Reply to Thread New Thread |
03-01-2007, 09:11 PM | #1 |
|
ஜ்வரஹரேஸ்வரர் - காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலருகே, பாண்டவ தூதப் பெருமாள் கோவில் போகும் வழியில் உள்ள சிவாலயம்.
சிறப்பு :- மூலத்தானத்திலேயெ ஐந்து ஜன்னல்கள் கொண்ட விநோத அமைப்பு. இத்தலத்தை வலம் வருபவர்களுக்கு, உஷ்ணத்தால் வரும் நோய்களும், மார்பு சம்மந்தமான நோய்களும் அகலும். தற்சமயம் இரு கால பூஜை நடக்கிறது. |
|
03-02-2007, 09:18 PM | #2 |
|
பொன்விளைந்தகளத்தூர், பொன்பதர்கூடம் :- இவ்விரு தலங்களும் ராமயணத்தோடு தொடர்புடையதாக கருதப்படுகிறது.
ராவணன் இறந்தபின், மண்டோதரி ராமபிரானிடம், ராமா என் கணவனுக்கு தண்டனை கொடுத்தாய் சரி, நான் உனக்கு என்ன செய்தேன்? எனக்கும் கணவனை இழந்த தண்டனையைக் கொடுத்து விட்டாயே என கேட்டு விட்டு, ராமா எனக்கு எதுவும் வேண்டாம், நீ வைகுண்டத்திலே எப்படி சேவை ஸாதிக்கிறாயோ அது போல எனக்கு உன் விஸ்வரூப் தரிசனத்தைக் கொடு என வேண்டியதற்கு இணங்க, ஸ்ரீ ராமபிரான் சதுர்புஜத்துடன் விஸ்வரூப் காட்சி கொடுத்த தலம் பொன் பதர் கூடம். வேறு எங்கும் ராமபிரானை நான்கு கரங்களோடு தரிசிக்க முடியாது. ருத்ராங்கோவில் - எல்லோரும் திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரரை மட்டுமே தரிசித்திருப்பர். வேதகிரீஸ்வரருக்கும் முற்பட்ட, சிவாலயமாம் ருத்ராங்கோவிலைப் பற்றி தெரிந்ததை சொல்லுவோம். வழிபாட்டு முறைப்படி முதலில் இவரை தரிசித்தபின் தான், வேதகிரீஸ்வரரைத் தரிசிக்கவேண்டும். ஒரு முறை கருடாதிரூடராய் திருமால், ஈசனைக் காண வந்த வேளையில், கருடாழ்வார் வெளியில் நிற்க, திருமால் உள்ளே சென்று வருவதற்குள், நந்தியானவர் தனது மூச்சுக் காற்றை கருடனின் மீது வீச, கருடனின் இறக்கைகள் உதிர்ந்து விட்டன. இதைக் கண்ட திருமால் ஈசனிடம் முறையிட்டார். ஈசனும் நந்தியைப் பார்த்து, தவறுக்கான தண்டனையாய், பூமிக்குள் போகும் படி உத்தரவிட்டாராம். உடனே நந்தியின் உடல் பூமிக்குள் இறங்க ஆரம்பித்து விட்டது. கழுத்துவரை போன பிறகு ஈசன், திருமாலின் வேண்டுகோளுக்கிணங்க அப்படியே இரு என ஆணையிட்டாராம். இன்றும் இவ்வாலயத்தில், நந்தியின் புதைந்த திருமேனியைக் காணலாம். இத்தலத்தை தரிசித்தால், கோடி ருத்திரர்களை ஒரு சேர வலம் வந்த புண்ணியத்தைப் பெறலாம். வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு கிழக்கே அரை கிலோமீட்டரில் ருத்ராங்கோவில் உள்ளது. சமீபத்தில் குடமுழுக்கு நடந்திருக்கிறது. |
|
03-02-2007, 09:20 PM | #3 |
|
முக்கூடல்:- தெய்வவழிபாட்டில் பேதம் இல்லை என காட்டும் ஒரு அதிசயத் தலம்.
