Reply to Thread New Thread |
|
![]() |
#1 |
|
|
![]() |
![]() |
#3 |
|
'மானாட மயிலாட' முதல் பாகம் சென்ற வாரம் முடிவுற்றதைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் புதிய போட்டியாளர்களுடன் நாளை முதல் துவங்கவுள்ளது. நேரு உள் விளையாட்டரங்கில் நடந்த முதற்பாகத்தின் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழாவின்போது, அடுத்து துவங்கவிருக்கும் இரண்டாம் பாகத்தின் போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டதாக, நேரில் விழாவைப்பார்த்த சிலர் தெரிவித்திருந்தனர்.
ஆனால் அந்த அறிமுக நிகழ்ச்சி, நிறைவு விழாவின் தொலைக்காடசி ஒளிபரப்பில் காண்பிக்கப்படவில்லை. எனவே நாளை அறிமுகச்சுற்று ஒளிபரப்பப்படக்கூடும். முதல் பாகத்தில் பங்கேற்றவர்களுக்கான பரிசளிப்பில் நேயர்கள் பலருக்கு கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன. குறிப்பாக முதல் பரிசுக்கு தகுதியானவர்கள் ராகவ் ப்ரீத்தா ஜோடிதான் என்பது பலரின் கருத்தாகவும் முடிவாகவும் இருந்தது. அதிலும் இறுதிப்போட்டியை மட்டும் வைத்துப்ப்பார்க்கும்போது அவர்களே முதற்பரிசு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு, அது வேறு விதமாக அமைந்ததால், நேயர்களின் ஆதங்கமும், கோபமும் இறுதிப்போட்டி முடிவு அறிவிப்பில் சிலரின் தலையீடுகள் இருந்திருக்குமோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியதுடன், பொதுஜன வாக்களிப்பு என்பது இதுபோன்ற போட்டிகளில் சரியான தீர்வைத்தராது என்கிற ரீதியில், முதல் பாகத்துக்கான த்ரெட்டின் இறுதிப்பகுதியில் விவாதிக்கப்பட்டன. அதே சமயம், வெற்றி பெற்ற சதீஷ் - ஜெயஷ்ரீ ஜோடிக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். (அதோடு, முடிவு எப்படியிருந்தபோதிலும், போட்டியின் நிறைவு விழாவில் ராகவ் ப்ரீத்தா ஜோடியினர் சரியான முறையில் கௌரவிக்கப்படவில்லை என்பது உண்மை. அவர்களுக்கான பரிசளிப்பும் சரியாக காண்பிக்கப்படவில்லை). எது எப்படியாயினும், முதல் பாகம் முடிந்துவிட்டது. இனி 'மானாட மயிலாட' இரண்டாம் பாகத்தைக் காண தயாராவோம். நடுவர்கள், போட்டியாளர்கள், தொகுப்பாளர்கள் யாவரும் யார் யார் என்பது நாளை தெரியும். பார்ப்போம்.... |
![]() |
![]() |
#4 |
|
அறிமுகச்சுற்று... (09.03.2008)
அறிமுகச்சுற்று என்றதும், ஏதோ புதிய போட்டியாளர்களை மேடையில் ஆடவைத்து அறிமுகம் செய்வார்களோ என்று எண்ணியிருந்தோம். அப்படியில்லை. ஒரு கலகலப்பான கலந்துரையாடல் போல அறிமுகம் செய்தனர். பழைய போட்டியாளர்களில் சத்தீஷ், ஜெயஷ்ரீ, ஜார்ஜ், ராஜ்காந்த் ஆகியோரும் வந்திருந்தனர். கூடவே காம்பியர் கீர்த்தி. (சஞ்சீவ் மிஸ்ஸிங். அடுத்த ரவுண்ட் வருவாரா அல்லது அவரையும் மாற்றி விட்டார்களா தெரியவில்லை). பழைய ஜோடிகளில் ஜோடியாக வந்திருந்தவர்கள் சதீஷ் ஜெயஷ்ரீ மட்டுமே. இறுதிப்போட்டி பங்கேற்பாளர்களில் ராஜ்காந்த், ஜார்ஜ் தனியாக வந்திருந்தனர். ராகவ் ப்ரீத்தா வரவில்லை. (காரணம்... உள்ளங்கை நெல்லிக்கனி). 'மானாட மயிலாட' நடன நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தில் பங்கேற்கும் போட்டியாளர்களில் நிறைய தெரிந்த முகங்கள். நாம் நிறைய சீரியல்களிலும், மற்றும் பல்வேறு நிகழ்ச்சியிலும் பார்த்து பழகிப்போன முகங்கள். அவர்கள் இப்போது ஆடப்போகிறார்கள் என்றதும் நம் மனதில் கூடுதல் எதிர்பார்ப்பு. 1) ஏற்கெனவே சன் டிவியின் 'சூப்பர் 10' நிகழ்ச்சியில் கலக்கோ கலக்கு என்று கலக்கிய கணேஷ் மற்றும் ஆர்த்தி. இவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது திரைப்படங்களிலும் நடித்து வருபவர்கள். அதிலும் ஆர்த்தி நகைச்சுவை நடிகையா வேகமாக வளர்ந்து வருபவர். கணேஷ், உலகத்திலேயே அதிகப்படங்களில் நடித்த நடிகர் என்ற பெருமைபெற்ற மறைந்த வி.கே.ராமசாமியின் மகன். 2) கோகுல்நாத் (இவர் ஜோடி யாருன்னு கவனிக்கலையே). இவர் விஜய் டிவியின் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் எலெக்ட்ரானிக் ஸ்பெஷலிஸ்ட். ஆம் பல்வேறு வித்தியாசமான சவுண்ட்களோடு நிகழ்ச்சி வழங்குபவர். 