள்.
நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !! “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். இதோ நூல்களின் பட்டியல்: (4) நாலடியார் (400) நான் மணிக் கடிகை (4) சதுர் (4) அகராதி கார் நாற்பது (40) களவழி நாற்பது (40) இனியவை நாற்பது (40) இன்னா நாற்பது (40) புற நானூறு (400) அக நானூறு (400) நற்றிணை நானூறு (400) குறுந்தொகை நானூறு (400) பழ மொழி நானூறு (400) நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (4000) நாலாயிரக் கோவை (4000) இவ்வாறு எண்களின் பெயரில் புத்தகம் ,பாக்கள் இயற்றுவது வேத காலத்திலேயும் உண்டு. தசம், சதம், சஹஸ்ரம் (1000) என்ற டெசிமல் (Decimal) முறைப் பெயர்கள் நிறைய வரும். இந்த தசாம்ச முறையைக் (Decimal System) கண்டுபிடித்தவர்களே இந்தியர்கள்தான். யஜூர் வேதத்தில் சத ருத்ரீயம் (100) என்று சிவன் பெயரில் முக்கியமான துதி வருகிறது. அதில்தான் சைவர்களுக்கு உயிர் போன்ற நம சிவாய மந்திரம் முதல் தடவையாக வருகிறது. சமகம் என்னும் பகுதியில் எண்களின் பெயர்களில் மட்டுமே வரும் மந்திரங்களும் உண்டு. அதற்குப் பின்னுள்ள காலத்தில் முதல் இலக்கணப் புத்தகம் எழுதிய பாணிணி தனது புத்தகத்துக்கு அஷ்டாத்யாயீ ( 8 அத்தியாயம்) என்று பெயர் வைத்தார். தமிழில் மற்ற எண்களிலும் நூல்கள் இருக்கின்றன. ஏர் எழுபது (70), முப்பால் (3), திரி(3)கடுகம், சிறு பஞ்ச(5) மூலம்,பதிற்றுப் பத்து (10X10) ஐங்குறு நூறு (5X100). எல்லா நூல்களையும் தொகுத்த போதும் அவைகளுக்கும் எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, பதினெண் கீழ்க் கணக்கு என்று எண் பெயராகவே வைத்ததால்தான் இவர்களுக்கு நியூமெராலஜி பைத்தியம் இருந்திருக்குமோ என்று எண்ண வேண்டியுள்ளது. சம்ஸ்கிருதத்தைப் பொறுத்த வரை தசாம்ஸப் பெயர்கள் அதிகம் வரும். பதிகம் (10), சதகம் (100) சஹஸ்ர நாமம் (1000 , 1008), லட்சார்ச்சனை, கோடி அர்ச்சனை என்று. மொத்தத்தில் இந்தியர்கள் எல்லோருமே எண்கள் மீது காதல் உள்ளவர்கள் தான். பல வட மொழித் துதிகள் பஞ்ச ரத்னம் (5), அஷ்டகம் (8) என்று ஐந்துக்கும் எட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றன. சங்க காலத்திலும் ஐம்பெருங்குழு (5), எண்பேராயம் (8) என்று சபைகளை அமைத்து தமிழர்களும் இவ்வாறு முக்கியத்துவம் கொடுத்தார்கள். (ஏற்கனவே இன்னொரு கட்டுரையில் 9,18,108,1008, 10008 பற்றி எழுதியுள்ளேன். தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டில் சமர்ப்பித்த சங்க இலக்கியத்தில் நிறம், சங்க இலக்கியத்தில் எண்கள் என்ற கட்டுரைகளில் மேலும் பல அதிசயச் செய்திகள் உள்ளன.) |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|