ஒரு பெருமாள் பக்தர், இவ்வூருக்கு வந்தாராம். ஊர் மக்கள் அவரை வரவேற்று உபசரித்தார்கள். அவர் தினமும் ஒரு பெருமாள் கோவில் அல்லது பெருமாள் தரிசனம் இல்லாமல் உண்வு உட்கொள்ள மாட்டார். ஆகவே, அவர் ஊர் காரர்களிடம் அவ்வூரில் ஏதேனும் பெருமாள் கோவில் இருக்கிறதா? என வினவினார். ஊர் மக்களும், ஊர் எல்லையில் ஒரு கோவிலிருப்பதாகவும், ஆனால் யாருமே அங்கு போனதில்லை என கூறினார்கள். பெருமாள் பக்தரும் ஊர் எல்லைக்குச் சென்று கோவிலைப் பார்த்தார். உள்ளே நுழைந்தவர், போன வேகத்தில் கோபத்தோடு திரும்பி வந்தார். ஊர் மக்களைப் பார்த்து, நான் பெருமாளைத்தவிர யாரையும் வணங்கமாட்டேன் என்று கூறியும், நீங்கள் என்னை சிவன் கோவிலுக்குள் போக வைத்து விட்டீர்களே என கடும் கோபம் கொப்பளிக்க கத்தினார். ஊர் மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தும் பக்தரின் கோபம் அடங்கவில்லை. ஊர் மக்கள் எவ்வள்வோ சொல்லிப் பார்த்தார்கள், கேட்பதாய் இல்லை. அப்பொழுது, கும்பலிலிருந்து ஒருவன், பெருமாள் பக்தரை நெருங்கி, ஐயா நீங்கள் போனது, திருமாலின் ஆலயம் தான். சரியாக பார்க்காமல், ஊர் மக்களை கோபித்தால் எப்படி? வாருங்கள் நான் அழைத்துப் போகிறேன் என மீண்டும் பக்தரை அழைத்துச் சென்றான். கோவிலுக்குள் நுழைந்து உள்ளே போய் பார்த்தால், ஆவுடையாரில் பெருமாளின் நின்ற திருக்கோலத்தை தரிசித்தார். அவர் கண்களை அவராலேயே நம்ப முடியவில்லை. சிவன் கோவில் என்று நினைத்தால் இது பெருமாள் கோவிலாய் எப்படி மாறியது? என அதிர்ச்சியடைந்தார். ஆனால் அது சிவன் கோவில் தான். சிவனுக்கான ஆவுடையாரில் பெருமாள் காட்சி கொடுத்து அரியும் சிவனும் ஒண்ணு என போதித்த தலம் தான் முக்கூடல். சிறப்பு :- பெருமாள் சன்னதியில் விபூதி தரும் அரிய காட்சியை இங்கு காணலாம். காஞ்சிபுரம் தாண்டி காவேரிப்பாக்கத்தில் 2 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது. __________________ |
|
03-02-2007, 09:20 PM | #4 |
|
நெற்குணப்பட்டு கந்தசாமி கோவில் - தொண்டை மண்டலத்தில் கடற்கரை நகரமாம் கல்பாக்கம் அருகே மலைகள் சூழ இருக்கும் எழில் கொஞ்சும் திருத்தலம். சிதம்பரம் சுவாமிகள் திருப்போரூருக்கு போவதற்கு முன், இத்தலத்து முருகனிடம் உத்தரவு பெற்றுச் சென்றாராம். ஒரு பெரிய கல்வெட்டு ஒன்று வெட்டவெளியில் கிடக்கிறது.
இங்கு சன்யாசி மலை என்று ஒரு குன்று இருக்கிறது. இங்கு ஒரு லிங்கம் மலையுச்சியில் உள்ளது. பௌர்ணமிக்கு மலை வலம் வருதல் சிற்ப்பு. சித்த்ர்கள் வாழும் மலை. கல்பாக்கம் - மதுராந்தகம் சாலையில் இத்தலம் உள்ளது. சுமாரான கிராமத்து சாலை. பேருந்து உள்ளது. |
|
03-02-2007, 09:22 PM | #5 |
|
வளத்தொட்டி - பந்தணைநல்லூர் அருகே இந்த ஊரில் யார் குழந்தைவேண்டி வருகிறார்களோ, அவர்களுக்கு இங்கிருக்கும் அம்பிகையின் பேரருளால் நல்ல மகவு கிடைக்கிறது. இத்தலத்தில் பார்வதி தேவியானவள், எம்பிரான் முருகனை தொட்டில் போட்டு தாலாட்டியதால், முருகன் வளர் தொட்டி என பெயர் பெற்ற இத்தலம் தற்காலத்தில் "விளத்தொட்டி" என்று அழைக்கப்படுகிறது.