3) பாலாஜி மற்றும் பிரியதர்ஷினி. பிரியதர்ஷிணி பற்றி எல்லோருக்கும் தெரியும். சன் டிவியின் காம்பியராக பணியாற்றியவர். கோலங்கள் சீரியலில் நளினியின் மகளாக நடித்து வருபவர். இடையிடையே வானிலைச்செய்திகளில் தலைகாட்டுவார். 4) சக்தி சரவணன் - யோகினி. 5) ஆகாஷ் - ஸ்ருதி 6) ரஞ்சித் - ஐஸ்வர்யா 7) கார்த்திக் - நீபா 8) சுரேஷ்வர் - மது. இவர்களில் சுரேஷ்வரை நிறைய சீரியலில் பார்த்திருக்கிறோம். அண்ணாமலையில் தீபாவெங்கட் ஜோடியாகவும், மலர்களில் சினேகா நம்பியார் ஜோடியாகவும் நடித்தவர். 9) மதன் - பிரியங்கா. இருவரும் சீரியல்கள் மூலம் நன்கு அறிமுகமானவர்கள். கோலங்கள் சீரியலில் காதில் கடுக்கன் போட்டுகொண்டு, தீபாவெங்கட்டை மிரட்டி மலையில் இருந்து விழுந்து செத்துப்போகும் 'மேடி'யை மரந்திருக்க முடியாது. இவரது ஜோடியாய வரும் பிரியங்கா அண்ணாமலை, அரசி உள்பட ஏராளமான சீரியல்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்திருப்பவர். அரசியில் கங்காவின் மனைவியாக (?) வருபவர். 10) சாய்பிரசாத் - ஸ்வேதா (ஆமாங்க, முதல் பாகத்தில் நிதிஷுடன் ஆடிய அதே ஸ்வேதாதான்). சாய்பிரசாத் என்றாலே அண்ணாமலை வில்லன்தான் நினைவுக்கு வரும். அதுக்கு நேர்மாறாக, செல்வியில் ஜி.ஜே.யின் தம்பியாக சாந்தசொரூபியாக வந்து பாதியிலேயே காணாமல் போனவர். 11) லோகேஷ் - சுசிபாலா (பழைய சுசிபாலாதான்) நிகழ்ச்சியின் கடைசியில் வந்த கலா மாஸ்டர், பழைய பெண் போட்டியாளர்களில் யாராவது இரண்டு பேருக்கு மீண்டும் வாய்ப்பளிப்ப்தாகவும், அதில் முதல் பரிசு பெற்றிருந்த ஜெயஷ்ரீ தவிர, மற்ற ஏழுபேரின் பெயர்களை சீட்டுகுலுக்கிப்போட்டு எடுப்பதாகவும் சொல்லி சீட்டு குலுக்கிப் போட்டதில் தேர்வானவர்கள்தான் ஸ்வேதாவும் சுசிபாலாவும். குலுக்கிப்போட்ட சீட்டுகளில் ப்ரீத்தாவின் பெயர் இருந்ததா..? தெரியாது. இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ஒருவேளை அவர் பெயர் வந்துவிட்டால், அவர் ராகவ் தவிர்த்து வேறு ஒருவருடன் ஆட மாட்டார் என்பது ஒரு காரணம். முந்தைய போட்டியின்போது ஏற்பட்ட மனக்காயம் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட வாய்ப்பில்லை என்பது மற்றொரு காரணம். (நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்த என் கணவர் அடித்த கமெண்ட்: "அது சரி சாரூ..., ஸ்வேதா, ஆர்த்தி ஆகியோர் ஆட இருப்பதால் நல்ல இரும்பு மேடையாக அல்லவா அமைக்க வேண்டும்"). பழைய போட்டியாளர்களான ஜார்ஜ், சதீஷ், ராஜ்காந்த ஆகியோர் ரொம்ப ரிலாக்ஸ்டாக, புதியவர்களைப் பார்த்து நிறைய ஜாலி கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தனர். 'நாங்க நன்றாக ஆடி பேரைக்காப்பாத்துவோம்' என்று ஆர்த்தி சொல்ல, அதுக்கு சதீஷ், 'பேரை காப்பாத்துவது இருக்கட்டும். ஏ.வி.எம்.ஃப்ளோரைக் காப்பாத்துங்க'. (ஆர்த்தியின் உடல்வாகுதான் நமக்கு தெரியுமே). அதுபோல இன்னொரு கட்டத்தில் ஜார்ஜ், 'இந்தமுறை ஸ்பெஷல் ஐட்டமாக மழை டான்ஸ் கிடையாதாம். அதுக்கு பதிலாக போட்டியாளர்கள் எல்லோரும் தீ மிதிக்க வேண்டுமாம்' என்று கமெண்ட் அடிக்க ஒரே கலாட்டா. புதிய போட்டியாளர்கள், பழையவர்களின் நிகழ்ச்சிகளில் எந்தெந்த ஜோடிகளின் எந்தெந்த நிகழ்ச்சிகள் பிடித்தன என்று சொல்லப்போக அவை மீண்டும் மலரும் நினவுகளாக ஒளிபரப்பப் பட்டன. அருமையாக இருந்ததுடன், அடேயப்பா என்னென்ன மாதிரி சுற்றுக்களெல்லாம் நடந்துள்ளன என்று மலைக்க வைத்தன. அடுத்த வாரம் பார்ப்போம்..... |
![]() |
![]() |
#5 |
|
I missed the show , but after reading Sarada mam's Post i have got 75% idea abt the show and participants....My frend told to me directly abt wht had hapnd streday in the show...But she missed many things..But Sarada mam didnt leave anything....I think only the ads she has left...Lolz..........
