Reply to Thread New Thread |
03-26-2012, 07:46 AM | #1 |
|
RRJ_AP_saranyaVedapatasala2.JPG
அறிஞர்கள் கையில் சிக்கி வேதங்கள் படும் பாடு உலகில் எல்லாவித கஷ்டங்களையும் விடப் பெரியது. பல வெளிநாட்டு அரைவேக்காடுகளின் கைகளில் மட்டுமின்றி நம் நாட்டு இடதுசாரிகளின் கைகளிலும் சிக்கி சித்திரைவதைக்குள்ளாகி வருகிறது புனித வேதங்கள். ஆனால் பிராமணர்ககளுக்கு தேவ பாஷையின் ஞானம் எல்லாம் போய்விட்டதால் அவர்களும் ஆங்கிலம் மூலமாக அதுவும் வெளிநாட்டார் மொழி பெயர்ப்புகள் மூலமாகவே படிக்க முடிகிறது. இவை எல்லாம் மொழி பெயர்ப்பு அல்ல,”முழி பெயர்ப்பு”. வேதங்களின் பொருளையே மாற்றி நம்மை எல்லாம் யானை பார்த்த குருடன் போல ஆக்கிவிட்டார்கள். இந்தி மொழி தெரிந்தவர்கள் நிலை கொஞ்சம் பரவாயில்லை. சில ஒரிஜினல் மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன. தமிழர்கள் நிலை பரிதாபம். இந்தியாவுக்கே வராத மாக்ஸ்முல்லரின் மொழி பெயர்ப்புதான் நமக்கெல்லாம் வேதம். உத்தரப் பிரதேச கிராமத்தான் ஒருவன் நியூயார்க்கே போகாமல் அமெரிக்கா பற்றி 20 வால்யூம்ஸ் எழுதினால் யாராவது படிப்பார்களா? ஆனால் நாம் மாக்ஸ்முல்லரைப் படிக்கிறோம்!! சில அமெரிக்க “ப்ருஹஸ்பதிகள்” சமுத்திரம் என்று வேதத்தில் வந்தால் அது வெறும் நீர் நிலைதான் ,கடல் அல்ல என்றும் அயஸ் என்று வந்தால் அது இரும்பு என்றும் ஆகையால் கி.மு 1000 தான் அதன் காலம் என்றும் அஸ்வ என்றால் குதிரை என்றும் ஆகையால் கி.மு 1500க்கு முன் வேதம் உருவாகி இருக்க முடியாது என்றும் கதைக்கிறார்கள். க்ரிஃபித் என்பவரின் ரிக் வேத மொழிபெயர்ப்பை எடுத்தாலோ மூன்று பக்கத்துக்கு ஒரு முறை The meaning is obscure அர்த்தம் புரிபடவில்லை என்று எழுதியுள்ளார். நான் ஷேக்ஸ்பியரின் மாக்பெத் நாடகத்தை மொழிபெயர்த்துவிட்டு 3 பக்கத்துக்கு ஒரு முறை அர்த்தம் விளங்கவில்லை என்று எழுதினால் எனக்கு முட்டாள் பட்டம் கட்ட மாட்டீர்களா? இன்னொரு வெள்ளைக் கார பெண்மணி கையைத் தூகினால் செக்ஸ், காலைத் தூக்கினால் செக்ஸ் என்று மொழி பெயர்த்துள்ளார். மனம் போல மாங்கல்யம். அவர்கள் வாழும் நிலை, மன நிலையைப் பொறுத்து உரையும் மாறுகிறது. வேதத்தின் பல சொற்களுக்கு அர்த்தம் புரியவில்லை என்று கி.மு 800ல் வாழ்ந்த யாசஸ்கரே திணறிப் போனார். வேதங்கள் ஏராளமாகப் போனதால்தானே வியாச பகவானே கவலைப் பட்டு அதை நான்காகப் பிரித்து 4 சீடர்களிடம் கொடுத்தார். நமக்கு 800 வருடங்களுக்கு முன் வாழ்ந்த சாயனர் இவை முஸ்லீம் படை எடுப்பில் அழிந்து விடக் கூடாதே என்ற நல்ல எண்ணத்தில் இதை எழுத்தில் வடித்ததோடு பாஷ்யமும் செய்தார். அவராலும் இதைச் சரியாகச் செய்ய முடியவில்லை. ஏனெனில் சொற்களுக்கு அப்படியே பொருள் செய்யக் கூடாது. மேலும் வேதம் என்பது ரகசிய சங்கேத மொழிகளில் எழுதப்பட்டதால் 2000 ஆண்டுக்கு முன்னரே தமிழ் அறிஞர்கள் அவைகளை நான் மறை (ரகசியம்) என்று அழகாக மொழி பெயர்த்தார்கள். உண்மையில் பழங்காலத்தில் சொற்களுக்கு பல பொருள்கள் உண்டு. சங்க இலக்கியத்தைக் கூட பாஷ்யக்காரர்கள்/ உரைகாரர்கள் இல்லாவிடில் நாம் புரிந்து கொள்ளமுடியாது. ஒரு சில எடுத்துக் காட்டுகள் கூறி விளக்க