இவ்வூரில் பிறக்கும் குழந்தைகளுக்கு தொட்டில் போடும் வழக்கம் கிடையாது. யார் வீட்டிலும் தொட்டிலும் கிடையாது. திருச்சிற்றம்பலம் எனும் தலமும் இதன் அருகே தான் அமைந்திருக்கிறது. வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து மணல்மேடு வழியாய் குடந்தை போகும் பேருந்தில் மணல்மேட்டிலிருந்து 10 கி.மீட்டர் தூரம். குடந்தையிலிருந்து வருகிறவர்களாக இருந்தால் பந்தணைநல்லூரிலிருந்து மணல்மேடு சாலையில் 3 கி.மீட்டர் __________________ |
|
03-02-2007, 09:24 PM | #6 |
|
ஸ்ரீநிவாஸமங்காபுரம் - திருப்பதியிலிருந்து மதனப்பள்ளி போகும் சாலையில் "கல்யாணி டேம்" அருகே இத்தலம் உள்ளது. திருமலைக்கும் இத்தலத்திற்கும் தொடர்பு உண்டு. இங்கும் திருமலைபோலவே வழிபாடுகலெல்லாம் குறைவின்றி நடைபெறுகிறது.
இங்கிருந்து ஒரு மலைபாதை திருமலைக்குச் செல்கிறது. அலிபிரியிலிருந்து ஏறுவதற்கு 3 மணி நேரம் ஆகும் என்றால் இங்கிருந்து 1 மணி நேரத்தில் செல்லலாம். ஆனால் வெளிச்சத்தோடு ஏறவேண்டும். அடர்ந்த காட்டுப் பாதை. தார் சாலை உள்ளது. திருமலை ஆனந்த நிலையத்தின் பின்னால் போய் இந்த பாதை சேருகிறது. ஆன்மிக குளிர்ச்சியான அனுபவம். __________________ |
|
03-02-2007, 09:26 PM | #7 |
|
கோட்டை ஈஸ்வரன் கோவில் :- கோவை மாவட்டத்திலே முகமதிய சகோதரர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான கோட்டைமேடு (பெயரை சரி செய்து கொள்ளவும்) பகுதியிலே உள்ள புராதன சிவாலயம். அடியேன் அங்கு சென்ற வேளையில் நம்மை ஒரு முகமதிய சகோதரர் வரவேற்று அத்தலத்தின் மகிமையை எடுத்துரைத்தார். இன்றும் அப்பகுதி முஸ்லீம்கள் இக்கோவிலுக்கு உபயம் செய்து உற்சவங்கள் குறையாமல் நடத்துவதை அப்பகுதி மக்கள் பெருமையோடு சொல்லக்கேட்டேன்.
நல்ல க்ருங்கல் திருப்பணி. இன்றை சூழலில் சகிப்பு தன்மை வளர ஒருமுறை கோட்டை ஈசனை தரிசித்து வரலாமே? கோவை கோணியம்மன் கோவிலருகே இத்தலம் உள்ளது. __________________ |
|
03-02-2007, 09:28 PM | #8 |
|
திருக்கச்சூர் - ஆலக்கோவில் - சுந்தரமூர்த்திநாயனார் திருக்கழுக்குன்றத்தை தரிசித்து இத்தலத்திற்கு அகால வேளையில் வந்த பொழுது, பசி மேலிட அவருடன் வந்த அடியார்கள் வருந்திய பொழுது, ஈசன் வீடு வீடாக சோறு பெற்று அடியார்களின் பசி போக்கிய தலம். இரண்டு சிவாலயங்கள் உள்ள தலம்.