Thanks for ur update.................When wil it be retelecasted??? |
![]() |
![]() |
#6 |
|
|
![]() |
![]() |
#7 |
|
|
![]() |
![]() |
#9 |
|
|
![]() |
![]() |
#10 |
|
'மானாட மயிலாட' பாகம் - 2
உண்மையான அறிமுகச்சுற்று (16.03.2008) அதென்ன 'உண்மையான அறிமுகச்சுற்று?. ஆம், போன வாரம் ஜோடிகள் யாரும் நடனம் ஆடாமல் ஜஸ்ட் ஒரு அறிமுகத்தோடு முடித்து விட்டனர். இந்த வாரம்தான் அதற்கான புதிய மேடையில், நடுவர்கள் முன்னிலையில் ஒழுங்கான அறிமுக நடனம் நடந்தது. போன வாரம் காம்பியர் சஞ்சீவ் இல்லையே, கீர்த்தி மட்டும்தானே வந்தார், அப்படீன்னா சஞ்சீவையும் தூக்கிட்டாங்களோ என்று சின்ன வருத்தம் இருந்தது. இபோ அது போய் விட்டது. ஆம், வழக்கமான கலக்கல் கமெண்ட்ஸ்களோடு என் தம்பி சஞ்சீவ் வந்துட்டான். கூடவே கீர்த்தியும். நடுவர்களாக, (வழக்கம்போல) இயக்குனர் கலா மாஸ்டருடன் குஷ்பூ மற்றும் ரம்பா. (இனிமேல் மார்க்கெட் போன நடிகைகளை இதுபோன்ற ஷோக்களில் நடுவர்களாக பார்க்கலாம் போலும்). கலா, தன் அபிமானிகளான சதீஷ், ஜெயஷ்ரீ, ஜார்ஜ், ராஜ்காந்த், ராஜ்குமார் இவர்களோடு சேர்ந்து எண்ட்ரி கொடுத்தார். இறுதிப்போட்டி ஜோடிகளில் பாவனா மிஸ்ஸிங். (சுசிபாலா ஏற்கெனவே போட்டியில் இருக்கிறார்). சென்ற முறை, எட்டு ஜோடிகள் களத்தில் இருந்தனர். இம்முறை பதினோரு ஜோடிகள். அறிமுகச்சுற்றே அமர்க்களமாக இருந்தது. ஒரு சில ஜோடிகள் தவிர, மற்றவர்கள் அனைவரும் ஏதோ இறுதிச்சுற்று போல, சிரத்தையாக ஆடினர். முதல் சுற்று என்பதால் 'நோ ஸ்கோர்', 'நோ எலிமினேஷன்'. முதல் ஜோடியாக களமிறங்கியவர்கள் 'ரஞ்சித் - ஐஸ்வர்யா'. ரஞ்சித் மேலேயிருந்து கயிறு வழியாக இறங்கி எண்ட்ரி கொடுத்தார். 'முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய்' பாடலுக்கும், 'மாரோ மாரோ.. கோலி மாரோ' பாடலுக்கும் ஆடினர். நல்ல ஸ்டெமினா. இரண்டாவது ஜோடியாக வந்தவர்கள் 'ஷக்தி - யோகினி'. ஏனோதானோ என்று ஆடினர். ஆட்டத்தில் சுறுசுறுப்பில்லை. அதிலும் யோகினி ஒரே இடத்தில் நின்று ஆடியதுடன், சின்ன சின்ன மூவ்மெண்ட்டுகள் மட்டுமே கொடுத்தார். 'முதல் முதல் எனை அழைத்ததேன்' பாடலுக்கும், அதையடுத்து பாடல் இல்லாமல் வெறும் மியூஸிக்குக்கும், இறுதியாக 'எங்கே என் புன்னகை' பாடலுக்கும் ஆடினர். மூன்றவதாக மேடையேறிய 'சுரேஷ்வர் - மது' ஜோடியினர் 'மொச்சைக்கொட்டை பல்லழகி' என்ற ஒரே ஒரு ஃபோக் ஸாங் எடுத்துக்கொண்டு ஆடினர். ஆடினர் என்பதை விட அசத்தினர் என்பது பொருத்தம். அடேயப்பா சுரேஷ்வரிடம் இவ்வளவு நடனத்திறமையா !!. ஆட்டமும் சூப்பர், அதற்கான முகபாவங்களும் அருமை. இவர்களின் ஆட்டத்தைப்பார்த்தபோது, இது அறிமுகச்சுற்று என்றே தோன்றவில்லை. இது நிச்சயம் மற்றவர்களுக்கு சவால் ஜோடிதான். மற்றவர்கள் போல இல்லாமல் 'சிங்கம் ஒரு பாடலோடுதான் வரும்' என்று நிரூபித்தனர் நான்காவது ஜோடி 'கோகுல்நாத் - கவி'. கோகுல் வித்தியாசமாக, ஸ்டேஜிலேயே மோட்டார் சைக்கிளில் எண்ட்ரி கொடுத்தார். 