முயல்கிறேன். பொன் என்றால் தங்கம், இரும்பு, உலோகம் என்று மூன்று பொருள்கள் உண்டு. வள்ளுவர் “தூண்டிற் பொன் மீன் விழுங்கியற்று” என்று பாடுகையில் தூண்டிலில் உள்ள இரும்பு என்றும் “சுடச் சுட ஒளிரும் பொன் போல” என்று பாடும்போது தங்கம் என்றும் கோவிலில் “ஐம்பொன் சிலைகள்” என்னும்போது பஞ்ச உலோகங்கள் என்றும் பொருள் கொள்கிறோம். சங்கப் பாடலில் யானைக்கு பொன் சங்கிலி போட்டதாக வரும் இடத்தில் தங்கம் என்று உரைகாரர்கள் எழுதியுள்ளனர். நான் விதண்டா வாதத்துக்காக இல்லை இது இரும்பே என்றும் வாதாடலாம். பொன் என்பதை எப்படி மாற்றி மாற்றி மொழிபெயர்க்கிறோமோ அப்படித்தான் வேதத்தில் அயஸ் என்பதை செம்பு,இரும்பு இன்னும் பொதுவில் உலோகம் என்றெல்லாம் மொழிபெயர்க்கலாம். ஆனால் நாமாக வேதத்தின் காலம் கி.மு 1000 என்று கொண்டுவிட்டாலோ இரும்பு என்று மட்டும்தாம் மொழி பெயர்ப்போம். இப்படித்தான் காளிதாசரையும் குப்தர் காலம் என்று வெள்ளக்காரர்கள் முடிவு செய்து எழுதிவந்தார்கள். நான் சங்கப் பாடல்களைக் கொண்டு அவரது காலம் கி.மு.முதல் நூற்றாண்டு என்று நிரூபித்துள்ளேன். மா என்ற சொல்லுக்கு பல பொருள் உண்டு.பெரிய, கறுப்பு, மிருகம் இது போல நிறைய அர்த்தங்கள் உண்டு. அது வரும் இடத்தைப் பொருத்து எந்த மிருகத்தின் பெயரையும் அத்துடன் இணைக்கலாம். இது போலத்தான் அஸ்வ என்ற சொல்லும். வேகமாகச் செல்லும் எதற்கும் பொருந்தும். குதிரை என்று மட்டுமே பொருள் கொள்ள வேண்டியதில்லை. தமிழ், வட மொழி இலக்கியங்களில் எங்குமே இல்லாத ஆரிய திராவிட வாதத்தைப் புகுத்தி அதற்கேற்றார் போல எல்லா விஷயங்களுக்கும் வியாக்கியானம் செய்து நம்மை எல்லாம் குருடன் ஆக்கிவிட்டார்கள். சிந்து சரஸ்வதி சமவெளி நாகரீகத்தை நாம் சரியாக அணுக முடியாதவாறு தடுத்துவிட்டார்கள். இந்திரன் என்ற சொல்லுக்கு இவர்கள் தவறாக அர்த்தம் செய்தது பெரிய தவறு. சிங்கத்தை ம்ருகேந்திரன், கருடனை ககேந்திரன், யானயில் சிறந்த யானையை கஜேந்திரன், மனிதர்களில் சிறந்தவரை நரேந்திரன், தேவர்களில் சிறந்தவரை தேவேந்திரன் ,அரசர்களில் சிறந்தவரை ராஜேந்திரன் என்று சொல்கிறோம். இந்த முன் ஒட்டு (ப்ரீ பிக்ஸ்) இல்லாவிடிலும் கூட இடத்தைப் பொருத்து நாம் அர்த்தம் கொள்ளமுடியும். மிருகமா, பறவையா, மனிதனா என்று சொல்ல வேண்டியதில்லை.இதை எல்லாம் வெள்ளைக்காரர்கள் தாறுமாறாக மொழி பெயர்த்து விட்டார்கள். இந்திரனை ஏறு (ரிஷபம்) என்று அழைப்பதைப் போலவே சங்கத்தமிழ் நூல்களில் மள்ளர் ஏறு (மன்னர்களில் உயர்ந்தோன்), குட்டுவர் ஏறு, புலவர் ஏறு (புலவர்களில் சிறந்தோன்), பரதவர் போர் ஏறு, புயல் ஏறு (பயங்கர மழை), உறுமின் ஏறு (பயங்கர இடி) என்று பதிற்றுப் பத்தில் பயன்படுத்தியுள்ளனர். வேதத்தை மொழிபெயர்த்தது போல ஏறு என்று வரும் இடமெல்லம் காளை மாடு என்று மொழி பெயர்த்தால் அர்த்தம் அனர்த்தம் ஆகிவிடும். வேதத்தை மொழி பெயர்த்த வெளிநாட்டார் இந்த சிதைக்கும் வேலையைச் செய்துள்ளனர். இப்பொழுது வேதம் பட்ட பாட்டை திருக்குறள் படுகிறது. பகுத்தறிவுகளின் கைகளில் அது சிக்கிவிட்டது! இந்தியாவுக்கே வராத மாக்ஸ்முல்லரை நம்புவதைவிட உபன்யாசகர்களையும் சங்கராசார்யார்களையும் நம் ஊர் வேத பண்டிதர்களையும் நம்புவோமாக. சம்ஸ்கிருதத்தை ஓரளவாவது படித்து இந்த தீபத்தை வருங்கால சந்ததியினர்க்கு ஒளி ஊட்ட எடுத்துச் செல்வோமாக. யூதர்கள் ஹீப்ரூ மொழியையும் யூத மதத்தையும் இஸ்ரேல் என்ற ஒரு நாட்டையும் நமது காலத்திலேயே புனருத்தாரணம் செய்திருப்பதை அறிந்தும் நாம் வாளாயிருப்பது நியாயமா? ************** |