விருந்திட்டீஸ்வரர் (கீழ்கோவில்) மருந்திட்டீஸ்வரர்(மலைக்கோவில்) சிறப்பு: 1.இத்தலத்தை தரிசித்தால் பசிப்பிணி வாராமல் சந்ததிகள் செழிக்கும் 2. மலைக்கோவிலில் இருக்கும் மண்ணை மருந்தாக உண்டு புற்று நோய் நீங்கியோர் ஏராளம். சிங்கபெருமாள்கோவிலிலிருந்து ஸ்ரீ பெரும்புதூர் பாதையில் 5 கி.மீ தொலைவு. சித்திரா பௌர்ணமி அன்று மஹா விசேஷ திருநடனம் நடைபெறும். தியாகராஜ க்ஷேத்திரங்களில் இத்தலமும் விசேஷமானது. (திருவாரூர்,திருவான்மியூர்,திருவொற்றியூர்,திருக்கச ்சூர்) __________________ |
|
03-02-2007, 09:29 PM | #9 |
|
ஏரிக்காத்த ராமர் :_ இந்த பெயரைக் கேட்டாலே நமக்கு மதுராந்தகம் ஞாபகத்திற்கு வரும். ஆனால் இன்னொரு ஏரிக்காத்த ராமர் "திருநின்றவூர்" தலத்தில் இருக்கிறது. கடல் போன்று பரந்து விரிந்து கிடக்கும் ஏரியைக் காக்க இராமபிரான் ஏரியின் கரைகளைக் காத்து காவல் நிற்கிறார். பக்தவத்ஸலப் பெருமாள் கோவிலின் பின்புறம் உள்ள ஏரிக்கரையில் சேவை சாதிக்கிறார். இவரை தரிசித்தபடி தேர் முட்டியில் சிறிய திருவடியாம் அனுமன் கை குவித்து தரிசிக்கிறார்.
தினமும் சில மணிநேரம் மட்டுமே சன்னதி திறந்திருக்கும். பூசலார் நாயனார் வாழ்ந்த தலம். 108 திவ்ய தேசத்தில் 58வது தலம். திருநின்றவூர் ரயில் நிலையத்திலிருந்து கோவில் 1-1/2 கி.மீட்டர் தொலைவு. __________________ பாடகச்சேரி ஸ்வாமி சிவாலயம் - புராதனமான சிவாலயம் லட்சக்கணக்கான மக்கள் சென்று வரும் ப்ரதான சாலையில் சென்னையில் அமைதியாய் இருக்கிறது. அதிலும் குடந்தை பாடகச்சேரி ஸ்வாமிகள் திருப்பணி கண்ட ஆலயம். கிண்டி ரயில் நிலையத்திற்கு நுழைபவர்கள் கண்ணில் தவறாமல் படும் ஆலயம் அண்ணா சாலையில் பாலத்திற்கு பக்கவாட்டில் இருக்கிறது. தரிசித்தவர்கள் பாக்கியவான்கள். இக்கோவிலிலிருந்து 50 அடி தூரத்தில் ஷீரடி பாபா மந்திர் இருக்கிறது. __________________ |
|
03-02-2007, 09:30 PM | #10 |
|
அர்த்த ராத்திரியில் கானா பாட்டு காசட் கடைகளுடன் சகல விதமான உணவுகளும் கிடைக்கும் ரோட்டோரக் கடைகள் என இருக்கும் மாமண்டூரில் பேருந்தில் பயணம் செய்யும் யாவரும் இறங்கியிருப்போம்.
ஆனால் இவ்வூர் ஒரு புனிதத் தலம் என்பது ஆச்சர்யமானது. மண்டூக மஹரிஷி ஈசனை நோக்கி மிகப்பெரிய தவத்தை இயற்றி மோக்ஷம் பெற்றாராம். அவர் வழிபட்ட சிவன் பெரிய திருக்குளத்தோடு இவ்வூரின் மேற்கே உள்ளது. மா (பெரிய) மண்டூர். இங்கிருக்கும் பிச்சீஸ்வரரை தரிசித்தால் எத்தனை பெரிய துன்பமாய் இருந்தாலும் விலகி விடுமாம்.வழி:- தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு பாலாற்று பாலம் தாண்டி சிறிது தூரத்தில் வலக்கைப் பக்கம் திரும்பும் ஊர் சாலையில் சென்றால் 1/4 கி.மீட்டரில் கோவிலிருக்கிறது. மாணிக்க விநாயகரின் தரிசனம் கொள்ளை அழகு. பூத்துக் குலுங்கும் பல்லாயிரக்கணக்கான தாமரைகளைக் கொண்ட திருக்குளம் மனதை வசீகரிக்கும். __________________ |
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|