'கால்கிலோ காதல் என்ன விலை' பாடலுக்கும், 'ஒரு தேவலோக ராணி' பாடலுக்கும் ஆடினர். கவியிடம் நல்ல எனர்ஜி. ஐந்தாவ்து ஜோடி, 'ஆகாஷ் - ஸ்ருதி' (ஸ்ருதி நினைவிருக்கிறதா?. செல்வியில், இன்ஸ்பெக்டரின் ஊனமுற்ற மகளாக, சட்டென்று மின்னல் போல வந்து போனவர்). 'ஐயா பேரு ஆர்யா', 'ஆர் யூ ரெடி', 'சூடான தீயே' பாடல்களுக்கு ஆடினர். இருவரிடமும் நல்ல ஸ்டைலான மூவ்மெண்ட்டுகள். அடுத்து 'சாய்பிசாந்த் - ஸ்வேதா' ஜோடி. முதலில் வெறும் மியூசிக்குக்கு ஆடியவர்கள், அடுத்து 'கண்ணுக்குள் டிக்.. டிக்..' பாடலுக்கு ஆடினர். இருவருக்கும் இடையில்... அது என்ன பயாலஜியா, ஃபிஸிக்ஸா, எகனாமிக்ஸா... என்னவோ சொல்லுவாங்களே... ஆங், கெமிஸ்ட்ரி, அது நன்றாக இருந்தது. (அழகாக தமிழில் 'அன்னியோன்யம்' என்று சொல்லி விட்டுப்போகலாமே). ஸ்வேதா, எந்த ஜாடிக்கும் ஏற்ற மூடியாவார் போலும். இதிலும் அப்படித்தான். சாய் நல்ல எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்தார். |
![]() |
![]() |
#11 |
|
" அடுத்து ஆடப்போவது?" என்று கீர்த்தி கேட்க, அதற்கு சஞ்சய் "அடுத்து ஆடப்போவது ஸ்டேஜ்தான்" என்று சொன்னதுமே, தெரிந்துவிட்டது. ஆர்த்தியும் கணேஷும் வரப்போகிறார்கள் என்று. (ஆனால் ஸ்வேதாவுடன் ஒப்பிடுகையில், ஆர்த்தியின் உடம்பு அப்படியொன்றும் பயப்படும்படி இல்லை என்றாலும் நகைச்சுவைக்காக இந்த கமெண்ட் என்று நினைக்கிறேன்).
'என் இனிய தமிழ் மக்களே' என்ற குரலுடன் எண்ட்ரியான ஆர்த்தியும் கணேஷும் தங்கள் ஆட்டத்தின் (ஐட்டத்தின்...?) ஆரம்பம் முதல் இறுதி வரை நம்மை சிரிப்பில் வயிறுவலிக்க வைத்துவிட்டனர் என்றால் அது பொய்யில்லை. புத்திசாலித்தனமாக தங்களுக்கு என்ன வருமோ அதைச்செய்து பேர் வாங்கி விட்டனர். ஒரே பாடல்தான். 'மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா' (ஆட்டோகிராஃப்) பாடல். அதை அற்புதமான நகைச்சுவை கான்செப்டாக மாற்றித் தந்து நம் மனதில் இடம் பிடித்து விட்டனர். அரங்கம் முழுக்க ஒரே சிரிப்பு மயம். நடுவர்களிடம் நல்ல கமெண்ட்ஸ் பெற்றனர். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்ட சூப்பர் ஜோடி. வாராவாரம் ஒரு நல்ல விருந்து இருக்கிறது என்று நம்பலாம். அடுத்து 'பாலா - பிரிதர்ஷினி' ஜோடி. முதலில் பாலா (ஏதோ வாயில் நுழையாத பாட்டுக்கு) ஆடினார். பின்னர் திரைக்குப்பின்னால் கிளாஸிக்கல் மூவ்மெண்ட்ஸ் கொடுத்த பிரியதர்ஷினி, திரையைக்கிழித்துக்கொண்டு பிரவேசித்தார். இருவருக்கும் நல்ல புரிந்துணர்வு. நல்ல ஸ்டெமினா மற்றும் எனர்ஜி. 