|
03-29-2012, 03:08 PM | #2 |
|
திரு. சுவாமிநாதன்,
நீங்கள் கூறியதை ஒப்புக் கொ்கிறேன். ஆனால் ஒரு திருத்தம். மாக்ஸ்முல்லர் இந்தியாவுக்கு 'வராமலேயே' வேதத்தை 'முழிபெயர்த்ததைப்' பெரிது படுத்த வேண்டியதில்லை. அவருக்கு முன்பு ஐரோப்பாவில் பல தலைமுறைகளாக வேத ஆராய்ச்சி நடைபெற்றுவந்தது. அந்த நூல்களின் அடிப்படையில் தான் அவர் ஆராய்ச்சி செய்தார். மூல ஐரோப்பிய ஆசிரியர்கள் இந்தியாவுக்கு வந்து தான் ஸம்ஸ்கிருதமும் வேதமும் கற்றார்கள். அவர்களுக்கு ஸம்ஸ்கிருதம் கற்பித்தது நம்மூர்ப் பண்டிதர்கள் தான். ஐரோப்பியர்கள் தங்கள் அறிவியல் பூர்வமான அணுகுமுறையைக் கொண்டு அதனுள்ளே ஆழமாக்ச் செல்ல முடிந்தது. நம்மவர் அந்த முறையை இன்னும் கற்கவில்லை. புதிய முறைகள் தேவை இல்லை. பழைய முறையிலேய தான் வேதம் கற்கப்பட வேண்டும் என்று நீங்கள் சொல்லலாம். பொருள் தெரியாமல் மொந்தை உரு போட்டு ஒப்புவித்து அந்த ஒலியினாலேயே உலகம் க்ஷேமமாக இருக்கும் என்று நீங்கள் நம்பினால் நான் உங்களோடு வாதத்திற்கு வரவில்லை. வேத மந்திரங்களுக்குப் பொருள் உண்டு. அந்தப் பொருளின் சிறப்பினால் தான் அது போற்றுதலுக்கு உரியதாக இருந்து வருகிறது என்று தான் நம்மவர்கள் நினைத்து வந்திருக்கிறார்கள் என்பதற்கு ஸாயணர் முதலானோர் எழுதிய உரைகளே சான்று. நீங்கள் கூறியபடி யாஸ்கரும் ஸாயணரும் உண்மையான பொருள் தெரியாமல் தடுமாறும் இடங்கள் பல உண்டு. ஸாயணர் தன் மனம் போன போக்கில் பொருள் கொண்ட இடங்களும் உண்டு. உதாரணமாக ரிக் 6-1-1 இல் क्षैतवत् यशः என்பதற்கு அகராதிப் பொருள் 'அரசனைப் போலப் புகழ்' என்று தான் வருகிறது. 'சமித்துகளைக் கொண்டு அளிக்கப்பட்ட ஆஹுதியின் மேல்' என்று ஸாயணர் கூறுகிறார். துளிக்கூட சம்பந்தமில்லை. மேற்கண்ட சொற்கள் வேதத்திலோ அல்லது பிற்கால இலக்கியங்களிலோ எங்கும் சமித்து ஆஹுதி என்ற பொருளில் ஆளப்படவில்லை. தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல் கூட இந்த சொற்களுக்கு இடையே இப்படிப்பட்ட ஒரு தொடர்பை உண்டாக்க முடியவில்லை. வேறு சில இடங்களில் ஸாயணர் கூறியது அவருக்கே புரியுமோ என்பதே சந்தேகம். அத்தகைய இடங்களில் கிரிபித் மட்டுமல்லாமல் இந்திய ஆசிரியர்கள் கூட புரியவில்லை என்று தான் எழுதி இருக்கிறார்கள். எப்படி இருந்தாலும் வேதத்தை ஆராய்ச்சி செய்ய ஐரோப்பியரும் அமெரிக்கரும் நமக்குத் தூண்டுதல் கொடுத்து இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. அவர்கள் கூறியதை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் சொந்தமாக ஆராய்ச்சி செய்யும் இந்தியர்கள் பலர் உருவாக வேண்டும். பிற நாடுகளில் இண்டாலஜிக்கு இருக்கும் வரவேற்பு இந்தியாவில் இல்லை என்பது வருத்தத்திற்கு உரியதே. |
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|