'என்றும் புன்னகை' பாடலின் ஒரு கட்டத்தில், பாலா, பிரியாவை அப்படியே தூக்கி சுற்றியது சூப்பரோ சூப்பர். இதில் பாலாவின் பங்கை விட ப்ரியாவின் பங்கே அதிகம். (பாவம், ஆபரேஷன் பண்ணி இன்னும் தையல் பிரிக்கலையாமே. ஆனால் இதையெல்லாம் ஸ்டேஜில் சொல்லி அனுதாப அலை உண்டாக்கக்கூடாது என்பது நம் எண்ணம்). அடுத்து 'லோகேஷ் - சுசிபாலா', துவக்கத்தில் ஒரு இன்ப அதிர்ச்சி. 'கண்ணும் கண்ணும் நோக்கியா' பாடலுக்கு சுசிபாலாவுடன் ஜார்ஜ் ஆடத்துவங்கியவர், 'சட்'டேன்று இடையில் நிறுத்தி.. "ஸாரி, பழைய நினைவில் சுசியுடன் ஆட வந்துட்டேன். இப்போ புது ஜோடியாகி விட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்" என்று சொல்லி விலகியபோது, நம் மனதைப்பிசைந்தார். (ஜார்ஜ், அப்பப்போ இப்படி ஏதாவது பண்ணி நம்மைக் கண்கலங்க வைப்பார்). பத்தாவது ஜோடியாக வந்த மதன் - பிரியங்கா, முதலில் 'ஏ வாடி வாடி வாடி கைபடாத சிடி' பாடலுக்கும், அடுத்து 'தண்டோரா கொண்டைக்காரி' பாடலுக்கும் ஆடினர். மதன் நன்றாக செய்தார். ஆனால் பிரியங்கா இருந்த இடத்தை விட்டு நகர மறுத்தார். ஒரே இடத்தில் ஆடுவது மக்களை, குறிப்பாக நடுவர்களைக் கவராது என்பதை அவர் உணர வேண்டும். நடுவர்களும் இதை சுட்டிக்காட்டினர். இறுதி ஜோடியாக வந்த 'கார்த்திக் - நீபா' ஜோடியிடம் என்ன ஒரு ஸ்டைலிஷ் மூவ்மெண்ட்ஸ். ஸ்டைலிலேயே மனதைக்கவர்ந்தனர். 'செய்... ஏதாவது செய்' (பில்லா) பாடலுக்கு அருமையான மூவ்மெண்ட்டுகள். அதுபோலவே 'ரங்கோலா' பாடலுக்கும். சூப்பர்ப் பெர்ஃபாமென்ஸ். ஒட்டுமொத்தமாக பார்க்கையில் நேற்றைய சுற்று ஒரு அறிமுகச்சுற்று என்பதாகத் தெரியவில்லை. பல சுற்றுக்கள் கடந்து, எலிமினேஷன் விளிம்பில் நிற்போர் அதைத்தவிர்க்க போராடும் சுற்று போல அட்டகாசமாக இருந்தது. (பி.எஸ்.வீரப்பா பாணியில் "சபாஷ்... சரியான போட்டி"). நடுவர்கள் கமெண்ட்டில், கலா வழக்கம்போல, குஷ்பூ நன்றாக சொன்னார். ரம்பா இனிவரும் சுற்றுக்களில் தேறி விடுவார் என்று நம்பலாம். முதல் சுற்றே, அடுத்தடுத்த சுற்றுக்களை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்து விட்டது. நன்றி ஜோடீஸ்..... |
![]() |
![]() |
#12 |
|
|
![]() |
![]() |
#15 |
|
|
![]() |
![]() |
#17 |
|
streday's program was really nice....Everyone did very well.....High light of the program is no one got below 7........The BP was given to Aakash in male and Aarthi in female....Both deserves tht....Aarthi has an wonderful attitude.......Grace.....Kush judgement was proper....
Good entertainig show......... I think george doesnt want to go out of MM...every time he is trying to come in to the show.... |
![]() |
![]() |
#19 |
|
முதல் போட்டி ரவுண்ட் (FIRST COMPETITION ROUND) 23.03.2008
சென்ற வாரம் INTRODUCTION ROUND முடிந்து இந்த வாரம்தான் பங்கேற்பாளர்களுக்கிடையில் 'நீயா நானா' போட்டி ரவுண்ட்கள் ஆரம்பம். இந்த ரவுண்டுக்கு ‘FOLK ROUND' என்று பெயரிட்டிருந்தனர். உண்மையில் அதற்கு என்ன பொருள்?. கிராமிய நடனமா அல்லது டப்பாங்குத்து பாடல்களுக்கான நடனமா?. ஆடுபவர்களின் தேர்வுகள் சிலசமயம் நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. (ஆனால் இப்போ அது இங்கே முக்கியம் அல்ல. எப்படி ஆடினார்கள் என்பதுதான் முக்கியம் என்று நடுவர்கள் எடுத்துக்கொண்டதாக நினைக்கலாம்). மதிப்பெண்கள் சென்ற முறை போல 20க்கு அல்ல, 10தான் அதிகபட்சம். (சென்ற முறை மிகக்குறைந்த ஸ்கோரே 12 தான் என்பதால் 20க்கு கணக்கிட வேண்டிய அவசியமில்லை என்று முடிவு செய்து விட்டனர் போலும்). ஸ்ருதி - ஆகாஷ் கபூர் ஜோடியினர் 'பொதுவாக எம்மனசு தங்கம்' என்ற பாடலின் ரீமிக்ஸுக்கு ஆடினர். (ரீமிக்ஸுக்கு தப்பிய பாடல்கள் இன்னும் ஏதேனும் பாக்கி இருக்கிறதா?). ஆட்டம் நன்றாக இருந்தது. ஆட்டம் முடிந்ததும் ஆகாஷ், ரம்பாவுக்கு ரொம்ப ஐஸ் வைத்தார். குஷ்பூவை தன் அப்பாவின் ஃபேவரிட் என்று குறிப்பிட்டு வெறுப்பேற்றினார். (பெண்களைப்பொறுத்தவரை, அதிலும் நடிகைகளைப் பொறுத்தவரை வயதை அதிகப்படுத்தி சொல்வது, கொலைக்குற்றத்தை விட மோசமானது). ஆனால் பின்னர் தனக்கு முப்பத்தேழு வயது என்று குஷ்பூவே (பெருந்தன்மையாக?) ஒப்புக்கொண்டார். ஸ்ருதி பொம்மை போல அழகாக ஆடினார். ஆட்டத்தில் ஒரு கிரேஸ் இருந்தது. அக்காஷ் ஸ்ருதி ஜோடி முப்பதுக்கு 29 ஸ்கோர் பெற்றனர். ஷக்தி - யோகினி ஜோடியினர் ஆட்டம் துவங்கும் முன்னர், சினிமா டைரக்டராக ஜார்ஜ் வந்து ஆட்டத்தை துவக்கி வைத்தார் (இதென்ன, ஜார்ஜ் இந்த ட்ரூப்பின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டாரா?). 'கும்பிட போன தெய்வம்... குறுக்கே வந்ததடா' எப்பேற்பட்ட பாட்டு. அதுக்கு எப்படியெல்லாம் ஆடி தூள் கிளப்பலாம்?. ஆனால் சக்க்தி, யோகினி ஜோடி ரொம்ப சின்ன சின்ன மூவ்மெண்ட்டுகளாகச் செய்து, பாடலின் டெம்போவைக் குறைத்தனர். அடுத்து ஆடிய 'அம்மாடி... ஆத்தாடி' பாடலுக்கும் இப்படித்தான். எவ்வளவுதான் உற்றுப் பார்த்தாலும், யோகினின் கால்களை ஸ்டேஜில் ஆணி அடித்து வைத்திருப்பதாக தெரியவில்லை. அப்படியிருந்தும் ஏன் இருந்த இடத்தை விட்டு நகரமறுக்கிறார் என்பதுதான் தெரியவில்லை. ஒரு சதுர அடிக்குள்ளேயே நின்று ஆடும் ஆட்டம், விரைவில் இவர்களை மேடையை விட்டு வெளியேற்றி விடும் என்பதை ஏன் இந்த ஜோடி (குறிப்பாக யோகினி) உணர மறுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆட்டத்திலும் பெர்ஃபெக்ஷன் இல்லை. முப்பதுக்கு 24 மட்டுமே பெற்றனர். லோகேஷ் சுசிபாலா ஜோடி 'கும்மாங்கோ கும்மாங்கோ கொக்கரகோ கும்மாங்கோ' என்ற ஒரே பாடலுக்கே ஆடினர். நல்ல எனர்ஜி. ஸ்டேஜ் முழுக்க கவர் பண்ணி ஆடிய மிகக்குறைவான ஜோடிகளில் இவர்களும் அடங்குவர். சுசியின் உடல்வாகு அவருக்கு நன்றாக கைகொடுக்கிறது. லோகேஷும் நல்ல ஒத்துழைப்பு. இந்த ஜோடி முப்பதுக்கு 29 பெற்றனர். சாய்பிரசாந்த் - ஸ்வேதா ஜோடி எடுத்துக்கொண்டது ஒரே பாடல் 'இப்போ இல்லாட்டி எப்போ'. சென்ற முறை சொன்னதுபோலவே இருவருக்குமிடையில் ஆட்டத்தில் நல்ல புரிந்துணர்வு. சாய், தனக்கு வராதவற்றையெல்லாம் ஓவராக ட்ரை பண்ணாமல் தனக்கு என்ன ஸ்டைல் வருமோ அதை அழகாக, வித்தியாசமாக மூவ்மெண்ட்ஸ்களோடு (சேட்டைகளோடு?) செய்தார். ஸ்வேதா வழக்கம்போல அழக்கான ஆட்டம். முப்பதுக்கு 25 பெற்று நூலிழையில் தப்பினர். சுரேஷ்வர் - மது ஜோடியில், முதலில் மது 'மேகம் கருக்குது... மின்னல் சிரிக்குது' பாடலுக்கு ஆட, இடையில் 'அ முதல் அக்குதானடா' பாடலுக்கு இணைந்துகொண்டார். சரியான டப்பாங்குத்து ஆட்டம் போட்டார். அதுக்கு முழுபக்கத்துணையாக அவரது முகபாவம் (FACE EXPRESSION) அட்டகாசம். பாடல் வரிகளை மறக்காமல் பாடுகிறார். மூன்றாவதாக 'படிச்சுப் பார்த்தேன் ஏறவில்லை, குடிச்சுப் பார்த்தேன் ஏறிடிச்சு' பாட்டுக்கும் செம ஆட்டம் போட்டனர். (இந்தப்பாடல்களைப் பார்க்கும்போதெல்லாம், சென்ஸார் போர்டுன்னு ஒண்ணு இருக்கான்னே சந்தேகம் வருகிறது. முன்பெல்லாம் இதுபோன்ற பாடல்களுக்குத்தான் முதல் கத்திரி. மாணவர்களை கெடுத்து குட்டிச்சுவராக்க இவற்றை விட வேறு பாடல்கள் தேவையில்லை..... இதான் என்கிட்டே உள்ள பிரச்சினை. விஷயத்தை விட்டுட்டு எங்காவது போயிடுவேன்). சுரேஷ்வர் - மது ஜோடி 28 புள்ளிகள் பெற்றனர். நன்றாக தேறி வரும் ஜோடிகளில் ஒன்று. |
![]() |
![]() |
#20 |
|
கார்த்திக் - நீபா, இன்னொரு நம்பிக்கை ஜோடி. 'விளக்கு ஒண்ணு திரியைப்பார்க்குது' பாடலுக்கு சூப்ப்ரான டான்ஸ், அட்டகாசமான ஸ்டைல். குறிப்பாக நீபா வெகு அற்புதம், அவருக்கு கார்த்திக் நல்ல ஒத்துழைப்பு. நீபாவின் காலில் அடிபட்டிருக்கிறதாம், ஆனாலும் அது தெரியாவண்ணம் ஆட்டத்தில் சமாளித்து ஆடினார். அடிபட்ட விஷயம், ஆட்டம் முடிந்ததும் தான் சொன்னார்கள். ஆனால் ஆட்டத்தின்போது அது தெரியவேயில்லை. நன்றாக சுற்றி சுற்றி ஆடினர்.
கணேஷ் - ஆர்த்தி ஜோடி, முதலில் நைட்டியோடு வந்து சண்டை, டைவர்ஸ் என்று ஆரம்பித்தபோது (வசனத்தினூடே ஒருவரை ஒருவர் ‘புளிமூட்டை', 'புளுகு மூட்டை' என்றெல்லாம் திட்டிக்கொள்ள), ஆகா இதிலும் கான்செப்ட் தானா, இது ஆட வேண்டிய ரவுண்ட் ஆயிற்றே என்று நாம் நினைத்தபோதே, காட்சி மாறி விட்டது. காஸ்ட்யூம் மாற்றத்துடன் 'அடியே மனம் நில்லுனா நிக்காதடி' பாடலுக்கு ஆடினர். நல்ல ஆட்டம். ஆர்த்தி சின்ன சின்ன மூவ்மெண்ட்டுகள் மூலம் கவர்ந்தாரென்றால், கணேஷ் அட்டகாசமாக ஆடினார். ஆர்த்தியின் உடல் வாகும், சேட்டைகளும் சிரிப்பை வரவழைக்க அதுவே அவருக்கு பிளஸ் பாயின்ட்டாக அமைந்துவிடுகிறது. நல்ல நடன அமைப்பு (கோரியோகிராஃபி). துவக்கத்தில் இவர்கள் சண்டையை சமாதானப்படுத்த எஸ்.ஜே.சூர்யா ரோலில் சின்ன இடைச்செருகலாக ஜார்ஜ் வந்து போனார். கணேஷ் ஆர்த்தி ஜோடி முழு மதிப்பெண்களாக முப்பதுக்கு 30 பெற்றனர். (ஸ்கோர் ரொம்ப ஓவர். நடுவர்கள் சிரித்துக்கொண்டே மார்க்கை அள்ளிக்கொடுத்து விட்டனர்). பாலா - பிரியதர்ஷிணி ஜோடி, அறிமுகச்சுற்றில் ஏற்படுத்திய நம்பிக்கையை காப்பாற்றினர். 'தட்டிப் பாத்தா தட்டிப்பாத்தா தகரடப்பா' பாட்டுக்கு ஆடத்துவங்கியவர்களிடம் நல்ல ஸ்டெமினா மற்றும் ஸ்டைல். டப்பாங்குத்துப் பாடலாக இருந்தாலும் பிரியதர்ஷிணி மாடர்ன் ட்ரெஸ்ஸில் வந்திருந்தார். குருப் டான்ஸர்ஸ் இரண்டு பேருடைய முதுகில் ஏறி நின்று பிரியா கொடுத்த அந்த போஸ் சூப்பர். பாலாவும் நல்ல எனெர்ஜியோடு ஆடினார். ஆனால் குரூப் டான்ஸர்கள் மத்தியில் ஏகப்பட்ட மிஸ்ஸிங், சில இடங்களில் குழப்பமாக இருந்தது. 28 ஸ்கோர் பெற்றனர். பிரியாவின் ஆட்டத்தைப்பார்க்கும்போதெல்லாம் தோன்றுவது, கண்ணாடி அணிந்துகொண்டு வானிலை அறிக்கை சொன்ன அந்தப்பெண்ணிடமா இப்படி ஒரு ஆட்டத்திறமை..!. எந்தப்புற்றில் எந்தப்பாம்பு இருக்கும்னே தெரியலை. ரஞ்சித் - ஐஸ்வர்யா ஜோடியிடம் காஸ்ட்யூம் குழப்பம். ரஞ்சித் பேட்டை ரவுடி போலவும் ஐஸ்வர்யா மாடர்ன் ட்ரெஸ்ஸிலும் ஆடினர். ஏன் இந்த முரண்பாடுன்னு தெரியலை. 'ஏ குட்டி முன்னாலே நீ.. பின்னாலே நான் வந்தாலே' பாடலுக்கு ஆடியவர்களிடம் எனெர்ஜி ரொம்ப குறைவு. அந்தப்பாட்டுக்கோ, இந்த ரவுண்டுக்கோ தேவையான எனர்ஜி இல்லை. கூட ஆடிய நான்கு பெண்கள் நன்றாக ஆடினர் (ஆனால் அவர்கள் ஆட்டக்குழுவில் இருப்பவர்கள்). அளவுக்கு அதிகமான குரூப் டான்ஸர்கள். போதாக்குறைக்கு ஜோடிகளிடம் எக்ஸ்பிரஷன்ஸ் இல்லாமை எல்லாம் சேர்ந்து கொண்டது. எப்படி 26 மதிப்பெண்கள் பெற்றார்கள் என்பது தெரியவில்லை. பெஸ்ட் பெர்ஃபார்மர் அவார்ட் ஆண்களில் ஆகாஷ், பெண்களில் ஆர்த்தி (?) பெற்றனர். நேற்றைய ரவுண்ட்களில் ஜோடிகளும் அவர்களின் நடன அமைப்பாளர்களும் ஒன்றை தெளிவாக புரிந்துகொண்டிருப்பார்கள் என்று நம்பலாம். அதாவது, எந்த ஜோடிகளின் ஆட்டத்தில் குரூப் டான்ஸர்கள் அதிகம் இடம் பெற்றார்களோ, அவை எடுபடாமல் போய் விட்டன. குரூப் என்பது தொட்டுக்கொள்ள ஊறுகாயாக மட்டுமே இருக்க வேண்டும் என்று தோன்றியது. குரூப் டான்ஸர்கள் துணையின்றி இரண்டு பேர் மட்டுமே ஆடிய 'கணேஷ் - ஆர்த்தி' ஜோடியின் பெர்ஃபாமென்ஸ் நல்ல வரவேற்பைப்பெற்றது. நல்ல வேளையாக நேற்று வடிவேலு இல்லை. இருந்திருந்தால், மார்க் வழங்கப்பட்டதைப்பார்த்து, 'என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு?' என்று கேட்டிருப்பார். ஆம், சிறுபிள்ளைத்தனமாகத்தான் இருந்தது. ஆட்டத்தில் எந்தக்குறையுமில்லாமல் ரொம்ப ரொம்ப பெர்ஃபெக்டாக இருப்பவற்றுகு மட்டுமே 'பத்துக்கு பத்து' கொடுக்கப்படவேண்டும். அப்படி அமைவது ரொம்ப அபூர்வமும் கூட. ஆனால் எவ்வளவோ குறைகள் இருந்த ஆட்டத்துக்கெல்லாம் கூட பத்து மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டன. அதிலும் ரம்பா ரொம்ப மோசம். சும்மா சிரித்துக்கொண்டே சர்வ சாதாரணமாக 'பத்துக்கு பத்து' மதிப்பெண்கள் கொடுத்தார். கலா மட்டுமே கொஞ்சம் ஸ்ட்ரிக்டாக இருந்தார். மோசமாக ஆடியவர்களுக்கு நாலு, ஐந்து... ரொம்ப நன்றாக ஆடியவர்களுக்கு ஏழு, எட்டு இப்படி கொடுத்தால் போட்டியாளர்கள் மத்தியில் பயமும் எச்சரிக்கையும் இருக்கும். முதல் ரவுண்ட் என்பதால், இந்த வாரம் எலிமினேஷன் இருக்காது என்பது எதிர்பார்த்ததுதான். அதுபோல் எலிமினேஷன் இல்லை. ஆனால் வழக்கம்போல இந்த வார ஸ்கோர் அடுத்த வாரத்துடன் சேர்த்துக் கணக்கிடப்படும் என்று கலா மாஸ்டர் அறிவித்தார். ஆகவே இம்முறை குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த முறை அதிகமாக தங்கள் திறமையைக் காண்பித்தால் மட்டுமே தப்பிக்க முடியும். எப்படிப்பட்ட அதிரடிகளோடு அடுத்த வார 'டூயட் ரவுண்டுக்கு' வரப்போகிறார்கள் என்று பார்ப்போம். |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|